பாஜகவின் கைக்கூலி சந்திரசேகர ராவ்.... கடுமையாக சாடும் காங்கிரஸ்...!

By vinoth kumarFirst Published Dec 30, 2018, 10:23 AM IST
Highlights

மீண்டும் பாஜக ஆட்சி அமைவதற்காகவும் எதிர்க்கட்சிகள் காங்கிரஸ் தலைமையில் ஓரணியில் திரள்வதையும் தடுப்பதற்காகவே தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சித் தலைவரும் தெலங்கானா முதல்வருமான சந்திரசேகர ராவ் முயற்சி மேற்கொள்வதாக காங்கிரஸ் கட்சி அவருக்கு எதிராக அஸ்திரங்களை வீசத் தொடங்கியிருக்கிறது.

மீண்டும் பாஜக ஆட்சி அமைவதற்காகவும் எதிர்க்கட்சிகள் காங்கிரஸ் தலைமையில் ஓரணியில் திரள்வதையும் தடுப்பதற்காகவே தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சித் தலைவரும் தெலங்கானா முதல்வருமான சந்திரசேகர ராவ் முயற்சி மேற்கொள்வதாக காங்கிரஸ் கட்சி அவருக்கு எதிராக அஸ்திரங்களை வீசத் தொடங்கியிருக்கிறது. 

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் காங்கிரஸ் தலைமையிலான அணி சேர்க்கை அந்தக் கட்சிக்கு தேசிய அளவில் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தியது. மூன்று மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்ற பிறகு பாஜக எதிர்ப்பு அணிக்கு காங்கிரஸ் கட்சியே தலைமை ஏற்க முடியும் என்பதையும் நிரூபித்தது. அதற்கேற்ப பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியை திமுக முன்மொழிந்தது. 

இந்தச் சூழ்நிலையில்தான் காங்கிரஸ், பாஜக அல்லாத அணி என்ற பழைய கோஷத்தை தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் கையில் எடுத்தார். எதிர்க்கட்சித் தலைவர்களையும் அவர் சந்திக்கத் தொடங்கியிருக்கிறார். அவரது இந்த முயற்சியை காங்கிரஸ் கட்சி தற்போது விமர்சிக்கத் தொடங்கியிருக்கிறது. “சந்திரசேகர் ராவ் முயற்சி அனைத்துமே பாஜகவுக்கு மறைமுகமாக உதவுவதற்குத்தான். காங்கிரசுடன் மாநிலக் கட்சிகள் எதுவும் சேர்ந்துவிடக் கூடாது என்பதற்காக சந்திரசேகர ராவ் செய்கிறார். 

தொடக்கத்திலிருந்தே பாஜகவுக்கு எதிராக அணி சேர்க்கை நடப்பதை அவர் விரும்பவில்லை. பாஜகவின் ‘பி’ டீம்தான் தெலங்கானா ராஷ்டிரிய கட்சி” என்று கடுமையாக சாடியிருந்தார் காங்கிரஸ் எம்.பி. ராஜீவ் கவுடா. தமிழகத்தில் அதிமுக அரசு பாஜகவுக்கு எப்படியெல்லாம் இணக்கமாக செயல்படுகிறாதோ, அதேபோல சந்திரசேகர ராவும் பாஜகவுக்கு இணக்கமாக செயல்பட்டே வந்திருக்கிறார் என்றும் காங்கிரஸ் கட்சியினர் கூறுகிறார்கள். அதற்கு பல உதாரணங்களையும் அந்தக் கட்சியினர் அடுக்குகிறார்கள். இதோ சில உதாரணங்கள். 

1. மத்திய அரசு 15-வது நிதிக்குழு அமைத்தபோது, அதை கேரள அரசு கடுமையாக எதிர்த்தது. இந்த எதிர்ப்பை ஒருங்கிணைக்கும்வகையில் கேரள அரசு, தென்னிந்திய மாநிலங்களின் நிதி அமைச்சர்கள் மாநாட்டைத் திருவனந்தபுரத்தில் நடத்தியது. இந்த மாநாட்டில் பாஜகவுடன்  நெருக்கமாக இருக்கும் தமிழ்நாடு மற்றும் தெலங்கானா மாநிலங்களின் நிதி அமைச்சர்கள் மட்டும் கலந்துகொள்ளவில்லை. 

2. மாநிலங்களளையில் பாஜகவுக்கு தனி பெரும்பான்மை கிடையாது. அந்த அவையில் துணைத் தலைவருக்கான தேர்தல் நடைபெற்றபோது எதிர்கட்சிகள் சார்பில் வேட்பாளர் நிறுத்தப்பட்டார். தேர்தலில் பாஜகவுக்கு சாதகமாக அதிமுக வாக்களித்ததைப்போல சந்திரசேகர ராவ் கட்சியும் வாக்களித்தது. பாஜக, காங்கிரஸ் கட்சிகளிடம் விலகி இருப்பதைப்போல காட்டிக்கொண்டு வாய்ப்பு கிடைக்கும்போது பாஜகவை ஆதரிப்பது அவரது உத்தி என்கிறார்கள் காங்கிரஸ் கட்சியினர். 

3. கர்நாடகாவில் குமாரசாமி பதவியேற்புபோது, விழாவில் பங்கேற்க சந்திரசேகர ராவுக்கு அவருக்கு அழைப்புவிடுத்தார் குமாரசாமி. பாஜகவுக்கு எதிரான நிகழ்வு என்பதாலேயே இந்த விழாவில் பங்கேற்பதைத் தவிர்த்தார் சந்திரசேகர் ரா.

4. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட டெல்லி மாநில அரசு வழிகாட்டுதல்படியே துணை நிலை ஆளுநர் செயல்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. மாநில உரிமைகளைப் பற்றி பெரிய அளவில் பேசும் மாநில கட்சிகள் இந்த உத்தரவை வரவேற்றன. மத்திய அரசுக்கு எதிராக வந்த இந்தத் தீர்ப்பு பற்றி மாநில கட்சியை நடத்திவரும் சந்திர சேகர ராவ் ஒரு வார்த்தைக்கூட பேசவில்லை.

5. தெலங்கானா சட்டப்பேரவை கலைத்து முன்கூட்டியே தேர்தல் நடத்த வேண்டும் என்று சந்திரசேகர ராவ் முடிவு செய்தார். அதுவும்  4 மாநில சட்டப்பேரவை தேர்தலை அறிவிப்பதற்கு ஒரு மாதத்துக்கு முன்பாக  இந்த முடிவை எடுத்தார். மோடியைச் சந்தித்து பேசிய பிறகு ராஜினாமா செய்தார் சந்திரசேகர ராவ். மிகக் குறுகிய காலத்தில் தெலங்கானாவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடத்த மத்திய அரசும் அனுமதி அளித்தது. இந்த நிகழ்வுகளையெல்லாம் கூட்டிப் பார்த்தால், சந்திரசேகர ராவ் பாஜகவின் ‘பி’ டீம்தான் எனக் காங்கிரஸ் கட்சியினர் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் உண்மையோ?

click me!