மத அடிப்படையிலான இடஒதுக்கீடு: காங்கிரஸுக்கு பிரதமர் மோடி சவால்!

Published : May 01, 2024, 08:33 PM IST
மத அடிப்படையிலான இடஒதுக்கீடு: காங்கிரஸுக்கு பிரதமர் மோடி சவால்!

சுருக்கம்

மத அடிப்படையிலான இடஒதுக்கீடு வழங்க மாட்டோம் என்று எழுத்துப்பூர்வமாக காங்கிரஸ் உத்தரவாதம் அளிக்க முடியுமா என பிரதமர் மோடி சவால் விடுத்துள்ளார்

நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இரண்டு கட்ட வாக்குப்பதிவு முடிந்துள்ள நிலையில், அடுத்தடுத்த வாக்குப்பதிவு வரும் வாரங்களில் நடைபெறவுள்ளது. இதற்காக நாடு முழுவதும் அரசியல் கட்சியினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே, பட்டியல் சாதிகள் (எஸ்சி), பழங்குடியினர் (எஸ்டி) மற்றும் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (ஓபிசி) வழங்கப்படும் இடஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியதாக வீடியோ ஒன்று இணையத்தில் வைரலானது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அது போலி வீடியோ எனவும், அமித் ஷா பேசியது திருத்தி எடிட் செய்யப்பட்டுள்ளதாகவும் பாஜக விளக்கம் அளித்தது. இதுகுறித்து காவல்நிலையங்களிலும் புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன.

இதுதொடர்பாக விளக்கம் அளித்த அமித் ஷா, “இந்த விஷயங்கள் ஆதாரமற்றவை, உண்மையற்றவை. SC, ST மற்றும் OBCகளுக்கான இடஒதுக்கீட்டை பாஜக எப்போதும் ஆதரிக்கிறது. அச்சமூகங்களின் பாதுகாவலராக எப்போதும் தனது பங்கை பாஜக வகிக்கும் என்பதையும் நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.” என உறுதியளித்துள்ளார்.

அயோத்தி ராமர் கோயிலில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு சுவாமி தரிசனம்!

இந்த நிலையில், மத அடிப்படையிலான இடஒதுக்கீடு வழங்க மாட்டோம் என்று எழுத்துப்பூர்வமாக காங்கிரஸ் உத்தரவாதம் அளிக்க முடியுமா என பிரதமர் மோடி சவால் விடுத்துள்ளார்.

குஜராத் மாநிலம் பனஸ்கந்தா மாவட்டத்தில் உள்ள தீசா நகரில் நடைபெற்ற பேரணியில் பேசிய பிரதமர் மோடி, தானும் பாரதிய ஜனதாவும் இருக்கும் வரை, எஸ்சி/எஸ்டி/ஓபிசிகளுக்கு வேலை மற்றும் கல்வியில் இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று கூறினார். பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினர் பாதுகாக்கப்படுவார்கள் எனவும் அவர் உறுதியளித்தார்.

 

 

தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, மதத்தின் அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க காங்கிரஸ் விரும்புவதாக குற்றம் சாட்டினார். அத்துடன், மத அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க மாட்டோம் என்றும், பட்டியல் சாதிகள், பழங்குடியினர் மற்றும் பிற பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டில் தலையிட மாட்டோம் என்றும் காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணி கட்சிகள் எழுத்துப்பூர்வமாக நாட்டு மக்களிடம் உத்தரவாதம் அளிக்க முடியுமா எனவும் பிரதமர் மோடி சவால் விடுத்துள்ளார்.

காங்கிரஸின் இளவரசர் என ராகுல் காந்தியை குறிப்பிட்டு, அவரது கட்சி மற்றும் அதன் ஆதரவாளர்களுக்கு நான் சவால் விடுகிறேன். மதத்தின் பெயரால் இடஒதுக்கீட்டைத் தவறாகப் பயன்படுத்த மாட்டோம் எனவோ, அரசியலமைப்பில் விளையாட மாட்டோம் எனவோ, மதத்தின் பெயரால் இடஒதுக்கீடு வழங்க மாட்டார்கள் எனவோ அவர்களால் உத்தரவாதம் அளிக்க முடியுமா எனவும் பிரதமர் மோடி கேள்வி எழுப்பினார். மேலும், தாம் இருக்கும் வரை, யாரையும் இட ஒதுக்கீடு விஷயத்தில் விளையாட அனுமதிக்க மாட்டேன் என்றும் பிரதமர் மோடி உறுதியாக கூறினார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

மீண்டும் தாக்குதல் நடத்தினால் கடுமையான பதிலடி.. பாக். முப்படை தளபதி அசிம் முனீர் பம்மாத்து!
இண்டிகோ விமான சேவை சீராகிவிட்டது! 5% விமானங்களுக்கு செக் வைத்த மத்திய அரசு!