உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தி ராமர் கோயிலில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு சுவாமி தரிசனம் செய்தார்
உச்ச நீதிமன்ற திர்ப்பின் அடிப்படையில் உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டுள்ளது. இக்கோயிலின் கும்பாபிஷேக விழா கடந்த ஜனவரி மாதம் நடைபெற்றது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற அந்த விழாவில் கருங்கல்லில் செதுக்கப்பட்ட ஐந்து வயதுடைய குழந்தை ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது.
குழந்தை ராமர் சிலையை பிரதமர் மோடி பிரதிஷ்டை செய்து திறந்து வைத்தார். குழந்தை ராமருக்கு பிரதமர் மோடி முதல் பூஜை செய்து தீபாராதனை காட்டி வழிபாடு செய்தார். இதையடுத்து, அயோத்தி குழந்தை ராமர் கோயில் பொதுமக்களின் தரிசனத்துக்காக திறக்கப்பட்டது. நாட்டின் முக்கிய இந்து வழிபாட்டு தலமாக ராமர் கோயில் மாறியுள்ளது.
முன்னதாக, அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்ள பல்வேறு தரப்பினருக்கும் ராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்ர அறக்கட்டளை சார்பாக அழைப்பிதழ் அனுப்பப்பட்டன. அதனையேற்று, பாஜக அமைச்சர்கள், அரசியல்வாதிகள், திரைப்பிரபலங்கள், தொழிலதிபர்கள் என ஏராளமானோர் கோயில் திறப்பு விழாவில் கலந்து கொண்டனர்.
ஆனால், நாட்டின் முதன்மை பிரஜையான குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு கலந்து கொள்ளவில்லை. பழங்குடியின சமூகமான அவருக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என ஒரு சாராரும், அழைப்பு விடுக்கப்பட்டும் ஏற்கனவே திட்டமிடப்பட்ட பயணத் திட்டங்கள் இருந்ததால் அவர் கலந்து கொள்ளவில்லை என ஒரு சாராரும் கூறினர். இருப்பினும், ராமர் கோயில் திறப்பு விழாவில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு கலந்து கொள்ளாதது கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், கோயில் திறந்து 4 மாதங்கள் கழித்து உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தி ராமர் கோயிலில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு இன்று சுவாமி தரிசனம் செய்துள்ளார். குடியரசுத் தலைவர் மாளிகை நேற்று வெளியிட்ட அறிக்கையில், “குடியரசுத் தலைவர் ஸ்ரீ ஹனுமான் கர்ஹி கோயில், பிரபு ஸ்ரீ ராம் கோயில் மற்றும் குபேர் டீலாவில் சாமி தரிசனம் செய்வார்” என கூறப்பட்டிருந்தது.
பிஎச்டி ஆய்வு: யுஜிசியின் புதிய விதிகளை நிராகரிக்க வேண்டும் - ரவிக்குமார் எம்.பி. வலியுறுத்தல்!
அதன்படி, உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தி வந்த குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை அம்மாநில ஆளுநர் ஆனந்திபென் பட்டேல் வரவேற்றார். தொடர்ந்து, ஹனுமான் கர்ஹி கோயிலில் திரவுபதி முர்மு வழிபாடு செய்தார்.
அதன்பிறகு, குழந்தை ராமர் கோயிலில் அவர் சுவாமி தரிசனம் செய்து ஆரத்தி நிகழ்வில் கலந்து கொண்டார். பால ராமருக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஆரத்தி காட்டி வழிபாடு நடத்தினார். அவருக்கு ஸ்ரீ ராம ஜென்மபூமி கோயிலின் சிறிய பிரதி மற்றும் குழந்தை ராமர் சிலையின் பிரேம் செய்யப்பட்ட புகைப்படம் நினைவு பரிசாக கோயில் சார்பில் வழங்கப்பட்டது. மேலும், சராயு நதியில் நடைபெற்ற ஆரத்தி நிகழ்விலும் அவர் கலந்து கொண்டார்.