ராஜஸ்தானில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்திற்கு பிரதமர் மோடி தாமதமாக வந்ததால், அங்கு காத்திருந்த மக்களிடம் அவர் பகிரங்கமாக மன்னிப்புக் கோரினார்.
ராஜஸ்தானில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்திற்கு பிரதமர் மோடி தாமதமாக வந்ததால், அங்கு காத்திருந்த மக்களிடம் அவர் பகிரங்கமாக மன்னிப்புக் கோரினார். இரவு 10 மணி கடந்து விட்டதால், ஒலிபெருக்கியை புறக்கணித்த அவர், கூட்டத்தில் மைக் இல்லாமலேயே உரையாற்றினார். இதற்கான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
பிரதமர் மோடியின் பொதுக்கூட்டங்கள் என்றாலே மக்கள் கடல் அலையென திரண்டு அவரின் பேச்சு ரசித்து ஆரவாரம் செய்வது வழக்கம். அந்த அளவிற்கு தனது பேச்சாற்றலால் மக்களை கட்டிப் போடக் கூடிய வல்லமை படைத்தவர் மோடி. அவரது கூட்டங்கள் என்றால் மிகத் துல்லியமாக குறிப்பிட்ட நேரத்திற்கு நடந்தேறுவது வழக்கம், ஆனால் பிரதமர் நரேந்திர மோடி நேற்று (வெள்ளிக்கிழமை) ராஜஸ்தானில் சிரோஹி அபு ரோடு பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள தாமதாமானது. அவரின் உரையைக் கேட்க ஏராளமான மக்கள் திரண்டிருந்தனர். ஆனால் வரும் வழியில் பல நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு பொதுக் கூட்டத்துக்கு வருவதற்கு பிரதமருக்கு காலதாமதமானது.
ஆனாலும் கூட்டம் கலையாமல், பிரதமரின் பேச்சை கேட்க மக்கள் ஆர்வத்துடன் காத்திருந்தனர், ஒரு வழியாக பிரதமர் இரவு 10 மணி அளவில் பொதுக்கூட்ட மேடையை அடைந்தார், அப்போதும் பிரதமர் பேசுவார் என காத்திருந்த மக்களுக்கு திடீர் ஏமாற்றமை கிடைத்தது, இரவு 10 மணி கடந்து விட்டதால் ஒலிபெருக்கி விதிமுறைகளை நாம் பின்பற்ற வேண்டும் என கூறிய பிரதமர், தனக்கு மைக்ரோபோன் வேண்டாமென கூறிவிட்டார், மேடையில் ஒலிபெருக்கி இல்லாமலேயே மக்கள் மத்தியில் சிறிய உரை நிகழ்த்தினார்.
முன்னதாக கூட்டத்திற்கு கால தாமதமாக வந்ததற்கு மக்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கோருவதாக பிரதமர் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், நான் வந்து சேர தாமதம் ஆகிவிட்டது, இப்போது இரவு 10 மணி ஆகிறது, இந்த நேரத்தில் ஒலிபெருக்கியில் பேசுவது சரியாக இருக்காது, நாம் ஒலிபெருக்கி விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று என் மனசாட்சி கூறுகிறது, எனவே உங்கள் முன்பு நான் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என ஒலிபெருக்கி இல்லாமலேயே பிரதமர் மோடி மேடையில் உணர்வுபூர்வமாக பேசினார்.
மேலும், நான் நிச்சயம் மீண்டும் இங்கு வருவேன், நீங்கள் எனக்கு காட்டிய அன்பையும் பாசத்தையும் வட்டியுடன் திருப்பித் தருவேன் என்று நான் உங்களுக்கு உறுதியளிக்க விரும்புகிறேன் எனக் கூறிய பிரதமர் மோடி பாரத் மாதா கி ஜெய் என முழங்க ஒட்டுமொத்த கூட்டமும் அவருடன் சேர்ந்து பாரத் மாதா கி ஜெய் என முழக்கமிட்டது. முன்னதாக பிரதமர் மோடியை பாஜக மாநிலத் தலைவர் சதீஷ் பூனியா மற்றும் முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே, எதிர்க்கட்சித் தலைவர் குலாம் சந்த் கட்டாரியா மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் ஆகியோர் வரவேற்றனர்.
இக்கூட்டம் குறித்து கருத்து தெரிவித்த ராஜஸ்தான் மாநில பாஜக தலைவர் சதீஷ் பூனியா விரைவில் குஜராத் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், குஜராத் மாநில எல்லையை பகிர்ந்து கொள்ளும் ராஜஸ்தானில் உள்ள கட்சி தொண்டர்களுக்கு புது உத்வேகத்தை அளிக்கும் வகையில் இந்த கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது, காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தானிலும் அடுத்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது, பிரதமர் மோடி குஜராத்தின் பனஸ்கந்தா மாவட்டத்திலுள்ள அம்பாஜி கோவிலில் பிரார்த்தனை செய்துவிட்டு வந்தார், அதனால் சற்று தாமதம் ஏற்பட்டுவிட்டது இவ்வாறு அவர் கூறினார்.