
பிரதமராகப் பதவி ஏற்ற பின்னர் இரண்டாவது முறையாக ஜம்மு காஷ்மீரில் ராணுவத்தினருடன் தீபாவளி கொண்டாடினார் மோடி.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில், எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் வடக்கு காஷ்மீரின் 15 கார்ப்ஸ்களுடன் தனது தீபாவளி நாளைக் கழித்தார் பிரதமர் மோடி.
ராணுவத்தினருடன் தீபாவளியைக் கொண்டாடுவதை இப்போது வழக்கமாக்கிக் கொண்டுள்ளார் மோடி. இதற்காக, ஸ்ரீநகருக்குப் பறந்து சென்ற மோடி, அங்கிருந்து காஷ்மீரின் பந்திபோரா மாவட்டத்தில் உள்ள குரெஸ் செக்டாரில் உள்ள படைத் தளத்துக்குச் சென்றார். வியாழக் கிழமை இன்று காலை பிரதமரை ஸ்ரீநகர் விமான நிலையத்தில் ராணுவ தளபதி பிபின் ராவத் வரவேற்றார். பின்னர் தன்னை சந்தித்த அதிகாரிகள் மற்றும் வீரர்களுக்கு மோடி வாழ்த்து தெரிவித்தார்.
பிரதமர் மோடியுடன் ராணுவத்தின் வடக்கு மண்டல தலைமை லெப்டினன்ட் ஜெனரல் தேவராஜ் அன்பு, ஜே.எஸ்.சாந்து உள்ளிட்ட அதிகாரிகள் பிரதமருடன் குரெஸ் பகுதிக்கு உடன் வந்தனர்.
முன்னதாக, கடந்த 2014 ஆம் ஆண்டில் பிரதமராகப் பொறுப்பேற்ற உடனேயே காஷ்மீருக்குப் பறந்து வந்தார் மோடி. ராணுவ வீரர்களுடன் தீபாவளியைக் கொண்டாடினார். அதன் பின்னர் இப்போது இரண்டாவது முறையாக அவர் தீபாவளி கொண்டாட காஷ்மீருக்கு வந்துள்ளார். 2015ஆம் ஆண்டில் பஞ்சாப் மாநிலத்தில் இந்தியா பாகிஸ்தான் எல்லையிலும், 2016ம் வருடம் இமாச்சலப் பிரதேசத்திலும் ராணுவ வீரர்களுடன் தீபாவளியைக் கொண்டாடினார் மோடி.
காஷ்மீர் எல்லையில் கட்டுப்பாட்டை மீறி பாகிஸ்தான் ராணுவத்தினர் அவ்வப்போது துப்பாக்கிச் சூடு நடத்தி வருகின்றனர். இந்த வருடத்தில் மட்டும் 600 முறை ஒப்பந்தத்தை மீறி துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளது பாகிஸ்தான். இந்த வருடத்தில் மட்டும் பொதுமக்கள் எட்டு பேரும் பாதுகாப்பு வீரர்கள் 16 பேரும் கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.