ரிசர்வ் வங்கி முன் கேரள முதல்வர் தர்ணா போராட்டம்

Asianet News Tamil  
Published : Nov 18, 2016, 05:46 PM ISTUpdated : Sep 19, 2018, 01:51 AM IST
ரிசர்வ் வங்கி முன் கேரள முதல்வர் தர்ணா போராட்டம்

சுருக்கம்

கூட்டுறவு வங்கிகள் பணப்பரிவர்த்தனை செய்ய மத்திய அரசு தடை விதித்து உள்ளதைக் கண்டித்து, திருவனந்தபுரத்தில் ரிசர்வ் வங்கி முன், மாநில முதல்வர்பினராயி விஜயன் தலைமையில் நேற்று தர்ணா போராட்டம் நடந்தது.

பிரதமர் அறிவிப்பு

நாட்டில் கருப்புபணம், கள்ளநோட்டுக்களை ஒழிக்க, ரூ.1000, ரூ.500 நோட்டுக்களை தடைசெய்து, பிரதமர் மோடி கடந்த 8-ந்தேதி அறிவித்தார். அதன்பின் மக்கள் வங்கிகளில் தங்களின் செல்லாத ரூபாய் நோட்டுக்களைக் கொடுத்து,நீண்ட வரிசையில் காத்திருந்து பணம் பெற்று வருகின்றனர்.

ஆர்பாட்டம்

இந்த விவகாரத்தில் நாட்டில் உள்ள கூட்டுறவு வங்கிகள், பணப்பரிமாற்றம் செய்யக்கூடாது, அது கருப்பு பணம் புழங்க வழிவகுக்கும் எனக்கூறி ரிசர்வ் வங்கி தடை செய்தது. இதைத் எதிர்த்து அனைத்து மாநிலங்களிலும் கூட்டுறவு வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

திருவனந்தபுரத்தில், ரிசர்வ் வங்கி அலுவலகம் முன்பு மாநில அரசு சார்பில் நேற்று தர்ணா போராட்டம் நடத்தப்பட்டது. முதல்வர் பினராயி விஜயன் தலைமையில், அமைச்சர்கள் பாளையம் எனும் இடத்தில் இருந்து, ரிசர்வ் வங்கி அலுவலகம் வரை பேரணியாகச் சென்று தர்ணாவில் ஈடுபட்டனர்.

அழிக்கப்பார்க்கிறது

அப்போது தொண்டர்கள் மத்தியில் முதல்வர் பினராயி விஜயன் பேசியதாவது, “ கூட்டுறவு வங்கிகள் பணப்பரிமாற்றம் செய்யக்கூடாது என்ற ரிசர்வ் வங்கியின் உத்தரவு, அரசியல் சதித்திட்டத்தோடு, பாரதிய ஜனதா அரசால் செயல்படுத்தப்படுகிறது. கூட்டுறவு வங்கிகளை அழிக்கப்பார்க்கிறது மத்தியஅரசு.  கருப்பு பணத்தின் புகலிடம் எனக்கூறுவதை ஏற்கமுடியாது. 

கூட்டுறவு வங்கிகளில் மேற்கொள்ளப்படும் பணப்பரிமாற்றங்கள், துல்லியமாக கண்காணிக்கப்படுகின்றன. இது சாமானியர்களின் மட்டும் பயன்படுத்தும் வங்கியாகும்.

சரியான முடிவு அல்ல

எந்த முன் எச்சரிக்கை நடவடிக்கையும் மேற்கொள்ளாமல், ரூ.1000,  ரூ.500 நோட்டுக்களை செல்லாது என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். தற்போதுள்ள நிலை மக்களுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. நாட்டில் 86 சதவீதம் புழக்கத்தில் இருக்கும் ரூபாய் நோட்டுக்களை உடனடியாக வாபஸ் பெற்றதுதான், இந்த சிக்கலுக்கு காரணம். இது சரியான, திறமையான பிரதமரின் முடிவு அல்ல.

போராடுவோம்

நானும், நிதியமைச்சர் தாமஸ் இஸாக்கும் கடந்த 14-ந்தேதி நிதியமைச்சர் அருண் ஜெட்லியைச் சந்தித்து கூட்டுறவு வங்கிகள் சந்திக்கும் பிரச்சினைகளை எடுத்துக்கூறினோம். வேளாண் கூட்டுறவு வங்கிகளையாவது பணப்பரிமாற்றங்கள் செய்ய அனுமதியுங்கள் என்றோம். நாங்கள் கோரிக்கை விடுத்த அன்று நண்பகலிலே, ஒட்டுமொத்தமாக, மாவட்ட கூட்டுறவு வங்கிகளுக்கும் கொடுத்த அனுமதியையும் ரத்து செய்துவிட்டது.

 கூட்டுறவு வங்கிகள் என்பது கேரள மக்களின் பிறப்புமுதல் இறப்பு வரை பின்னிப் பிணைந்தது. இந்த விசயத்தில் ஒன்றாக இணைந்து அனைவரும் போராட வேண்டும்'' என்று தெரிவித்தார்.

PREV
click me!

Recommended Stories

விர்ர்ர்ரென உயரும் தங்கத்தின் விலை..! உலகளவில் தாறுமாறாக உயர இதுதான் காரணம்..! எப்போது குறையும் தெரியுமா..?
காவி உடையில் சிங்கம்..! மோடி- யோகியை ஆதரிப்பதால் என் சமூகம் ஒதுக்குகிறது..! தௌகீர் அகமது வேதனை..!