ஓணம் பண்டிகைக்காக அய்யப்பன் கோவில் வர வேண்டாம்… …பக்தர்களுக்கு தேவசம் போர்டு வேண்டுகோள் ….

By Selvanayagam PFirst Published Aug 21, 2018, 10:12 PM IST
Highlights

கனமழை  வெள்ளம் காரணமாக சபரிமலை ஐயப்பன் கோவிலில் சேறும் சகதியும் நிரம்பி இருப்பதாலும், பம்பை ஆற்றில் இன்னும் வெள்ளம் குறையாமல் இருப்பதாலும், கோவிலுக்குச் செல்லும்  சாலைகள் கடுமையாச் சேதமடைந்துள்ளதாலும் ஓணம் பண்டிகைக்காக பக்தர்கள் கோவிலுக்கு வர வேண்டாம் என  திருவிதாங்கூர் தேவசம் போர்டு கேட்டுக் கொண்டுள்ளது.

கேரளாவில் அண்மையில்  பெய்த கனமழையால் ஒட்டுமொத்த மாநிலமும் கடுமையான பேரழிவை சந்தித்தது. 10 நாட்களாக பெய்த கனமழை காரணமாக வெள்ள நீர் குடியிருப்பு பகுதியில் புகுந்தது. இந்த பேரழிவால் நூற்றுக் கணக்கோனோர் பலியாகினர்.

சபரிமலைப் பகுதி அமைந்துள்ள பத்தினம்திட்டா மாவட்டம் மழையாலும், வெள்ளத்தாலும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. சபரிமலையில் ஓடும் பம்பை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஐயப்பன் கோயில் பகுதிக்குள் வெள்ளம் சென்றது. சாலையில் மரங்கள் வேரோடு சாய்ந்தும், சாலைகள் அரிக்கப்பட்டும் பயன்படுத்த முடியாத நிலையில் இருக்கிறது.

இந்நிலையில், வரும் 23-ம் தேதி முதல் ஓணம் பண்டிகைக்கான பூஜை சபரிமலை ஐயப்பன் கோயிலில் தொடங்குகிறது. 10 நாட்கள் கொண்டாடப்படும் இந்தப் பண்டிகையை மழை, வெள்ள பாதிப்பு காரணமாக கேரள அரசு ரத்து செய்துள்ளது.

இந்தச் சூழலில் சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஓணம் பண்டிகைக்காக பக்தர்கள் யாரும் சாமி தரிசனத்துக்காக வர வேண்டாம் என்று திருவிதாங்கூர் தேவஸ்தானம் பக்தர்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

சபரிமலையில் பாயும் பம்பை ஆற்றில் வெள்ளம் இன்னும் குறையவில்லை. சபரிமலையில் கோயில் வளாகம் முழுவதும் களிமண், சேறு நிரம்பிக் காணப்படுகிறது. சாலையில் பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்து கிடக்கின்றன.

இந்த சூழ்நிலையில் அய்யப்பன்  கோயிலுக்குப் பக்தர்கள் ஆபத்தான பயணத்தை மேற்கொள்ள வேண்டாம் என்று திருவிதாங்கூர் தேவஸ்தானம் கேட்டுக்கொண்டுள்ளது.

ஏற்கனவே கடந்த வாரம் நடைபெற்ற நிறைபுத்தரி பூஜையில் பக்தர்கள் யாரும் கோவிலுக்கு வர வேண்டாம் என்று தேவசம் போட்டு கேட்டுக் கொண்டிருந்தது. இந்நிலையில் அய்யப்பன் கோவில் வளாகம் முழுவதும் சேறும், சகதியும் நிரம்பிக் கிடக்கின்றன. தற்போது கோவிலை சத்தப்படுத்தும் பணிகள் தொடங்கியுள்ளன.

கோவிலின் ஒரு பகுதி பம்பை ஆற்றில் மூழ்கி இருப்பதால், வெள்ளம் வடிவதற்காக கோவில் நிர்வாகம் காத்திருக்கிறது. இந்த இக்கட்டான தருணத்தில் பக்தர்கள் கோவிலுக்கு வர வேண்டாம்  என அறிவிக்கப்பட்டுள்ளது.

click me!