ஒடிசா ரயில் விபத்து: உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு!

By Manikanda PrabuFirst Published Jun 4, 2023, 1:29 PM IST
Highlights

ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது

இந்திய ரயில்வே வரலாற்றில் மிகவும் மோசமான விபத்தில் ஒன்றாக பார்க்கப்படும் மூன்று ரயில்கள் விபத்து ஒடிசா மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது. ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் ஷாலிமர் - சென்னை சென்ட்ரல் கோரமண்டல் எக்ஸ்பிரஸ், யஷ்வந்த்பூர் - ஹவுரா அதிவிரைவு ரயில், ஒரு சரக்கு ரயில் ஆகியவை மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் சிக்கி இதுவரை 288 பேர் உயிரிழந்துள்ளனர். 900க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். அவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விபத்து நடைபெற்ற இடத்தில் நேரில் ஆய்வு செய்த பிரதமர் மோடி, மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுபவர்களிடம் நேரில் ஆறுதல் கூறியுள்ளார். விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சமும், பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.2 லட்சமும், சிறிய காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 இழப்பீடாக வழங்கப்படும் என மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் அறிவித்துள்ளார். மேலும், பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 வழங்கப்படும் என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இதுதவிர, மாநில அரசுகளின் சார்பிலும் நிவாரணத்தொகைகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

ஒடிசா, பாலசோரில் விபத்து நடைபெற்ற இடத்தில் நேரில் ஆய்வு செய்த மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், 3 ரயில்கள் விபத்து தொடர்பாக விசாரிக்க உயர்மட்ட குழு அமைத்துள்ளதாகவும், ரயில் விபத்து குறித்து சுதந்திரமான விசாரணை நடத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளார். 

இதனிடையே, விபத்துக்கு பொறுப்பேற்று மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் ராஜினாமா செய்ய வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. அதன் தொடர்ச்சியாக, இந்திய ரயில்வேயின் ‘கவாச்’ என்று அழைக்கப்படும் தானியங்கி பாதுகாப்பு அமைப்பு கேள்விக்குள்ளாக்கப்பட்டு வருகிறது. விபத்துக்குள்ளான ரயில் வழித்தடத்தில் ரயில் விபத்துகளை தவிர்க்கும் கவாச் எனும் பாதுகாப்பு அம்சம் அமைக்கப்படவில்லை என ரயில்வே செய்தி தொடர்பாளர் அமிதாப் சர்மா தெரிவித்துள்ளார்.

10 ஆண்டுகளில் ரயில்வே விபத்துகளால் 2.6 லட்சம் பேர் பலி; ரயில் மோதல் முக்கியக் காரணம் அல்ல!

இந்த நிலையில், ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக உயர்நிலை விசாரணைக்கு உத்தரவிட கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் நிபுணர் குழு அமைத்து விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனவும் அந்த மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. விசாரணையை இரு மாதங்களுக்குள் நிறைவு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும் எனவும், கவாச் பாதுகாப்பு முறையை அமல்படுத்த கோரியும் பொதுநல மனுவில் கோரப்பட்டுள்ளது.

முன்னதாக, ஒடிசா ரயில் விபத்து தொடர்பான மூல காரணம் கண்டறியப்பட்டுள்ளதாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். மின்னணு இன்டர்லாக் மாற்றத்தால்தான் இந்த விபத்து நடந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!