
அசாம் உல்பா தீவிரவாதிகளால் இரு கண்களையும் இழந்த எல்லைப் பாதுகாப்பு படை வீரர் சந்தீப் மிஸ்ரா வீட்டுக்கு திடீரென சென்ற மத்திய உள்துறை ராஜ்நாத் சிங், அவர்களுடன் சேர்ந்து உணவு சாப்பிட்டார்.
மத்தியப்பிரதேசம், தெகான்பூரில் வசித்து வருகிறார் எல்லைப் பாதுகாப்புபடை வீரர் சந்தீப் மிஸ்ரா. இவரின் மனைவி இந்திராக்ஷி. இவர் உத்தரப்பிரதேசம்,சித்தார்த்நகர் மாவட்டம், பான்சி நகரைச் சேர்ந்தவர்.
கடந்த 2000ம் ஆண்டு அசாமில் சந்தீப் மிஸ்ரா பணியாற்றியபோது, உல்பா தீவிரவாதிகள் தாக்குதலில் சந்தீப் மிஸ்ரா மீது 5 குண்டுகள் தாக்கின. அவரின் இரு கண்பார்வையும் பறிபோனது, இருந்தபோதிலும் அவர் உயிர்பிழைத்தார். அப்போது இவருக்கு திருமணம் ஆகவில்லை.
அதன்பின், மத்தியப் பிரதேசம் தெகான்பூர் உள்ள பி.எஸ்.எப். அகாதெமியில்கனிணி பிரிவில் பணியாற்றி வந்தார். இந்நிலையில், திருமண வரன் தேடும் தளத்தில், சந்தீஸ் மிஸ்ராவைப் பார்த்த இந்திராக்சி, ‘நாட்டுக்காக தன் கண்களையே கொடுத்து இருக்கும் இவரை நான் ஏன் திருமணம் செய்யக்கூடாது ?’’ என சந்தீப் மிஸ்ராவை திருமணம் செய்து கொண்டார். இப்போது இவர்களுக்கு 9 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.
இந்நிலையில் சனிக்கிழமை இவர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. என்னவென்றால், 43வயதான மிஸ்ராவின் வீட்டுக்கு, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் திடீரென வருகை தந்தார். அவர்களுடன் அமர்ந்து உரையாற்றிய ராஜ்நாத் சிங்,அவர்களின் குழந்தையுடன் சிறிதுநேரம் விளையாடினார்.
அதன்பின், தீபக் மிஸ்ராவின் சாதனைகளை புகழ்ந்து பேசிய ராஜ்நாத்சிங், 5குண்டுகள் பட்டும், கண்பார்வை இழந்தும் நம்பிக்கை இழக்காமல் வாழ்ந்து வருகிறார் மிஸ்ரா என்று புகழாரம் சூட்டினார்.
அதன்பின், மிஸ்ராவும், அவரின் மனைவி இந்திராக்சியும் மிகவும் வற்புறுத்திக்ேகட்டுக்கொண்டதையடுத்து, அவர்களுடன் மதிய உணவு உண்டார்.
அதன்பின் டுவிட்டரில் அமைச்சர் ராஜ்நாத்சிங் வெளியிட்ட பதிவில் கூறுகையில், “ தீவிரவாதிகள் தாக்குதலில் கண்பார்வை இழந்த பி.எஸ். எப். வீரர் சந்தீப் மிஸ்ராவின் குடும்பத்தைச் சந்தித்தேன். நாட்டின் மீது கொண்டு இருக்கும் அன்பினால் சந்திப்பும், அவரின் மனைவியும் ஒன்றாக இணைந்து இருக்கிறார்கள்.அவர்களின் வீட்டில் மதிய உணவு சாப்பிட்டது மகிழ்ச்சியாக இருந்தது’’ எனத் தெரிவித்துள்ளார்.
பி.எஸ்.எப். வீரர் மிஸ்ரா கூறுகையில், “ மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் என் வீட்டுக்கு வருகை தந்தது, எனக்கு பெருமையாக இருந்தது’’ எனத் தெரிவித்தார்.