பைக்க வித்துட்டு விமானம் வாங்கி ஓட்டலாம்…. விமான எரிபொருளை விட பெட்ரோல், டீசல் விலை இவ்வளவு அதிகமா?

By manimegalai aFirst Published Oct 18, 2021, 11:20 AM IST
Highlights

தலைநகர் டெல்லியை பொருத்தவரையில் விமான எரிபொருளை விட, பெட்ரோல், டீசல் விலை 30 சதவீதம் அதிகரித்துள்ளது.

தலைநகர் டெல்லியை பொருத்தவரையில் விமான எரிபொருளை விட, பெட்ரோல், டீசல் விலை 30 சதவீதம் அதிகரித்துள்ளது.

இந்தியாவில் நாளுக்கு நாள் ஜெட் வேகத்தில் உயர்ந்துவரும் பெட்ரோல், டீசல் விலையானது சாமானிய மக்களை கண்ணீர் வடிக்க வைத்துள்ளது. நாடு முழுவதும் 12 மாநிலங்களில் டீசல் விலையும் 100 ரூபாயை தாண்டியுள்ளது. பெட்ரோல் விலை லிட்டருக்கு 110 ரூபாயை தாண்டி விற்பனை செய்யப்படுகிறது. தமிழ்நாட்டிலும் ஒரு சில மாவட்டங்களில் டீசல் விலை 100 ரூபாயை தாண்டியுள்ளது.

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயித்து வருகின்றன. கச்சா எண்ணெய் விலை குறையும்போது வரியை உயர்த்தும் மத்திய, மாநில அரசுகள், அதன் விலை உயரும்போது வரியை குறைக்க மறுக்கின்றன. இதனால் சாமானிய மகக்ள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். டீசல் விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்களில் விலை அதிகரித்துள்ள போதிலும், எரிபொருள் விலையை குறைக்க மத்திய அரசு துரும்பை கூட கிள்ளி போடவில்லை.

இந்தநிலையில் விமானங்களை இயக்க தேவைப்படும் எரிபொருள் விலையை விட சாமானியர்கள் பயன்படுத்தும் பெட்ரோல், டீசல் விலை 30 சதவீதம் உயர்ந்துள்ளது. தலைநகர் டெல்லியில், விமானத்துக்கான எரிபொருள் ஒரு லிட்டா் ரூ.79 ஆக உள்ளது. ஆனால், பெட்ரோல், டீசல் விலை அதைவிட 30 சதவீதத்துக்கு மேல் அதிகமாக உள்ளது. இதன்மூலம் விமானத்தை இயக்குவதைவிட இருசக்கர வாகனத்தை இயக்குவதற்கான செலவு அதிகரித்துள்ளது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடந்த ஏழு ஆண்டுகளில் இல்லாத வகையில் ஒரு பீப்பாய் 84.8 டாலாராக அதிகரித்துள்ளது. கடந்த மாதம் இது 73.51 டாலாராக இருந்தது. இந்தியாவில் அதிகபட்சமாக ராஜஸ்தானில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.117.86-க்கும் ஒரு லிட்டர் டீசல் ரூ.105.95-க்கும் விற்பனையாகிறது.

click me!