
பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷரப், தனியார் தமிழ் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தபோது, பாகிஸ்தான் மீது நீங்கள் சுமத்தும் அத்தனை குற்றங்களையும் நீங்களும் செய்கிறீர்கள் என கூறினார்.
பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப், தனியார் தமிழ் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது கேட்கப்பட்ட கேள்விகளும், அதற்கு முஷரப் அளித்த பதில்களும் வருமாறு;-
கேள்வி: அமெரிக்க அதிபராக டிரம்ப் வென்றது, உலகையே வியக்க வைத்தது.அவரது வெற்றி, பாகிஸ்தானுக்கு எத்தகைய விளைவை ஏற்படுத்தும்?
பதில்:- இதை நேர்மறையாகவே காண விரும்புகிறேன். அவரை ஹிலாரி கிளிண்டனோடு ஒப்பிட்டால், ஹிலாரி அரசமைப்பு முறையின் சின்னமாகவே பார்க்கப்பட்டார். டொனால்ட் டிரம்பை திறந்த மனமுடையவராக கருதுகிறேன். சர்வதேச விவகாரங்களை பற்றி அவருக்கு புரிதல் இல்லாவிட்டாலும், திறந்த மனமும், விரைந்து கற்று செயலாற்றும் ஆற்றல் இருந்தால், அவரால் நல்ல மாற்றத்தை கொடுக்கமுடியும். அதைத்தான் அமெரிக்க மக்களும் விரும்புகிறார்கள்.
கேள்வி:- ஆனால் இந்த விவகாரத்தில் அவருடைய நிலைப்பாடு மிகவும் கடுமையாக உள்ளது. பாகிஸ்தான் மீது அமெரிக்க அதிபர் தேர்தல் வரலாற்றில் இதுவரை பயன்படுத்தப்படாத கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தியுள்ளார்.
பதில்:- முஸ்லிம்களுக்கு எதிராக அவர் பேசியது உண்மைதான். ஆனால் பாகிஸ்தான் மீது அவர் அவ்வளவு கடுமையாக பேசியதாக தெரியவில்லை. அப்படியே அவர் பேசினாதாலும், அவரை சமாளிக்க முடியும்.
கேள்வி:- இந்தியா-பாகிஸ்தான் உறவுகள் ஒரு கடுமையான சூழலை எதிர்கொண்டு வருகிறது. இந்த நிலைக்கு யார் காரணம் ?
பதில்:- நான் கூறப்போகும் பதில் உங்களுக்கு பிடிக்காது. இந்தியா தான் காரணம். இந்திய பிரதமர் தான் காரணம்.
கேள்வி:- இந்தியா எப்படி காரணம்? பதன்கோட்டுக்கு இந்தியா தான் காரணமா? உரி தாக்குதலுக்கும் இந்தியா தான் காரணமா? இந்த தாக்குதல்கள் எல்லாம் தன் மீது இந்தியா தானே நடத்திக்கொண்டதா?
பதில்:- இதை பற்றி பேசும் நீங்கள், வரலாற்றை சற்று பின்னோக்கி பாருங்கள். கிழக்கு பாகிஸ்தானில் நடந்ததை ஏன் பார்க்க மறுக்கின்றீர்கள். உங்கள் ராணுவம் எங்கள் நாட்டின் மீது படையெடுத்து தாக்கியது. சியாச்சினில் என்ன நடந்தது ? கேள்வி:- வங்கதேசிகளின் சுதந்திரப்போராட்டம் அது.
பதில்:- அதற்காக நீங்கள் தலையிட முடியாது. காஷ்மீரில், பஞ்சாபில் நாங்கள் தலையிடலாமா.
கேள்வி:- பெரிய அளவில் எங்கள் பகுதிக்கு அகதிகள் வந்து குவிந்தார்கள்.
பதில்:- காலிஸ்தான் உருவாக்க போராட்டம் நடக்கிறது, இன்னமும் நடக்கிறது. அசாமில் போராட்டம் நடக்கிறது. பாகிஸ்தான் ராணுவத்தை நாங்கள் அனுப்பலாமா? உங்கள் கிழக்கு பகுதிகளில் மாவோயிஸ்டுகளின் போராட்டம் நடக்கிறது. அங்கே பாகிஸ்தான் ராணுவத்தை அனுப்பலாமா? முடியாதல்லவா? இன்னொரு நாட்டின் மீது படையெடுக்கக்கூடாது.
காஷ்மீரில் என்ன நடக்கிறது என்பதை ஏன் பார்க்க தயங்குகிறீர்கள்? பர்ஹான்வானி கொல்லப்படவில்லையா? 80 பேர் கொல்லப்படவில்லையா? ஆயிரக்கணக்கில் மக்கள் காயமடையவில்லையா? காஷ்மீர் பிரச்சனை தீர்க்கப்படாமலேயே இருக்கிறதே!
கேள்வி:- இவை எங்கள் உள்நாட்டுப் பிரச்சனைகள். ஆயிரக்கணக்கில் பலுசிஸ்தான் மக்கள் கொல்லப்பட்டுள்ளார்களே? சட்டவிரோத கொலைகள் தொடர்கின்றனவே?
பதில்:- இவையெல்லாம் அபத்தமானவை. ஆயிரக்கணக்கில் கொல்லப்படவில்லை. உங்கள் அரசு மற்றும் ஊடகங்கள் பரப்பும் விஷயங்கள் இவை. இது முற்றிலும் பொய்யானது.
கேள்வி:- பிரதமர் நரேந்திர மோடி இந்தியா-பாகிஸ்தான் உறவுகளை சீர்படுத்த உளமார்ந்த நடவடிக்கைகளை மேற்கொள்வதாக நீங்கள் கருதவில்லையா? அவரின் பதவியேற்புக்கு நவாஸ் ஷெரீப்புக்கு அழைப்பு விடுத்ததில் தொடங்கி, யாரும் எதிர்பாராத வண்ணம் லாகூர் சென்று பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தது வரை... இவையெல்லாம் முன் உதாரணம் இல்லாதவை. ஆனால் பதிலுக்கு என்ன கிடைத்தது?
பதில்:- இவை நகைப்புக்குரியவை. இவை செயற்கையானவை. பொய்யானவை.
கேள்வி:- சமீபகாலங்களில் சர்வதேச ரீதியில் பாகிஸ்தான் தனிமைப்பட்டிருப்பதாக நீங்கள் கருதவில்லையா ?
பதில்:- ஆம்., இவை இந்தியாவால் கட்டமைக்கப்படுபவை. சார்க் நாடுகளில், பூடான், நேபாளம் போன்ற நாடுகளிடம் என்ன எதிர்பார்க்க முடியும். நீங்கள் சொல்வதை செய்கிறார்கள். உங்கள் கட்டுப்பாட்டில் வங்கதேசத்தை வைத்துள்ளீர்கள். அது இந்தியாவால் கட்டமைக்கப்பட்டது. அமெரிக்காவிலும் அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களில் இந்தியாவுக்கான கூட்டமைப்பு செயல்படுகிறது.
தற்போது நாங்கள் பலவீனமாக இருக்கலாம். ஓரளவுக்கு சர்வதேச ரீதியில் தனிமைப்பட்டிருக்கலாம். ஆனால் எதிர்கால சூழல் அப்படியே இருக்காது. உலகம் எதிர்காலத்தில் பல சக்திகள் பங்காற்றும் உலகமாக இருக்கப்போகிறது. அமெரிக்கா மட்டுமல்ல... சீனாவும், ரஷியாவும் மேலெழுந்து வருகின்றன. அந்த கோணத்தில் நாங்கள் தனிமைப்பட்டு இல்லை.
நாங்கள் இன்னும் அரசாங்க ரீதியாக செய்ய வேண்டியது அதிகம் உள்ளது. இதை எங்களால் தற்போது செய்ய முடியவில்லை. உள்நாட்டில் வளர்ச்சி, மேம்பாடு ஆகியவற்றின் முன்னேற்றம் உறுதியானால், சர்வதேச அளவில் பாகிஸ்தானின் குரல் மேலோங்கும். உள்நாட்டில் பிரச்சனைகள் கூடுமானால், சர்வதேச அரங்கில் மதிப்பும் செல்வாக்கும் குறையும். இதுதான் பாகிஸ்தானின் நிலை.
கேள்வி:- ஒரு மில்லியன் டாலர் கேள்வி? தாவூத் இப்ராஹிம் எங்கே?
பதில்:- எனக்கு தெரியாது. எனக்கு தெரியவே தெரியாது.
கேள்வி:- அவர் பாகிஸ்தானில் இருப்பதற்கான வாய்ப்பு இருக்கிறதா?
பதில்:- என்னால் சொல்ல முடியாது. எனக்கு தெரியாது. அவரோடு நான் தொடர்பில் இல்லை.
கேள்வி:- பாகிஸ்தானில் அவர் இருந்த கால கட்டம் உள்ளதா?
பதில்:- பதில் சொல்வதற்கு இல்லை.
கேள்வி:- தாவூத் உங்கள் நாட்டு மக்களால் மதிக்கப்படுகின்றாரா?
பதில்:- ஆமாம். எங்கள் நாட்டு மக்களால் அவர் மதிக்கப்படுகிறார். தொடர்ந்து மதிக்கப்படுவார். மும்பையில் நடந்த சம்பவத்திற்கும், குஜராத்தில் நடந்த சம்பவங்களுக்கும் அவர் செய்த எதிர்வினைகளுக்கு எங்கள் மக்களிடையே ஆதரவு இருக்கிறது.
கேள்வி:- இரண்டு இந்திய பிரதமர்களோடு பணியாற்றியுள்ளீர்கள். இவர்கள் இருவரில் உங்கள் மனம் கவர்ந்தவர் யார்?
பதில்:- இருவரையும் நான் ஒப்பிட விரும்பவில்லை. இருவருமே சிறந்த மனிதர்கள். அவர்கள் மீது நான் பெரும் மதிப்பு கொண்டுள்ளேன்.
கேள்வி:- உங்களுக்கு மிகவும் பிடித்தமான, மனம் கவர்ந்த ஒரு இந்திய தலைவர் யார்?
பதில்:- பண்புகளின் அடிப்படையில், சந்தேகமே இல்லாமல் காந்தியடிகள் மற்றும் ஜவஹர்லால் நேரு இருவருமே சிறந்த தலைவர்கள். ஆனால் பாகிஸ்தானுக்கும் இஸ்லாமியர்களுக்கும் நன்மை பயக்கும் செயல்களை அவர்கள் செய்தார்களா என்றால் நான் அப்படி கருதவில்லை.
தற்கால தலைவர்களுள் நான் மன்மோகன் சிங்கையும், வாஜ்பாயையும் தேர்ந்தெடுப்பேன். இருவர் மீதும் பெருமதிப்பு வைத்துள்ளேன். அமைதிக்கான நடவடிக்கைகளை அவர்கள் எடுத்தார்கள்.
கேள்வி:- பிரதமர் நரேந்திர மோடி, கருப்பு பணம் மற்றும் கள்ளநோட்டுகளை ஒழிக்க 500, 1000 ரூபாய் நோட்டுகளை ஒழித்து ஒரு வரலாற்று சிறப்பு மிக்க முடிவை எடுத்துள்ளார். கள்ளநோட்டுகள், எல்லையின் மறுபக்கத்தில் இருந்து வருவதாக வந்த புகாரும் இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. இதனை எப்படி பார்க்கிறீர்கள்.
பதில்:- முதலில், பாகிஸ்தான் குறித்து கூறப்படும் அனைத்து குற்றச்சாட்டுகளுக்கும் நான் சவால் விடுக்கிறேன். குறைந்தபட்சமாக சொல்லி கொள்வது, அது போன்றவை இரண்டு பக்கத்திலும் செய்யப்படுகிறது. எதுவாக இருந்தாலும் சரி. பாகிஸ்தான் மீது நீங்கள் சுமத்தும் அத்தனை குற்றங்களையும் நீங்களும் செய்கிறீர்கள். அதை நான் தெளிவுபடுத்தி கொள்கிறேன்.
நீங்கள் அவ்வளவு அப்பாவிகள் இல்லை. தற்போது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை நல்லது. குறிப்பாக கருப்பு பணம், அவை பாகிஸ்தானின் கள்ள நோட்டுகள் அல்ல. கருப்பு பணம் வெளியே வருவது நல்லது. நான் பொருளாதார நிபுணர் அல்ல, ஆனால் இது ஒரு நல்ல முடிவு.
கேள்வி:- நேர்காணலின் இறுதியாக, இந்தியர்களுக்கு நீங்கள் கூற விரும்பும் செய்தி என்ன? குறிப்பாக தமிழக மக்களுக்கு நீங்கள் தெரிவிக்க நினைப்பது என்ன?
பதில்:- தென்இந்தியா குறித்து நிறைய படித்திருக்கிறேன். உங்களுக்கான வளர்ச்சியை நீங்களே செய்து கொண்டது குறித்து தென் இந்தியர்கள் மீது மிகுந்த மதிப்பு கொண்டுள்ளேன். இந்தியாவின் மற்ற பகுதிகளை விட கல்வியில், நீங்கள் சிறந்தவர்கள் என்று தெரியும். தகவல் தொழில்நுட்பம் உங்கள் பகுதியில் அதிகரித்து வருவதும் எனக்கு தெரியும். நீங்கள் மேற்கொண்டுள்ள சாதனைகள் குறித்து உங்கள் மீது மிகுந்த மரியாதை உண்டு. குறிப்பாக தமிழ்நாடு, தென் இந்தியர்களை குறைந்த அளவே நான் சந்தித்திருக்கிறேன். பாகிஸ்தான் குறித்தும் இரு நாட்டு நல்லிணக்கம் குறித்தும் தென் இந்தியர்களின் நேர்மறையான அணுகுமுறையை மதிக்கிறேன்.
இவ்வாறு பதில் அளித்தார்.