
Dust storm in Mumbai: இந்தியாவின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்றாக மகாராஷ்டிரா தலைநகர் மும்பை விளங்கி வருகிறது. நாடு முழுவதும் வெயில் கொளுத்தி வரும் நிலையில், மும்பையிலும் கடந்த சில வாரங்களாக வெயில் கடுமையாக வாட்டி வந்தது. தினமும் 33 டிகிரி செல்சியசுக்கு மேல் வெயில் வாட்டியதால் மக்கள் வீடுகளுக்குள் முடங்கினார்கள்.
மும்பையில் புழுதிப்புயல்
இந்நிலையில், நேற்று பிற்பகல் மும்பையில் திடீரென வானிலை மாறியது. நகரை சுற்றி கருமேகங்கள் சூழ்ந்த நிலையில், திடீரென புழுதிப் புயல் வீசியது. பலமான காற்றுடன் புழுதிப் புயல் சுழன்று அடித்ததால் மும்பைவாசிகள் நிலைகுலைந்து போனார்கள். புழுதிப் புயல் காரணமாக சாலைகளில் வாகனங்களை இயக்க முடியவில்லை. இதனால் வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. மேலும் மும்பையின் உயிர்நாடியாக விளங்கும் புறநகர் மின்சார ரயில் போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டது.
ஹாலிவுட் பட காட்சியை போல்...
பலர் வாகனங்களை நிறுத்தி விட்டு அருகில் உள்ள கட்டடங்களில் தஞ்சம் அடைந்தனர். உயரமான கட்டடங்கள், சாலைகள் கண்ணுக்கு தெரியாத அளவுக்கு புழுதிப்புயலின் தாக்கம் கடுமையாக இருந்தது. மும்பை மட்டுமின்றி தானே பகுதிகளிலும் புழுதிப்புயலின் பாதிப்பு இருந்ததால் மக்களின் அன்றாட சேவை பாதிக்கப்பட்டது. ஹாலிவுட் படத்தில் ஏற்படும் காட்சியை போல் புழுதிப்புயல் இருந்ததால் மக்கள் மிரண்டு போனார்கள்.
நேபாளத்தில் 5.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!
மேற்கூரைகள் பறந்தன
புழுதிப்புயல் காரணமாக மும்பையிலிருந்து 60 கி.மீ தொலைவில் உள்ள கசாரா மற்றும் கல்யாண் இடையே உள்ள அட்கான் நிலையம் அருகே மேற்கூரை பறந்து சென்று கம்பியில் மோதிய காட்சிகள் வைரலாகின. மேலும் சில இடங்களில் உயரமான கட்டடங்களில் இருந்த மேற்கூரைகள் காற்றின் வேகத்தை தாக்குப்பிடிக்க முடியாமல் பறந்து சென்றன. மகாராஷ்டிராவில் ஏப்ரல் 4 மற்றும் 5ம் தேதிகளில் இடியுடன் கூடிய மழை மற்றும் பலத்த காற்று வீசும் என இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், மும்பையை புழுதிப்புயல் தாக்கியுள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மையம்
மும்பையில் இன்று இடியுடன் கூடிய மழை லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் மணிக்கு 30-40 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீச வாய்ப்புள்ளது எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மும்பையில் நேற்று வெயில் குறைந்து குளிர்ச்சியான வானிலையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்த நிலையில், திடீரென வந்த புழுதிப்புயல் அவர்களின் மகிழ்ச்சியை கெடுத்து விட்டது.
காற்றின் தரக் குறியீடு எப்படி?
நேற்று காலை 9:05 மணிக்கு மும்பையில் காற்றின் தரக் குறியீடு (AQI) 76 ஆக இருந்த நிலையில், மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் SAMEER செயலி மும்பை நகரத்தின் காற்றின் தரம் "நல்ல" பிரிவில் இருப்பதாகக் கூறியது. மும்பையின் பல பகுதிகளில் AQI 'நன்றாக' இருந்தது. 42 AQI உடன், பாந்த்ரா குர்லா வளாகம் "நல்ல" காற்றின் தரத்தைப் பதிவு செய்தது. மேலும் பைகுல்லா, கொலாபா, கண்டிவலி மற்றும் போவாய் ஆகிய இடங்களில் காற்றின் தரக் குறியீடுகள் முறையே 52, 53, 53 மற்றும் 74 ஆக இருந்தன, இது "நல்ல" காற்றின் தரத்தைக் குறிக்கிறது.
ஹைதராபாத்தில் 400 ஏக்கர் நிலத்தில் மரங்கள் வெட்டப்படுவதற்கு உச்ச நீதிமன்றம் தடை!