தொடர்ந்து கனமழை காரணமாக தெலங்கானாவில் பல்வேறு மாவட்டங்களில் சிவப்பு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் முக்கிய சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் குளம் போல் தேங்கியுள்ளதால், மக்கள் அவதியடைந்துள்ளர்.
தென்மேற்கு பருவமழை காரணமாக கோவா, கர்நாடகா, மகாராஷ்டிரா, தெலங்கானா, கேரளா ஆகிய மாநிலங்களில் கடந்த சில நாட்களாக பரவலாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் மேற்குக்கரையோர மாநிலங்களில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை தொடரும் என்று இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் கடந்த 3 நாட்களாக தெலுங்கானாவில் கனமழை பெய்து வருகிறது
இதனால் ஜெயசங்கர் பூபல்பள்ளி, நிசாம்பாத், ராஜண்ணா சிர்கிலா ஆகிய மாவட்டங்கள் கடும் பாதிப்பை சந்தித்துள்ளன. மாநிலத்தின் பல மாவட்டங்களுக்கு சிவப்பு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டுமே வெளியே வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் படிக்க:கனமழை எதிரொலி… அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் நாளை முதல் விடுமுறை… அறிவித்தார் தெலுங்கானா முதல்வர்!!
தலைநகர் ஐதராபாத் மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. இதனால் தலைநகரில் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால், அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.
மேலும் பல நீர்தேக்கங்களிலும் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டுள்ளன. நல்கொண்டா, பத்ராத்ரி கொதகுடம் உள்ளிட்ட மாவட்டங்களில் தொடரும் கனமழையால், ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
மேலும் படிக்க:தமிழகத்தில் இன்று கனமழை.. இந்தெந்த மாவட்ட மக்கள் உஷார்.. வானிலை அப்டேட்..
ஆறுகளில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக, கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் அப்பகுதி மக்கள் பாதுகாப்பான முகாம்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். பல்வேறு கரையோர பகுதிகள் நீரில் முழ்கி, வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன.
இடைவிடாது பெய்யும் மழை மற்றும் வெள்ளப்பெருக்கினால் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மழை வெள்ளம் சூழ்ந்த குடியுருப்பு பகுதிகளில் இருந்து மக்களை மீட்கும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது. மாநிலத்தில் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க:மேகவெடிப்பால் 15 பேர் பரிதாபமாக உயிரிழப்பு… 40 பேர் மாயம்… அமர்நாத்தில் ஏற்பட்ட துயரம்!!
வெள்ளம் சூழ்ந்த வீடுகளில் தவிக்கும் அவர்கள் தொடர்ந்து மீட்கப்பட்டு வருகின்றனர். நல்கொண்டா மாவட்டத்தில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து இருவர் உயிரிழந்துள்ளனர். அதே போல் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டு ஒருவர் உயிரிழந்தார். பல்வேறு மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கினால் தாழ்வுப்பகுதிகளில் சாலைகள் துண்டிக்கப்பட்டு, தீவுகளாக காட்சியளிக்கின்றன.
அதே போல், ஐதராபாத்தில் பல்வேறு சாலைகள் வெள்ளத்தில் மூழ்கியதில், போக்குவரத்து ஸ்தம்பித்து உள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழை காரணமாக அண்டை மாநிலங்களாக கர்நாடகா, கேரளாவிலும் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.