ஒரே பதவி ஒரே ஓய்வூதியம் திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெறும் முன்னாள் ராணுவ வீரர்களின் ஓய்வூதியம் 2019, ஜூலை 1ம் தேதி முன்தேதியிட்டு மத்திய அரசு திருத்தியுள்ளது.
ஒரே பதவி ஒரே ஓய்வூதியம் திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெறும் முன்னாள் ராணுவ வீரர்களின் ஓய்வூதியம் 2019, ஜூலை 1ம் தேதி முன்தேதியிட்டு மத்திய அரசு திருத்தியுள்ளது.
இதன் மூலம் கிடைக்கும் பணப் பலன்களால், 25 லட்சம் ஓய்வூதியதாரர்கள் பயன் பெறுவார்கள்.
பிரதமர் மோடி தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
இதற்காக மத்திய அரசுக்கு கூடுதலாக ரூ.8450 கோடி செலவாகும். 2019 ஜூலை முதல் 2022 ஜூன் மாதம் வரையிலான நிலுவைத் தொகையாக ரூ.23,638 கோடி வழங்கப்படும். இந்த திருத்தப்பட்ட ஓய்வூதியத் திட்டம் 2019,ஜூலை1ம் தேதி முதல் முன்தேதியிட்டு அமல்படுத்தப்படும் என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
2018 காலண்டர் ஆண்டு பாதுகாப்புப் படைகளில் ஓய்வு பெற்றவர்களின் சராசரி குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச ஓய்வூதியத்தின் அடிப்படையில், கடந்தகால ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியம், அதே தரவரிசையில் மீண்டும் நிர்ணயிக்கப்படும். 2019ம் ஆண்டு ஜூன் 30ம் தேதிவரை ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களுக்கும் இந்த திட்டம் பொருந்தும்.
இந்தத் திட்டத்தின் மூலம் 25.13 லட்சம் ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியம் பெறுவோர் பயன்பெறுவார்கள். இதில் 4.52 லட்சம் புதிய ஓய்வூதியதாரர்களும் அடங்கும்.
கடந்த 2015ம் ஆண்டை அடிப்படையாக வைத்து ஓரே பதவி ஓரே ஓய்வூதியம் திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. அதன்படி ஒவ்வொரு 5 ஆண்டுக்கு ஒருமுறையும் இந்தத் திட்டம் மறு ஆய்வு செய்யப்படும். அந்த வகையில் 2019ம் ஆண்டு ஜூலையில் மறு ஆய்வு செய்யப்பட்டது
2019, ஜூலை முதல் 2021, டிசம்பர் 31 வரையிலான நிலுவைத் தொகை 17 சதவீத அகவிலைப்படி அடிப்படையில் கணக்கிடப்பட்டு ரூ.19,316 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 2021, ஜூலை 31 முதல் டிசம்பர் 31ம் தேதிவரையிலான ஓய்வூதியம் என்பது 31 சதவீத அகவிலைப்படி அடிப்படையில் கணக்கிடப்பட்டுள்ளது. 2019, ஜூலை 1ம் தேதி முதல் 2022, ஜூன் 30ம் தேதிவரையிலான நிலுவைத் தொகையாக, ரூ.23,638 கோடி வழங்கப்பட உள்ளது.