ஜிபிஎஸ் ஆர்ட் பயணப் பிரியர்கள் மத்தியில் பிரபலமாக உள்ளது. 300 சைக்கிள் ஓட்டிகள் கொண்ட தி பெடல் குழுவினர் உலக சைக்கிள் தினத்தைக் கொண்டாட ஜிபிஎஸ் ஆர்ட் மூலம் சைக்கிள் படத்தை வரைந்துள்ளனர்.
மத்தியப் பிரதேசத்தில் உள்ள இந்தூரில் 300 சைக்கிள் ஓட்டுநர்கள் கொண்ட குழு உலக சைக்கிள் தினத்தை வித்தியாசமாகக் கொண்டாடியுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை இதற்காக சிறப்பு சைக்கிள் பயணம் செய்த இந்தக் குழுவினர் கூகுள் மேப்பில் சைக்கிள் வரைபடத்தை வரைந்து அசத்தியுள்ளனர்.
குளோபல் பொசிஷனிங் சிஸ்டம் (GPS) எனப்படும் ஜிபிஎஸ் தொழில்நுட்பம் மூலம் கூகுள் மேப் போன்ற புவி வரைபட செயலிகள் செயல்படுகின்றன. இதை வைத்து உருவானது தான் ஜிபிஎஸ் ஆர்ட். கூகுள் மேப்பில் குறிப்பிட்ட உருவத்தைத் வரையும் வகையில் பயணம் செய்வதுதான் ஜிபிஎஸ் ஆர்ட் (GPS art) என்று அழைக்கப்படுகிறது.
இந்த ஜிபிஎஸ் ஆர்ட் பயணப் பிரியர்கள் மத்தியில் பிரபலமாக உள்ளது. மேப்பில் பெரிய அளவில் குறிப்பிட்ட படத்தை உருவாக்க ஜிபிஎஸ் சாதனத்தின் உதவியுடன் முன்னரே தீர்மானிக்கப்பட்ட பாதையில் பயணம் செய்கின்றனர். இந்நிலையில், 45 பெண்கள் உட்பட மொத்தம் 300 சைக்கிள் ஓட்டிகள் கொண்ட தி பெடல் குழுவினர் உலக சைக்கிள் தினத்தைக் கொண்டாட ஜிபிஎஸ் ஆர்ட் மூலம் சைக்கிள் படத்தை வரைந்துள்ளனர்.
"ஜிபிஎஸ் மூலம் சைக்கிள் வடிவத்தை வரைவதற்கு ஒரு பாதையை தீர்மானித்து, அந்தப் பாதையில் 25 கிலோமீட்டர் தூரம் பணம் செய்தோம். அகலமான சாலைகள் மற்றும் குறுகிய சந்துகள் வழியாக சென்றோம். இந்த சாதனையை அடைய கடந்த நான்கு மாதங்களாக உழைத்தோம்" என குழுவின் தலைவர் அமோல் வாத்வானி தெரிவித்துள்ளார்.
"உலக மிதிவண்டி தினத்தை முன்னிட்டு ஒரு தனித்துவமான செயல்பாட்டை ஏற்பாடு செய்வதே எங்கள் நோக்கமாக இருந்தது. இந்தப் பாதை காந்தி மண்டபத்திற்கு அருகில் தொடங்கி அங்கேயே முடிந்தது" என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஏப்ரல் 2018 இல், ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை ஜூன் 3ஆம் தேதியை உலக சைக்கிள் தினமாக அறிவித்தது. ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு சைக்கிள் பயன்பாட்டை ஊக்கப்படுத்த உலக்ம முழுவதும் விதவிதமான சைக்கிள் தின நிகழ்ச்சிகள் ஒருங்கிணைப்படுகின்றன.