முதுகில் குத்திய வேட்பாளர்கள்: அருணாச்சலப்பிரதேசத்தில் காங்கிரஸ் பரிதாபம்!

By Manikanda Prabu  |  First Published Jun 3, 2024, 2:05 PM IST

அருணாச்சலப்பிரதேச மாநிலத்தில் வேட்பாளர்களை நிறுத்தக் கூட முடியாத அவல நிலைக்கு சென்ற காங்கிரஸ் கட்சி, பாஜகவுக்கு எளிதான வெற்றியை தேடித் தந்துள்ளது


நாடு முழுவதும் மக்களவைத் தேர்தலோடு சேர்த்து சில மாநிலங்களின் சட்டப்பேரவைகளுக்கும் தேர்தல் நடைபெற்றது. அந்த வகையில், வடகிழக்கு மாநிலங்களான அருணாச்சலப்பிரதேசம், சிக்கிம் ஆகிய மாநிலங்களின் சட்டப்பேரவைகளுக்கும் தேர்தல் நடைபெற்றது.

இந்த மாநில சட்டப்பேரவைகளின் பதவிக்காலம் நேற்றுடன் சட்டப்பேரவைகளின் முடிவடைவதால், அம்மாநிலங்களில் நடைபெற்ற வாக்குப்பதிவுகள் மட்டும் வாக்கு எண்ணிக்கை நேற்றே நடத்தப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதன்படி, சிக்கிமில் ஆளும் சிக்கிம் கிராந்திகாரி மோர்சா கட்சி அபார வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துள்ளது. அம்மாநிலத்தில் மொத்தமுள்ள 32 சட்டமன்றத் தொகுதிகளில் 31 தொகுதிகளில் சிக்கிம் கிராந்திகாரி மோர்சா கட்சி வெற்றி பெற்றுள்ளது. முதல்வர் பிரேம் சிங் தமாங் மீண்டும் பதவியேற்க உள்ளார்.

Latest Videos

undefined

அருணாச்சலப்பிரதேச மாநிலத்தை பொறுத்தவரை பாஜக அபாரவெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்துள்ளது. மொத்தம் உள்ள 60 சட்டப்பேரவை தொகுதிகளில், முதல்வர் பெமா காண்டு உட்பட 10 பாஜக வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். எஞ்சிய 50 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் 46 தொகுதிகளில் வெற்றி பெற்று பாஜக ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது.

அம்மாநிலத்தில் கடந்த  2019ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி 4 இடங்களில் வெற்றி பெற்றது. ஆனால், இந்த முறை காங்கிரஸ் கட்சி ஒரே ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றது. கிழக்கு காமெங் மாவட்டத்தின் பாமெங் தொகுதியில் களமிறங்கிய குமார் வை என்ற காங்கிரஸ் வேட்பாளர் மட்டுமே வெற்றி பெற்றார்.

ஒரு காலத்தில் காங்கிரஸ் கட்சியின் கோட்டையான அருணாச்சலப்பிரதேசத்தில் மொத்தம் 60 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. இதில், 60 தொகுதிகளுக்குமே பாஜக வேட்பாளர்களை நிறுத்தியது. ஆனால், 19 தொகுதிகளில் மட்டுமே வேட்பாளர்களை நிறுத்தி, மீதமுள்ள 41 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை நிறுத்த முடியாத அவல நிலைக்கு காங்கிரஸ் கட்சி சென்றுள்ளது.

முன்னதாக, இந்த தேர்தலில் போட்டியிடும் 35 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கட்சி வெளியிட்டது. அதில் 10 பேர் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. மீதமுள்ளவர்களில் 5 பேர் வேட்புமனுவை வாபஸ் பெற்றனர். மற்றொரு வேட்பாளரான சோம்பா வாங்சா, கனுபாரியில் வேட்பு மனுக்கள் பரிசீலனைக்குப் பிறகு பின்வாங்கி பாஜகவில் சேர்ந்தார். இதன் விளைவாக, பாஜகவின் 10 வேட்பாளர்கள் போட்டியின்றி வெற்றி பெற்றனர்.

சிக்கிம் அரசியலில் மற்றொரு மகுடம்: எலைட் கிளப்பில் இணைந்த சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா!

இதனிடையே, பாஜகவுடன் நெருக்கமாக இருந்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சீனியர்கள் பலரும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். அதேபோ, வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டு தேர்தலில் போட்டியிடாத 10 பேரும் கட்சியில் இருந்து 6 ஆண்டுகளுக்கு நீக்கப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கையை காங்கிரஸ் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழு எடுத்துள்ளது.

“இந்த வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று கட்சிக்கு தெரிவிக்கவில்லை. அவர்கள் கடைசி நேரம் வரை காங்கிரஸ் சீட்டுக்காக போராடினார்கள். கடைசியில் சீட் கிடைத்ததும் போட்டியிடவில்லை.” என காங்கிரஸ் மூத்த நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

கடைசி நேரத்தில் வேட்பாளர்கள் பின்வாங்கியதற்கு பண பலமே காரணம் என அம்மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவரும், முன்னாள் முதல்வருமான நபம் துகி தெரிவித்துள்ளார். நாங்கள் சந்தேகத்திற்கு இடமின்றி ஏமாற்றமடைந்துள்ளோம், ஆனால் மனச்சோர்வடையவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

click me!