வாக்குப்பதிவில் உலக சாதனை: எழுந்து நின்று கைதட்டிய தேர்தல் ஆணையர்கள்!

By Manikanda Prabu  |  First Published Jun 3, 2024, 2:35 PM IST

வாக்குப்பதிவில் உலக சாதனை படைத்த இந்திய வாக்காளர்களை கவுரவிக்கும் விதமாக தேர்தல் ஆணையர்கள் எழுந்து நின்று கைதட்டினர்


நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் உள்ள 543 மக்களவைத் தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக நடைபெற்று முடிந்துள்ளது. இறுதி மற்றும் 7ஆவது கட்ட வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. மக்களவைத் தேர்தலோடு சேர்த்து ஆந்திரா, அருணாச்சல பிரதேசம், ஒடிசா மற்றும் சிக்கிம் ஆகிய மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தலும் நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்படவுள்ளதால் அதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் உள்பட இந்திய தேர்தல் ஆணையர்கள் செய்தியாளர்களை சந்தித்தனர். 

Tap to resize

Latest Videos

undefined

அப்போது, இந்தியாவில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் மொத்தமாக 64.2 கோடி பேர் வாக்களித்து உலக சாதனை படைத்துள்ளனர் என கூறிய தேர்தல் ஆணையர்கள், ஜனநாயக கடமையாற்றிய வாக்காளர்களை கவுரவிக்கும் விதமாக எழுந்து நின்று கைதட்டி தேர்தல் ஆணையர்கள் வணக்கம் தெரிவித்தனர்.

இந்த எண்ணிக்கை அனைத்து ஜி7 நாடுகளின் சராசரி வாக்களிப்பு எண்ணிக்கையை விட 1.5 மடங்கு அதிகமாகும்; ஐரோப்பிய யூனியனில் உள்ள 27 நாடுகளின் வாக்களிப்பு எண்ணிக்கையை விட 2.5 மடங்கு அதிகமாகும் எனவும் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார்  தெரிவித்தார். 

தொடர்ந்து பேசிய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் , வாக்கு எண்ணிக்கையின்போது தபால் வாக்குகள் முதலில் எண்ணத் தொடங்கப்படும். தபால் வாக்குகளை எண்ணத் தொடங்கி 30 நிமிடங்களுக்கு பிறகே, வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்படும் என்றார்.

தேர்தல் பணியாளர்களின் சரியான பணிகளின் காரணமாக 2024 தேர்தலில் 39 இடங்களில் மட்டுமே மறுவாக்குப்பதிவு நடைபெற்றது. அதுவும் வெறும் 2 மாநிலங்களில்தான். இதுவே, கடந்த 2019 தேர்தலில் 540 இடங்களில் மறுவாக்குப்பதிவு நடைபெற்றது என ராஜீவ் குமார்  தெரிவித்தார். ஜம்மு-காஷ்மீர் சட்டமன்றத் தேர்தல் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், அதற்கான நடைமுறை கூடிய விரைவில் தொடங்கும் என்றார்.

முதுகில் குத்திய வேட்பாளர்கள்: அருணாச்சலப்பிரதேசத்தில் காங்கிரஸ் பரிதாபம்!

தேர்தலின் போது நடக்கும் போலியான விஷயங்களை நாம் புரிந்து கொள்ளத் தவறிவிட்டோம். ஆனால் நாம் இப்போது புரிந்து கொண்டோம் என ராஜீவ் குமார் கூறினார். மேலும், காணாமல் போன தேர்தல் ஆணையர்கள் என சமூக வலைதளங்களில் மீம்ஸ் பகிரப்படுவதை பார்த்ததாக குறிப்பிட்ட தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், ‘நாங்கள் காணாமல் போகவில்லை, இங்கே தான் இருக்கிறோம்’ என கலகலப்பாக தெரிவித்தார்.

மக்களவைத் தேர்தலுக்காக 135 சிறப்பு ரயில்கள் விடப்பட்டன; 1692 விமான போக்குவரத்துக்கள்; 4 லட்சம் வாகனங்கள் பயன்படுத்தப் பட்டதாக தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் கூறினார். தேர்தல் நடத்தை விதிகளின் போது, ரூ.10,000 கோடி மதிப்பிலான இலவசங்கள், போதைப்பொருட்கள், மதுபானங்கள், ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டன. தேர்தல் பயிற்சியில் 68,000 கண்காணிப்பு குழுக்கள், 1.5 கோடி பாதுகாவலர்கள் ஈடுபடுத்தப்பட்டனர் எனவும் ராஜீவ்குமார் தெரிவித்தார்.

“இந்த மக்களவைத் தேர்தலில் மறு வாக்குப்பதிவுகள், வன்முறை, வாக்குக்கு பணம் கொடுக்கும் சம்பவங்கள், செயற்கை நுண்ணறிவு மூலமாக போலி செய்தி பரப்புதல் போன்றவை குறைந்துள்ளன. வாக்காளர்களின் எண்ணிக்கை, அனைத்து தரப்பினரும் பங்கெடுத்தது, தொழில்நுட்ப பயன்பாடு, பறிமுதல்கள் போன்றவை அதிகரித்துள்ளன.” என தேர்தல் ஆணையர்கள் தெரிவித்தனர்.

click me!