தெலுங்கு தேசம் கட்சியுடன் கூட்டணி அமைக்கவுள்ளதாக ஜனசேனா கட்சித் தலைவரும், நடிகருமான பவன் கல்யாண் அறிவித்துள்ளார்.
ஆந்திர மாநிலத்தில் இளைஞர்களின் வேலை வாய்ப்புக்காக திறன் மேம்பாட்டு கழகத்தில் முறைகேடு நடந்ததாக கூறி அம்மாநில முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசக் கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டுள்ளார். அவரை 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, ராஜமுந்திரி சிறையில் சந்திரபாபு நாயுடு அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், சிறையில் சந்திரபாபு நாயுடுவை நடிகரும், ஜனசேனா கட்சித் தலைவருமான பவன் கல்யாண் நேரில் சந்தித்தார். அவருடன் சந்திரபாபு நாயுடுவின் மைத்துனர் இந்துப்பூர் எம்எல்ஏ நந்தமுரி பாலகிருஷ்ணாவும் உடன் சென்றார்.
undefined
ராஜீவ் கொலை வழக்கில் விடுதலையானவர்களை இலங்கைக்கு அனுப்ப நடவடிக்கை - மத்திய அரசு!
அதன்பின்னர், நந்தமுரி பாலகிருஷ்ணா, சந்திரபாபு நாயுடுவின் மகன் நாரா லோகேஷ், பவன் கல்யாண் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, தெலுங்கு தேசம் கட்சியுடன் கூட்டணி அமைக்கவுள்ளதாக ஜனசேனா கட்சித் தலைவரும், நடிகருமான பவன் கல்யாண் அறிவித்துள்ளார். எதிர்வரவுள்ள தேர்தலில் ஜனசேனாவும், தெலுங்கு தேசமும் இணைந்து போட்டியிடும். இந்த முடிவு எங்கள் கட்சியின் அரசியல் எதிர்காலம் கருதி எடுக்கப்பட்டது அல்ல; ஆந்திராவின் எதிர்காலம் கருதி எடுக்கப்பட்டது எனவும் அவர் கூறினார்.
ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஆந்திராவை ஆளும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் அரசாங்கத்தை கடுமையாக சாடிய பவன் கல்யாண், அமலாக்க இயக்குநரகம், சிபிஐ உள்ளிட்ட வழக்குகலை கையாளும், வெளியூர் செல்லக் கூட அனுமதி தேவைப்படும் ஒருவர்தான் சந்திரபாபு நாயுடுவின் கைதுக்கு காரணம் என ஜெகன் மோகனை கடுமையாக விமர்சித்தார்.
முன்னதாக, சந்திரபாபு நாயுடு கைதுக்கு ஜன சேனா கட்சித் தலைவர் பவன் கல்யாண் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார். கைது செய்யப்பட்ட சந்திரபாபு நாயுடுவை சந்தித்த அனுமதி மறுக்கப்பட்டதால், சாலை மறியலிலும் பவன் கல்யாண் ஈடுபட்டார். ஆந்திர மாநிலத்துக்கு அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.