ராமர் கோயில் கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்வது பற்றி கட்சி முடிவெடுக்கும்: டி.கே.சிவக்குமார்!

By Manikanda Prabu  |  First Published Jan 7, 2024, 3:18 PM IST

ராமர் கோயில் கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்வது பற்றி கட்சி முடிவெடுக்கும் என கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்


உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் புதிதாக கட்டப்பட்டு வரும் ராமர் கோயில் வருகிற 22ஆம் தேதி திறக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்படவுள்ளது. அன்றைய தினமே ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார்.

கும்பாபிஷேக விழாவுக்கு முக்கிய பிரமுகர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், சோனியா காந்தி, மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோருக்கு அயோத்தி ராமர் கோவில் கமிட்டியின் தலைவர் நிருபேந்திர மிஸ்ரா அழைப்பிதழ்களை அனுப்பியுள்ளார். ஆனால், விழாவில் கலந்து கொள்வது குறித்து காங்கிரஸ் கட்சி இன்னும் முடிவெடுக்கவில்லை.

Tap to resize

Latest Videos

undefined

ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவை பாஜக அரசியலாக்கப் பார்க்கிறது எனவும், கட்சி சார்ந்த மத விழாவாக அதனை முன்னெடுப்பதாகவும் எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டி வரும் நிலையில், ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்ளலாமா வேண்டாமா என்பதில் காங்கிரஸ், கூட்டணி கட்சிகள் இடையே குழப்பம் நிலவி வருகிறது.

காங்கிரஸின் மேற்குவங்க பிரிவு இந்த நிகழ்வில் கலந்து கொள்வதற்கு எதிராக இருப்பதாக தெரிகிறது. இருப்பினும், தேர்தல் தோல்விகளைத் தவிர்க்க, உத்தரப் பிரதேசம் மற்றும் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவர்கள் விழாவில் கலந்து கொள்வதில் ஆர்வமாக உள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ராமர் கோவில் நிகழ்ச்சியில் மூத்த தலைவர்கள் கலந்து கொள்வார்களா என்ற கேள்விக்கு பதிலளித்த கே.சி.வேணுகோபால், ராமர் கோயில் நிகழ்வை பாஜக அரசியலாக்குகிறது. அக்கட்சியின் வலையில் காங்கிரஸ் விழாது. எங்களின் நிலைப்பாட்டை காங்கிரஸ் ஏற்கனவே தெளிவுபடுத்தி விட்டது என்றார். அதேசமயம், கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்வது குறித்த நேரடியான கேள்விக்கு பதிலளிக்காமல் அக்கட்சியின் அகில இந்திய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மறுத்து விட்டார்.

இந்த நிலையில், ராமர் கோயில் கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்வது பற்றி கட்சி மேலிடம் முடிவெடுக்கும் என கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார். “எனக்கோ, முதல்வருக்கோ அழைப்பு வரவில்லை. ஆனால், காங்கிரஸ் அகில இந்திய தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே அழைக்கப்பட்டுள்ளார். விழாவில் கலந்து கொள்வது குறித்து கட்சி முடிவெடுக்கும்.” என அவர் கூறினார்.

கடவுள் ராமர் சர்ச்சை: தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ. மீது மேலும் 3 வழக்குகள் பதிவு!

அதேசமயம், தன்னை ஒரு ராம பக்தராகவும் டி.கே.சிவக்குமார் முன்னிறுத்திக் கொண்டார். “நான் ஒரு இந்து; நான் ஒரு ராம பக்தன்; நான் ஒரு அனுமன் பக்தன். நாங்கள் அனைவரும் இங்கிருந்து பிரார்த்தனை செய்கிறோம். அது நமக்குள்ளும், நம் இதயத்திலும் உள்ளது. இங்கு அரசியல் செய்வதற்கு எதுவும் இல்லை.” என்று அவர் கூறினார்.

காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற தலைவர் சோனியா காந்தி மற்றும் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே ஆகியோருக்கு கும்பாபிஷேகத்திற்கான அழைப்பிதழ் சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இருப்பினும், அவர்கள் கலந்து கொள்வார்களா இல்லையா என்பது இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிபடுத்தப்படவில்லை.

பீகார் முதல்வரும், ஐக்கிய ஜனதாதள தலைவருமான நிதிஷ் குமார் மற்றும் சிபிஐ (எம்) பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளன. ஆனால், ராமர் கோயில் கும்பாபிஷேக நிகழ்வு மத அரசியல் என கூறி அந்த அழைப்பை சிபிஐ (எம்) நிராகரித்துள்ளது. நிதிஷ் குமார் கலந்து கொள்வது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

click me!