
கடுமையான மன அழுத்தம் காரணமாக யாராவது ஒருவர் தற்கொலை செய்து கொள்ள முயன்றால் அவருக்கு தண்டனை விதிப்பதை ரத்து செய்யும் வகையில் கொண்டுவரப்பட்டுள்ள சட்ட மசோதாவுக்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.
தற்போதுள்ள, மனநல சுகாதார பாதுகாப்பு சட்டத்தில் யாராவது ஒருவர் தற்கொலைக்கு முயன்றால் அவர்களுக்கு இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் சிறை தண்டனையோ, அபராதமோ விதிக்கப்படுகிறது.
ஆனால் தற்போது நிறைவேற்றப்பட்டுள்ள இந்த புதிய மசோதாவில் கடுமையான மன அழுத்தம் காரணமாக தற்கொலை முயற்சியில் ஈடுபட்டால் அவர்களுக்கு தண்டனை விதிப்பதை இந்த சட்டம் தடுக்கிறது.
மேலும், மனநலம் பாதித்தவர்களுக்கு அரசு சார்பில் தரமான சிகிச்சை கிடைக்கவும், ஒருவர் தனக்கு மன நலம் பாதிக்கப்பட்டால் எந்த மாதிரியான சிகிச்சை அளிக்கப்படவேண்டும் என்கிற உரிமையை அவருக்கு வழங்கிடவும் இந்த சட்டம் வகை செய்கிறது.
மத்திய அரசு கொண்டு வந்த மனநல சுகாதார பாதுகாப்பு மசோதா கடந்த ஆண்டு பாராளுமன்ற இரு அவைகளிலும் தாக்கல் செய்யப்பட்டது. கடந்த ஆகஸ்டு மாதமே இந்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டு விட்டது.
இதனைத் தொடர்ந்து இந்த மசோதா நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு குரல் ஓட்டெடுப்பு மூலம் நேற்று நிறைவேற்றப்பட்டது.
இந்த மசோதா குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி.நட்டா, தற்போது நிறைவேற்றப்பட்டுள்ள சட்ட மசோதா மனநலம் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் மறு வாழ்வுக்காகவே கொண்டு வரப்பட்டதாக தெரிவித்தார்.