விவசாயிகளின் தற்கொலையைத் தடுக்க செயல் திட்டம் உள்ளதா? - மத்திய அரசுக்கு கெடு விதித்த உச்ச நீதிமன்றம்

 
Published : Mar 27, 2017, 08:07 PM ISTUpdated : Sep 19, 2018, 03:04 AM IST
விவசாயிகளின் தற்கொலையைத் தடுக்க செயல் திட்டம் உள்ளதா? - மத்திய அரசுக்கு கெடு விதித்த உச்ச நீதிமன்றம்

சுருக்கம்

Is there an action plan to prevent suicide of farmers

நாட்டில் ஏராளமான விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வது என்பது மிகவும் தீவிரமான, கவலைதரும் விஷயம். இதைத் தடுக்கவும், கையாளவும் என்ன வகையான செயல்திட்டங்களை வைத்துள்ளீர்கள் என்பதை 4 வாரங்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று மத்தியஅரசுக்கு உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

நாட்டில் பருவமழை பொய்த்துப் போனதால், பல்வேறு மாநிலங்களில் வறட்சி நிலவுகிறது. இதனால், வேளாண் தொழிலில் நஷ்டமடைந்து மனமுடைந்த விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கின்றனர். தமிழகத்திலும் விவசாயிகள் தற்கொலையைத் தொடர்ந்து, டெல்லியில் தமிழக விவசாயிகள், நிவாரணத் தொகை கேட்டு, கடந்த ஒருவாரத்துக்கு மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், ‘சிட்டிசன் ரிசோர்ஸ் அன்ட் ஆக்சன் அன்ட் இனிசியேட்டிவ்’ என்ற தொண்டு நிறுவனம் குஜராத் மாநிலத்தில் மட்டுமல்லாது, நாட்டில் விவசாயிகள் தற்கொலையைத் தடுக்க அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் கேட்டு உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்து இருந்தது.

இந்த மனு தலைமை நீதிபதி ஜே.எஸ். கேஹர், நீதிபதிகள் டி.ஒய். சந்திரசூத், எஸ்.கே. கவுல் அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் காலின் கோன்சல்வேஸ்ஆஜராகி, “ நாட்டில் இதுவரை 3 ஆயிரம் விவசாயிகளுக்கு மேல் தற்கொலை செய்து கொண்டு இருக்கிறார்கள். தற்கொலைக்கான உண்மையான காரணத்தை அரசு புரிந்து கொண்டு அதை தீர்க்க வேண்டும், அதற்கு முறையான கொள்கையை உருவாக்க வேண்டும்’’ என்று வாதிட்டார்.

அப்போது, தலைமை நீதிபதி ஜே.எஸ். கேஹர்,  நீதிபதிகள் டி.ஒய். சந்திரசூத், எஸ்.கே. கவுல் , “ நாட்டில் விவசாயிகள் தற்கொலை என்ற இறுதிக்கட்ட முடிவு எடுப்பது வேதனை அளிக்கிறது. விவசாயிகள் தற்கொலையை எனும் முடிவை எடுப்பதற்கு ஆணிவேராக இருக்கும் காரணங்களை கண்டுபிடித்து களைய வேண்டும். அதற்கு என்ன திட்டங்கள் வைத்து உள்ளீர்கள்?’’ என்றனர்.

மத்தியஅரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிட்டர் ஜெனரல் பி.எஸ். நரசிம்மாகூறுகையில், “ விவசாயிகள் தற்கொலையைத் தடுக்க அனைத்து வகையான நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருகிறது. விவசாயிகளிடம் இருந்து உணவு தானியங்களை கொள்முதல் செய்கிறது, காப்பீடு அளவை அதிகரித்துள்ளது, கடன் அளிக்கிறது, பயிர் இழப்பீடு தொகை அளிக்கிறது.

விவசாயிகளுக்காக பல திட்டங்களை அரசு வகுத்துள்ளது. 2015ம் ஆண்டு அரசு கொண்டு வந்த காப்பீடு திட்டம், விவசாயிகள் தற்கொலையை பெருமளவு குறைத்துள்ளது.  இருப்பினும், விவசாயிகள் தற்கொலையைத் தடுக்க முழுமையாக கொள்கையை அரசு வகுக்கும். அவர்களுக்கு  துணையாக அரசு இருக்கும்’’ என்றார்.

அதன்பின் நீதிபதிகள் டி.ஒய். சந்திரசூத், எஸ்.கே. கவுல் பிறப்பித்த உத்தரவில், “ விவசாயம் என்பது ஒரு மாநிலம் சம்பந்தப்பட்ட விஷயம். இதில் மாநிலங்களோடு  ஒத்துழைப்போடு மத்திய அரசு செயல்பட்டு, விவசாயிகள் தற்கொலையைத் தடுக்கவும், அதற்கான ஆணிவேரைக் கண்டறிந்து களையவும் ஒரு செயல் திட்டத்தை வகுக்க வேண்டும். விவசாயிகள் தற்கொலை என்பது மிகவும் கவலை கொள்ளத்தக்க, தீவிரமான விசயம். முக்கியத்துவம் வாய்ந்தது. தற்கொலை செய்து கொண்ட விவசாயிகள் குடும்பத்துக்கு இழப்பீடு கொடுப்பது மட்டும் தீர்வு அல்ல.

விவசாயிகள் தற்கொலையைத் தடுக்க மாநில அரசுகள் மூலம் என்ன வகையான செயல் திட்டத்தை செயல்படுத்த இருக்கிறீர்கள் என்பதை அடுத்த 4 வாரங்களுக்குள் விளக்கமாக அளிக்க வேண்டும்’’ என தெரிவித்தனர். 

PREV
click me!

Recommended Stories

தண்ணீர் பிரச்சினை தீர்ந்தது! 4 ஆண்டுகளுக்குப் பிறகு முடியை இறக்கி சபதத்தை நிறைவேற்றிய பாஜக எம்.எல்.ஏ!
இரவு 9 மணி.. ஹோட்டலில் துப்பாக்கி சுடும் வீராங்கனை கதறல்.. நடந்தது என்ன? அடுத்தடுத்து வெளியாகும் அதிர்ச்சி தகவல்