
அரசின் சமூக நலத்திட்டங்களைப் பெற மக்களுக்கு ஆதார் எண்ணை கட்டாயமாக்க கூடாது என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட ஆதார் திட்டத்தை பாரதியஜனதாஆட்சி, கெட்டியாகப் பிடித்துக்கொண்டது. அனைத்து வகையான அரசின் நலத்திட்டங்களுக்கும் ஆதார் எண்ணை கட்டாயப்படுத்தி வருகிறது.
சமையல் கியாஸ் மானியம் பெறுவதற்கு, ரேஷன் கார்டு பெற வருமான வரி தாக்கல் செய்ய, ‘பான்கார்டு’ பெற, புதிய வாகனங்கள் பதிவு செய்ய, வங்கி கணக்கு தொடங்க, செல்போன் இணைப்புக்கு, ‘டிரைவிங் லைசென்ஸ்ஸ்’ என அனைத்துக்கும் ஆதார் எண்ணை மத்திய அரசு கட்டாயப்படுத்தி இருக்கிறது.
நலத்திட்டங்களை பெறுவதற்கு ஆதாரை எண் கட்டாயப்படுத்துவதை எதிர்த்தும், தனிநபரின் விவரங்கள் திருடப்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறி உச்ச நீதிமன்றத்தில் ஏராளமானோர் வழக்கு தொடர்ந்தனர்.
அதை கண்டுகொள்ளாமல், நிதி மசோதா மூலம் ஆதார் மசோதாவை கொண்டு வந்து நாடாளுமன்றத்திலும் நிறைவேற்றி அரசு சட்டமாக்கியுள்ளது.
இந்நிலையில், அரசின் சலுகைகளையும், உதவிகளையும் பெற ஆதார் கட்டாயம் என்ற அரசின் உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்த வழக்கு நேற்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ். கேஹர், நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூத், எஸ்.கே. கவுல் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரணை செய்தது.
அப்போது மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஷியாம் திவான் ஆஜராகி வாதாடினார். அப்போது அவர் வாதிடுகையில், “ அரசின் நலத்திட்டங்களைப் பெறுவதற்கு ஆதார் எண்ணை மக்களுக்கு கட்டாயமாக்க கூடாது, அது விருப்பத்தின் அடிப்படையில்தான் இருக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் இதற்கு முன் மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2015ம் ஆண்டு, ஆகஸ்ட்11-ந்தேதி உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், அரசின் அனைத்து வகையான நலத்திட்டங்களைப் பெறுவதற்கு ஆதார் எண்ணை கட்டாயமாக்க கூடாது. இந்த திட்டத்தின் கீழ் ஒரு நபரின் தனிப்பட்ட விவரங்களை அதிகாரிகள் யாரிடமும் பகிர்ந்து கொள்ளக்கூடாது என்று உத்தரவிட்டது.
அதன்பின் 2015ம் ஆண்டு அக்டோபர் 11-ந்தேதி தலைமை நீதிபதி எச்.எல். தத்து தலைமையிலான அமர்வு பிறப்பித்த உத்தரவில், “ அரசின் நலத்திட்டங்களையும் பெறவும், 100 நாள் வேலைதிட்டம், ஓய்வூதியம் திட்டம்,ஜன்தன் திட்டம் ஆகியவற்றுக்கு ஆதார் கார்டை மக்களின் விருப்பத்தின் அடிப்படையில் பயன்படுத்தலாம். இது குறித்து தீவிரமாக விசாரிக்க பெரிய அமர்வு ஒன்று அமைக்க வேண்டும் என்று அப்போது உத்தரவிடப்பட்டு இருந்தது’’ என்று தெரிவித்தார்.
இதையடுத்து தலைமை நீதிபதி ஜே.எஸ். கேஹர், நீதிபதிகள் டி.ஒய். சந்திரசூத், எஸ்.கே. கவுல் பிறப்பித்த உத்தரவில், “ அரசின் நலத்திட்டங்களைப் பெற மக்களுக்கு ஆதார் எண்ணை கட்டாயமாக்க கூடாது. அதேசமயம், நலத்திட்டங்கள் அல்லாதவற்றுக்கு ஆதார் எண்ணை அரசு கேட்கலாம்.
ஆதார் எண் கொடுக்கும் போது,தனிநபரின் உரிமை, விவரங்கள் திருடப்படுவதற்கு சாத்தியம் உள்ளது எனக் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கை 7 பேர் கொண்ட பெரிய அமர்வுக்கு மாற்றுவது அவசியமானதுதான். ஆனால், அது இப்போதுள்ள நிலையில் சாத்தியமில்லை ’’ எனத் தெரிவித்தனர்.