நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர் இன்று தொடங்கியுள்ளது. இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மஹுவா மொய்த்ராவுக்கு எதிரான அறிக்கை இன்று சமர்ப்பிக்கப்படவில்லை
ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலைகளுக்கு மத்தியில் நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர் டிசம்பர் 4ஆம் தேதி (இன்று) கூடியுள்ளது. இக்கூட்டத்தொடரில் ஏற்கனவே சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஆம் ஆத்மி மாநிலங்களவை எம்.பி. ராகவ் சத்தாவுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அவருக்கு எதிராக சுமத்தப்பட்ட இரண்டு குற்றச்சாட்டுகளில் அவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டாலும், அவரது சஸ்பெண்ட் காலம் போதுமானது என சிறப்புரிமைக் குழு கூறியதையடுத்து அவர் மீண்டும் மாநிலங்களவைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். விதி மீறல் மற்றும் தவறான நடத்தைக்காக கடந்த ஆகஸ்ட் மாதம் ராகவ் சத்தா அவையில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். டெல்லியின் தேசிய தலைநகர் பிரதேசம் (திருத்தம்) மசோதா, 2023க்கு எதிராக ராகவ் சத்தா கொண்டு வந்த தீர்மானத்தில் தங்களது கையெழுத்து போலியாக இடப்பட்டுள்ளதாக அதிமுக மாநிலங்களவை எம்.பி., தம்பிதுரை உள்பட 4 எம்.பி.க்கள் தங்களின் சிறப்புரிமைகளை மீறியதாக புகார் அளித்தத்கையடுத்து, அவர் மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டு அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
undefined
மிசோரமில் ஆட்சியமைக்கும் ஜோரம் மக்கள் இயக்கம்!
அதேபோல், நாடாளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்யப்படும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட திரிணாமூல் எம்.பி. மஹுவா மொய்த்ராவுக்கு எதிரான அறிக்கையும் இன்று சமர்ப்பிக்கப்படவில்லை. நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்புவதற்கு லஞ்சம் பெற்றதாக திரிணாமூல் காங்கிரஸ் கட்சி எம்.பி. மஹுவா மொய்த்ரா குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ளார். இதுகுறித்து, சபாநாயகர் உத்தரவின் பேரில், நாடாளுமன்ற ஒழுங்கு நடவடிக்கைக் குழு விசாரணை மேற்கொண்டது. இக்குழுவின் முன்பு விசாரணைக்கு ஆஜராகிய மஹுவா மொய்த்ரா, கேவலமான கேள்விகளை கேட்பதாக கூறி விசாரணையில் இருந்து பாதியிலேயே வெளிநடப்பு செய்தார் என்பது நினைவுகூரத்தக்கது.
இன்றைய நாடாளுமன்றக் கூட்டத்தொடரின் போது, உத்தரகாண்ட் சுரங்கத்தினுள் 41 தொழிலாளர்கள் சிக்கிய விவகாரம் குறித்து சிபிஐஎம் கேள்வி எழுப்பியது. மேலும், கத்தாரில் மரண தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் கடற்படை வீரர்களை மீண்டும் அழைத்து வருவதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும் என காங்கிரஸ் எம்.பி. ஆதிர் ரஞ்சன் சவுத்ரி வலியுறுத்தி பேசினார்.
இன்று தொடங்கியுள்ள நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் வருகிற 22ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. மொத்தம் 19 நாட்கள் நடைபெறவுள்ள கூட்டத் தொடரில் 15 அமர்வுகள் நடைபெறவுள்ளன. இக்கூட்டத்தொடரில் 18 மசோதாக்களை தாக்கல் செய்ய உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
அடுத்த ஆண்டு மக்களவை தேர்தல் நடைபெறவுள்ளதால் இந்த ஆண்டில் நடைபெறும் கடைசி முழு அமர்வு இதுவாகும். அடுத்த ஆண்டு பிப்ரவரியில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது. எனவே, இந்த கூட்டத்தொடரில் முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.