நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் இன்று தொடங்கி ஐந்து நாட்கள் நடைபெறவுள்ளது
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் சமீபத்தில் நிறைவடைந்த நிலையில், செப்டம்பர் 18 முதல் 22 வரை நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டம் நடைபெறும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி, நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் இன்று கூடவுள்ளது. இந்த ஐந்து நாள் சிறப்பு அமர்வு தற்போதைய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு விடை கொடுக்கும் எனவும், செப்டம்பர் 19 அன்று விநாயக சதுர்த்தியன்று புதிய நாடாளுமன்றக் கட்டிடம் செயல்பாட்டுக்கு வரும் எனவும் தெரிகிறது.
பிரதமர் மோடி நாடாளுமன்ற மக்களவையில் இன்று காலை 11 மணிக்கு உரையாற்றுகிறார். சிறப்பு அமர்வின் முதல் நாளான இன்று, இரு அவைகளும் சுதந்திரத்திற்கு முன்னும் பின்னும் பழைய பாராளுமன்ற கட்டிடத்தின் பங்கு மற்றும் முக்கியத்துவம் குறித்து விவாதிக்க வாய்ப்புள்ளதாகவும், அடுத்த நாள், புதிய கட்டிடத்திற்கு அவை நடவடிக்கைகளை மாற்றுவதற்கு முன், மத்திய மண்டபத்தில் கூட்டுக் கூட்டம் நடைபெற வாய்ப்புள்ளதாகவும் இதுகுறித்த விவரம் அறிந்த தகவல்கள் கூறுகின்றன.
undefined
முன்னதாக, குடியரசு துணைத் தலைவரும், மாநிலங்களவைத் தலைவருமான ஜக்தீப் தன்கர் இன்று புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தின் கஜ துவாரத்தில் தேசியக் கொடியை ஏற்றினார். நாடாளுமன்ற மக்களவை, மாநிலங்களவை பணியாளர்களுக்கு புதிய சீருடை வழங்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ தகவலின்படி, தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் பிற தேர்தல் ஆணையர்களின் நியமனம், சேவை நிபந்தனைகள் மற்றும் பதவிக் காலம் ஆகியவற்றை ஒழுங்குபடுத்தும் மசோதா உட்பட நான்கு மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டு விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படும் என தெரிவிக்கப்படுள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதம் 3ஆம் தேதி ராஜ்யசபாவில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட ‘வழக்கறிஞர்கள் (திருத்தம்) மசோதா, 2023’ மற்றும் ‘பத்திரிகைகள் மற்றும் பதிவுசெய்தல் மசோதா, 2023’ ஆகியவையும் எடுத்துக் கொள்ளப்படும். 'தபால் அலுவலக மசோதா, 2023' மக்களவையில் பட்டியலிடப்பட்டுள்ளது. இந்திய தபால் அலுவலக சட்டம், 1898 ஐ ரத்து செய்யும் இந்த மசோதா முன்னதாக ராஜ்யசபாவில் கடந்த ஆகஸ்ட் மாதம் 10ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டது.