ரயில் மோதியதில் துண்டு, துண்டாக வெட்டி எறியப்பட்ட 61 பேர்… பஞ்சாபில் நடந்த கோர விபத்து… எங்கும் மரண ஓலம்…

By Selvanayagam PFirst Published Oct 20, 2018, 6:36 AM IST
Highlights

அமிர்தசரசில் நிகழ்ந்த ரயில் விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 61 ஆக உயர்ந்துள்ளது. 70 க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த கோர சம்பவம்நாட்டையே உலுக்கியுள்ளது.

பஞ்சாப் மாநிலம்  அமிர்தசரஸ் நகரில், ஜோடா படாக் பகுதியில், ரயில்வே தண்டவாளங்களை ஒட்டிய பகுதியில் உள்ள இடத்தில், நேற்று மாலை தசரா பண்டிகை கொண்டாட்டம் நடந்தது. இதில், ராவணன் உருவ பொம்மையை எரிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

அப்போது மக்கள் உற்சாகத்தில் இருந்த பட்டாசுகளை வெடித்து மகிழ்ந்தனர். அங்கு ஆயிரக்கணக்கானோர் திரண்டிருந்ததால் நூற்றுக்கும் மேற்பட்டோர் அருகே இருந்த ரயில்வே தண்டவாளத்தில் நின்றிருந்தனர். ஒரு பக்கம் பயங்கர வெடிச்சத்தம் மற்றொரு புறம் ராவண வதம் நிகழ்ந்ததால் மக்களின் உற்சாகக் குரல் என அந்த இடமே கொண்டாட்டத்தில் திளைத்தது.

அப்போது, தண்டவாளத்தில் அமிர்தசரஸ் பயணிகள்  ரயில், எச்சரிக்கை ஒலியை எழுப்பியபடி, அசுர வேகத்தில் வந்தது. பட்டாசுகள் வெடித்ததால், ரயிலின் எச்சரிக்கை ஒலி, பொது மக்களுக்கு கேட்கவில்லை.

சில நொடிகளில், அந்த பகுதியை கடந்த, அந்த ரயில், தண்டவாளம் மீது நின்றிருந்தோரை நசுக்கி தள்ளியபடி சென்றது. இந்த துயர சம்பவத்தில், 61 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் பலரது நிலை கவலைக்கிடமாக உள்ளதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. தசரா பண்டிகையின்போது நடந்த இந்த சோக சம்பவம், நாடு முழுவதும் மக்களிடையே, அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளது.

இந்த விபத்தில் பலியானோர் குடும்பங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பஞ்சாப் முதலமைச்சர்  அமரீந்தர் சிங் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். இந்த விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு மாநில அரசு சார்பில் தலா 5 லட்சம் ரூபாயும், மத்திய அரசு சார்பில் 2 லட்சம் ரூபாயும் நிதி உதவி அறிவிக்கப்பட்டுள்ளது.

ரெயில் விபத்தில் பலியானோருக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் பஞ்சாப்பில் இன்று அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. அமெரிக்கா சென்றிருந்த ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் விபத்து குறித்த தகவல் அறிந்ததும் உடனடியாக இந்தியா திருப்புகிறார்.

click me!