அயோத்திக்குள் அதிரடியாக நுழைந்த பாகிஸ்தான் தீவிரவாதிகள்... உ.பி.யில் உச்சகட்ட பாதுகாப்பு..!

By Thiraviaraj RMFirst Published Dec 26, 2019, 12:00 PM IST
Highlights

பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாதிகள் 7 பேர் நேபாள எல்லை வழியாக கோரக்பூர் மற்றும் அயோத்தியில் ஊடுருவி உள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
 

அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய நிலத்தில் ராமர் கோவில் கட்டலாம் என உச்சநீதிமன்றம் கடந்த மாதம் 9-ம் தேதி வரலாற்று தீப்பை அளித்தது. இதற்காக 3 மாதங்களுக்குள் ஒரு அறக்கட்டளையை ஏற்படுத்தவும், முஸ்லிம் தரப்பினர் புதிதாக மசூதி கட்டிக் கொள்வதற்கு அயோத்தி நகரிலேயே 5 ஏக்கர் நிலத்தை ஒதுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மறு ஆய்வு மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டன.

இதற்கிடையே மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஜார்கண்டில் பிரசாரம் செய்தபோது, ‘அயோத்தியில் 4 மாதங்களுக்குள் பிரம்மாண்ட ராமர் கோவில் கட்டப்படும்’ என்ற அறிவிப்பை வெளியிட்டார். இந்நிலையில் அயோத்தியில் தாக்குதல் நடத்துமாறு சமூக வலைதளம் மூலம் ஜெய்ஷ்-இ-முகமது தலைவர் மசூத் அசார் தனது ஆதரவாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ள வீடியோ மத்திய உளவுத்துறைக்கு கிடைத்துள்ளது.

அந்த வீடியோவில், ‘இந்திய மண்ணில் பெரிய அளவில் தாக்குதல் நடத்துங்கள்’என்று மசூத் அசார் பேசுகிறார். இந்த தகவல்கள் அனைத்தும் பாதுகாப்பு அமைப்புகளுக்கு பகிரப்பட்டுள்ளது. உளவுத்துறை எச்சரிக்கையில், பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாதிகள் 7 பேர் நேபாள எல்லை வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவி உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

அவர்கள் உத்தரபிரதேசத்தின் கோரக்பூர், அயோத்தி ஆகிய நகரங்களில் பதுங்கி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. அவர்களில் முகமது யாகூப், அபுஹம்சா, முகமது ஷாவாஸ், நிசார் அகமது, முகமது சவுத்ரி என 5 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். 7 பேரும் இதுவரை பாதுகாப்பு படையினரிடம் சிக்காததால் அவர்களைப் பிடிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்தியா-பாகிஸ்தான் இடையிலான எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டு பகுதியில் இந்திய படையினரின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்தப்பகுதி வழியாக பாகிஸ்தான் பயங்கரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவ முடியாது என்பதால் நேரடியாக எல்லையை பயங்கரவாதிகள் பயன்படுத்துகின்றனர். இந்த பயங்கரவாதிகளுக்கு ஆயுதங்கள் உள்பட பல்வேறு உதவிகள் மக்கள் சிலர் செய்வதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே ஜம்மு- காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்தது. சமீபத்தில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இதை பயன்படுத்தி பிரச்சனையை ஏற்படுத்தும் வகையில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் இந்த சதித்திட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. உளவுத்துறை எச்சரிக்கையைத் தொடர்ந்து உத்தரபிரதேச மாநிலம் முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

அயோத்தி முழுவதும் போலீஸ் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

click me!