அபிநந்தனை மிரட்டி வீடியோ... பாகிஸ்தானின் கபட நாடகம்..!

By Thiraviaraj RMFirst Published Mar 2, 2019, 11:22 AM IST
Highlights

இந்திய விமானி அபிநந்தனை ஒப்படைக்கும் முன் அவரிடம் பாகிஸ்தான் ராணுவம் வீடியோ பதிவு செய்ததாகவும், அதனால் அவர்  காலதாமதமாக ஒப்படைக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய விமானி அபிநந்தனை ஒப்படைக்கும் முன் அவரிடம் பாகிஸ்தான் ராணுவம் வீடியோ பதிவு செய்ததாகவும், அதனால் அவர்  காலதாமதமாக ஒப்படைக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

பாகிஸ்தான் ராணுவத்தின் பிடியில் சிக்கிய அபிநந்தனை ‘பதற்றத்தை தணிப்பதற்காக நல்லெண்ண அடிப்படையில், விடுதலை செய்யப்பட்டார். இதனையடுத்து அபிநந்தன் ராவல் பிண்டியில் இருந்து இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார். அங்கிருந்து லாகூர் கொண்டு வரப்பட்ட அவர் முக்கிய பிரமுகர்கள் வரும் வழியாக வாகா எல்லைக்கு கொண்டு வரப்பட்டார். அட்டாரி-வாகா எல்லையில் ஏராளமான மக்கள் மேளங்களுடனும், தேசியக் கொடியுடனும், மாலைகளுடனும் குவிந்தனர். அப்போது அபிநந்தனை விடுவிக்கும் நேரத்தை பாகிஸ்தான் அதிகாரிகள் 2 முறை மாற்றினர். இறுதியில் நேற்று இரவு 9 மணிக்கு மேல் விடுவிக்கப்படுவார் என தெரிவிக்கப்பட்டது. 

இரவு 9.15 மணியளவில் அபிநந்தனை, பாகிஸ்தான் ராணுவத்தினர் இந்திய விமானப்படை அதிகாரிகள் இருவரிடம் ஒப்படைத்தனர்.  பின்னர், அவர் டெல்லிக்கு விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டார். இந்நிலையில் ஒப்படைக்கப்படும் முன் அபிநந்தனிடம் பாகிஸ்தான் வீடியோவை பதிவு செய்ததாகவும், அதில் பாகிஸ்தான் ராணுவத்தை புகழ்ந்து பேசும்படியாக அவருக்கு நெருக்கடி கொடுத்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் 15 முறை எடிட் செய்து அந்நாட்டு ஊடகங்கள் வெளியிட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இந்திய நேரப்படி இரவு 8.30மணிக்கு அந்த வீடியோவை பாகிஸ்தான் அரசு உள்ளூர் ஊடங்களில் வெளியிட்டது. அந்த வீடியோவில், எவ்வாறு இந்திய விமானி பிடிபட்டார் என்று தலைப்பில் இருந்தது. இந்த வீடியோ பதிவு செய்வதன் காரணமாகத்தான் அபிநந்தன் ஒப்படைப்பிலும் தாமதம் ஏற்பட்டுள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

அந்த வீடியோவில் அபிநந்தன் பேசுகையில், " பாகிஸ்தான் வான்வெளிக்குள் நான் இலக்கை நோக்கி பறந்தபோது, என்னுடைய விமானம் பாகிஸ்தான் விமானப்படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்டது. அதன்பின் விமானத்தில் இருந்து வெளியே பறந்தநான், பாராசூட் மூலம் குதித்தேன். என்னிடம் ஒரு துப்பாக்கி இருந்தது. நான் விழுந்த இடத்தில் ஏராளமான மக்கள் இருந்தனர். அவர்களிடம் இருந்து என்னைக் காத்துக்கொள்ள ஒரு வழி மட்டுமே இருந்தது. என்னுடைய துப்பாக்கி கைவிட்டு, நான் ஓட முயற்சித்தேன். மக்கள் என்னைத் துரத்தினார்கள், அவர்களின் மிகுந்த உணர்ச்சிவசப்பட்டுக் காணப்பட்டார்கள்.

அப்போது, பாகிஸ்தான் ராணுவத்தைச் சேர்ந்த இரு அதிகாரிகள் என்னை அவர்களிடம் இருந்து மீட்டனர். அவர்கள் மக்களிடம் இருந்து என்னை மீட்டபின், எனக்கு எந்தவிதமான காயமும் ஏற்படவில்லை. என்னை பாகிஸ்தான் ராணுவத்தினர் அவர்களின் முகாமுக்குக் கொண்டு சென்று, எனக்கு முதலுதவி அளித்து, மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தனர். எனக்கு மருந்துகள் வழங்கப்பட்டன.

பாகிஸ்தான் ராணுவத்தினர்தான் என்னை மக்கள் கூட்டத்தில் இருந்து காப்பாற்றினார்கள். பாகிஸ்தான் ராணுவத்தினர் மிகுந்த நேர்த்தியாகவும், அவர்களின் நடத்தை நல்லவிதமாகவும் இருந்தது " எனத் தெரிவித்தார். இந்த வீடியோவில் அபிநந்தன் வர்த்தமான் பேசியது பாகிஸ்தான் ராணுவத்தினரின் நெருக்கடியால் பேசினாரா அல்லது அவ்வாறு பேச வேண்டும் என்று வற்புறுத்தப்பட்டரா என்பது தெரியும் தெரியவில்லை.

click me!