
பயங்கரவாத செயல்களுக்காக, பிரிவினைவாதிகள் பாகிஸ்தானிடம் இருந்து நிதி உதவி பெற்ற விவகாரத்தில், நேற்று 2-வது நாளாக காஷ்மீரில் தேசிய புலனாய்வு பிரிவு (என்.ஐ.ஏ.) அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். இதில் கட்டுக்கட்டாக பாகிஸ்தான், அரபு நாட்டு கரன்சிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
பிரிவினைவாத இயக்கங்கள்
காஷ்மீரில் கூரியத் மாநாடு, அவாமி நடவடிக்கைக்குழு, ஜம்மு–காஷ்மீர் விடுதலை முன்னணி உள்ளிட்ட பல்வேறு பிரிவினைவாத இயக்கங்கள் செயல்பட்டு வருகின்றன.
இந்த அமைப்புகள் பாகிஸ்தானை மையமாக கொண்டு இயங்கி வரும் லஷ்கர் –இ– தொய்பா பயங்கரவாத அமைப்பின் தலைவர் ஹபீஸ் சயீத்திடம் இருந்து நிதி பெற்று வருவதாக புகார் எழுந்துள்ளது.
3 பேர் கைது
இந்த நிதியை கொண்டு காஷ்மீரில் சட்டவிரோத நடவடிக்கைகளை அரங்கேற்றி வருவதாகவும், பாதுகாப்பு படையினர் மீது கல்வீசுதல், பள்ளிக்கூடங்கள் உள்ளிட்ட பொது சொத்துகளுக்கு தீ வைத்தல் போன்ற குற்ற செயல்களுக்கு பயன்படுத்தி வருவதாகவும் தெரியவந்தது.
இது குறித்து விசாரணை நடத்திய தேசிய புலனாய்வு பிரிவினர் (என்.ஐ.ஏ.), நயீம் கான், பரூக் அகமது தார், ஹாஜி ஜாவேத் பாபா ஆகிய 3 பிரிவினைவாத தலைவர்களை கடந்த மாதம் டெல்லியில் கைது செய்தனர்.
வழக்குப்பதிவு
இவர்களிடம் விசாரணை நடத்திய போது, தீவிரவாத செயல்களுக்கு பாகிஸ்தான் தீவிரவாதிகளிடம் இருந்து நிதி வசூலிப்பது கண்டறியப்பட்டது.
இதைத்தொடர்ந்து பல்வேறு பிரிவினைவாத இயக்கங்கள், ஹிஸ்புல் முஜாகிதீன், லஷ்கர் –இ– தொய்பா போன்ற தீவிரவாத அமைப்புகள் மீது தேசிய புலனாய்வு அதிகாரிகள் வழக்கு பதிவு செய்தனர்.
23 இடங்களில்..
இந்த விசாரணையின் ஒரு பகுதியாக காஷ்மீர், அரியானா, டெல்லி ஆகிய 3 மாநிலங்களுக்கு உட்பட்ட 23 இடங்களில் தேசிய புலானாய்வு பிரிவினர் நேற்று முன்தினம் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர். சோதனையின் போது அதிக அளவிலான பணம் மற்றும் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
கூரியத் மாநாடு தலைவர் சையத் அலி ஷா ஜிலானியின் மருமகன் அல்தாப் பன்தூஷ், தொழிலதிபர் ஷகூர் வடாலி மற்றும் சில பிரிவினைவாத தலைவர்களுக்கு சொந்தமான பகுதிகளில் இந்த சோதனை நடத்தப்பட்டது.
2-வது நாளாக
நேற்று காஷ்மீரில் நேற்று 2-வது நாளாக பிரிவினைவாதிகளுக்கு எதிரான இந்த சோதனை நீடித்தது. ஸ்ரீநகரில் மூன்று இடங்களிலும், ஜம்முவில் ஒரு இடத்திலும் சோதனை நடைபெற்றது.
கூரியத் மாநாட்டு செய்தித் தொடர்பாளர் அயாஸ் அக்பரின் ஸ்ரீநகர் வீட்டிலும் சோதனை நடந்தது.
பாகிஸ்தான் கரன்சிகள் பறிமுதல்
தேசிய பாதுகாப்பு அமைப்பின் செய்தித்தொடர்பாளர் கூறுகையில், “ என்.ஐ.ஏ. அதிகாரிகள் நடத்திய இந்த தேடுதல் வேட்டையில், ஆயிரக்கணக்கில் மதிப்புடைய பாகிஸ்தான் நாட்டு கரன்சிகள், ஐக்கிய அரபு அமீரகம், சவூதி அரேபியா நாட்டுகரன்சிகள் கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், சில சதித்திட்டத்துக்கு உரிய சில ஆவணங்களும் கண்டுபிடிக்கப்பட்டன. சையத் கிலானி தலைமையிலான தெஹ்ரீக் இ ஹரியத் அமைப்பினுடைய செய்தித்தொடர்பாளர்அயாஸ் அக்பர், பீர் சபிபுல்லா ஆகியோரது வீடுகளில் இந்த சோதனை நடத்தப்பட்டது.
மேலும், இதேபோல ஜம்மு பகுதியில் ஒரு வர்த்தகருக்கு சொந்தமான கிட்டங்கி, வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது. இவர்கள் பாகிஸ்தான் ராணுவத்தினர், தீவிரவாதிகள் இந்திய எல்லைக்குள் அத்துமீற உதவிசெய்கிறார்கள் என்ற சந்தேகத்தில் இந்த சோதனை நடத்தப்பட்டது’’ என்றார்.