
யுத்த களங்களில் பணியாற்றுவதற்கு பெண் வீராங்கனைகள், அதிகாரிகள் அனுமதிக்கப்படுவார்கள் என்று ராணுவ தலைமை தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார்.
சொற்ப நாடுகள்
பெரும்பான்மையான நாடுகளில் வீராங்கனைகள் யுத்த களங்களில் பணியாற்றுவதற்கு அனுமதிக்கப்படுவதில்லை. ஜெர்மனி, ஆஸ்திரேலியா, கனடா, அமெரிக்கா, பிரிட்டன், டென்மார்க், பின்லாந்து, பிரான்ஸ், நார்வே, சுவீடன் மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் மட்டுமே யுத்த களங்களில் பெண்கள் பணியாற்றுவதற்கு அனுமதி அளிக்கிறது.
மற்ற துறைகளில் அனுமதி
இந்திய பாதுகாப்பு துறைகளில் சட்டம், புள்ளியியல், கலை, ஆசிரியர் பணி, மருத்துவம், பொறியியல் ஆகிய பிரிவுகளில் மட்டுமே பெண்கள் சேர்க்கப்பட்டு வந்தனர். யுத்த களங்களில் அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வந்தது. இந்த வரலாற்றை மாற்றும் விதமாக கடந்த ஆண்டு விமானப்படையில் முக்கிய நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி, அவானி சதுர்வேதி, பாவனா காந்த், மோகனா சிங் ஆகிய வீராங்கனைகள் போர் விமானங்களின் பைலட்டுகளாக தேர்வு செய்யப்பட்டனர்.
விமானம், கடற்படை
அவர்கள் தற்போது, இந்திய விமானப்படையின் போர் விமானங்களில் விமானிகளாக பணி புரிந்து வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக பயிற்சியின் அடிப்படையில் வீராங்கனைகளை தேர்வு செய்து, அவர்களை போர்களில் ஈடுபடுத்த இந்திய விமானப்படை நடவடிக்கை எடுத்து வருகிறது. இதேபோன்று, கப்பல் படையில் போர்க்கப்பல்களில் பெண்களை பணியாற்றுவதற்கு அனுமதி அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நடவடிக்கை தொடக்கம்
இந்த நிலையில், ராணுவ தலைமை தளபதி பிபின் ராவத் நேற்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- ராணுவத்தில் போர்க்களங்களில் பெண்களும் ஈடுபடுத்தப்படுவார்கள். இதற்கான நடவடிக்கைகள் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளன. முதல்கட்டமாக மிலிட்டரி போலீசில் பெண்கள் ஈடுபடுத்தப்படுவார்கள். அதன் பின்னர் வீராங்கனைகள் போர்களில் ஈடுபட அனுமதி வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
மிலிட்டரி போலீஸ்
மிலிட்டரி போலீசை பொறுத்தவரையில் கன்டோன்மென்ட் எனப்படும் ராணுவ குடியிருப்புகளில் அவர்கள் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்வார்கள். அங்கு வீரர்கள் செய்யும் விதி மீறல்களை தடுத்தல், வீரர்களை கண்காணித்தல், போர்களின்போதும், அமைதிக் காலங்களிலும் வீரர்களை இடமாற்றம் செய்தல், போர்க் கைதிகளை கையாளுதல், உள்ளூர் போலீசாருக்கு தேவைப்படும் சமயங்களில் உதவி செய்தல் உள்ளிட்ட பணிகளில் மிலிட்டரி போலீசார் ஈடுபடுவார்கள்.