
ஜம்மு காஷ்மீரில் நக்ரோடா ராணுவ மூகாம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 அதிகாரிகள் உட்பட 7 வீரர்கள் உயிரிழந்த சம்பவத்தால், எல்லையில் பதற்றம் அதிகரித்துள்ளது.
ஜம்முவின் புறநகர் பகுதியில் உள்ள நக்ரோடா ராணுவ படைப் பிரிவு முகாம் மீது நேற்று காலை தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். போலீஸ் உடையில் முகாமிற்குள் நுழைந்த தீவிரவாதிகள், அங்கிருந்த ராணுவ அதிகாரிகளின் உணவக அறைக்குள் பதுங்கி, துப்பாக்கியால் சுட்டும், கையெறி குண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தினர்.
இதையடுத்து சுதாரித்துக் கொண்ட ராணுவ வீரர்கள், தீவிரவாதிகளுக்கு பதிலடி கொடுத்துள்ளனர். இருதரப்பினருக்கும் இடையே நீடித்த பல மணி நேர துப்பாக்கிச் சண்டையில் 2 ராணுவ அதிகாரிகள், 5 ஜவான்கள் என மொத்தம் 7 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். இந்த தாக்குதலில் 3 தீவிரவாதிகளும் கொல்லப்பட்டனர். மேலும் தீவிரவாதிகள் பதுங்கி இருந்த அறையில் மாட்டிக் கொண்ட 2 குழந்தைகள், 2 பெண்கள் உட்பட 14 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். சுட்டுக் கொல்லப்பட்ட தீவிரவாதிகளிடமிருந்து ஏகே 47 ரக துப்பாக்கி, தோட்டா மற்றும் கையெறி குண்டுகள் கைப்பற்றப்பட்டன.
தீவிரவாதிகள் தாக்குதலில் 7 ராணுவ வீரர்கள் உயிரிழந்த சம்பவம் பற்றியும், எல்லை நிலவரம் தொடர்பாகவும், ராணுவ தலைமை தளபதி தல்பிர் சிங் சுஹாக், பிரதமர் மோடி, பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பாரிக்கர் ஆகியோருக்கு விளக்கினார்.
இந்த ஆண்டில் ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்துவது இது 3-வது முறை ஆகும். ஏற்கனவே ஜனவரி மாதம் பஞ்சாப் மாநிலம் பதன்கோட் விமானப்படை தளம், செப்டம்பர் மாதம் காஷ்மீர் உரி ராணுவ முகாம் ஆகியவற்றில் பயங்கரவாதிகள் தாக்குதலில் ஈடுபட்டு பெரும் உயிர்சேதத்தை ஏற்படுத்தினர் என்பது நினைவு கூரத்தக்கது.
பாகிஸ்தான் ராணுவத்தின் புதிய தளபதியாக அந்நாட்டு ஜெனரல் கமர் ஜாவத் பஜ்வா நேற்று பதவியேற்ற நிலையில், இத்தாக்குதல் நடந்திருப்பதால், எல்லையில் பதற்றம் அதிகரித்துள்ளது.
தீவிரவாதிகளின் இந்த தாக்குதல் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, அமைதி, முன்னேற்றப் பாதையில் செல்லும் இந்தியாவை அச்சுறுத்தலால் பணிய வைக்க முடியாது எனக் கூறியுள்ளார்.