எல்லையில் பதற்றம்..! இந்திய உளவு விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக கொக்கரிக்கும் பாக்.ராணுவம்..!

By Manikandan S R SFirst Published Apr 10, 2020, 8:32 AM IST
Highlights

எல்லைக்கட்டுப்பாட்டு கோட்டை கடந்து வந்த இந்திய உளவு விமானம் ஒன்றை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்திருக்கிறது. எனினும் உளவு விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக இந்திய ராணுவம் தரப்பில் எதுவும் கூறப்படவில்லை

காஷ்மீர் எல்லைப் பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது. சில தினங்களுக்கு முன் இந்திய பகுதியில் நுழைந்து தாக்குதல் நடத்த முற்பட்ட 9 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். அதில் இந்திய ராணுவ வீரர் ஒருவர் வீரமரணம் அடைந்தார். இந்த நிலையில் எல்லைக்கட்டுப்பாட்டு கோட்டை கடந்து வந்த இந்திய உளவு விமானம் ஒன்றை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்திருக்கிறது. எனினும் உளவு விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக இந்திய ராணுவம் தரப்பில் எதுவும் கூறப்படவில்லை.

இதுகுறித்து பாகிஸ்தான் தரப்பில் கூறும்போது இந்திய ராணுவத்தை சேர்ந்த சிறியரக உளவு படை விமானம் ஒன்று சங்க் பகுதியில் எல்லைக் கோட்டை தாண்டி உளவு பார்ப்பதற்காக பாகிஸ்தான் பகுதிக்குள் புகுந்ததாகவும் அத்துமீறி 600 மீட்டர் தூரம் வரை சென்றதாகவும் கூறியிருக்கிறது. இந்திய ராணுவத்தின் இந்த செயலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தான் ராணுவ தரப்பிலிருந்து விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே வகுக்கப்பட்டிருக்கும் விதிமுறைகளையும் இருநாட்டு வான்வெளி ஒப்பந்தத்தையும் மீறி இந்திய ராணுவம் இதுபோன்ற தேவையற்ற செயல்களை செய்வதாக கூறி இருக்கும் பாகிஸ்தான் 2003ம் ஆண்டு உருவாக்கப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தை இந்திய ராணுவம் ஊடுருவல் மூலமாக அவமரியாதை செய்வதை உணர்த்துவதாக தெரிவித்திருக்கிறது. இந்திய விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக கடந்த காலங்களிலும் பாகிஸ்தான் பலமுறை கூறி இருக்கிறது. ஆனால் அதை இந்தியா ஆதாரங்களுடன் மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

click me!