
ஷேக் சஜ்ஜாத் குல் இந்தியாவில் தான் கல்வி பயின்றார். ஸ்ரீநகரில் பள்ளிப்படிப்பை முடித்த பின், பெங்களூருவில் எம்பிஏ பட்டம் பெற்றார். பின்னர் கேரளாவில் லேப் டெக்னீஷியன் படிப்பை முடித்தார். காஷ்மீர் திரும்பி ஒரு நோயறிதல் மையம் தொடங்கினார். இதன் மூலம் பயங்கரவாத அமைப்புகளுக்கு உதவினார்.
2002ல் டெல்லி நிஜாமுதீன் ரயில் நிலையத்தில் 5 கிலோ ஆர்டிஎக்ஸ் உடன் கைது செய்யப்பட்டு, 2003ல் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்றார். 2017ல் விடுதலையான பின் பாகிஸ்தானுக்குச் சென்று, 2019ல் TRF அமைப்பை வழிநடத்தினார்.
TRF, லஷ்கர்-ஏ-தொய்பாவின் கைப்பாவை அமைப்பு. புல்வாமா தாக்குதலுக்குப் பின் உலக நாடுகளின் விமர்சனங்களுக்குப் பதிலடியாக பாகிஸ்தான் இதை உருவாக்கியது. பஹல்காம் தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர். பயங்கரவாதிகள் முதலில் மதத்தைக் கேட்டுவிட்டு பின்னர் சுட்டுக் கொன்றதாகக் கூறப்படுகிறது.
ஒரு உள்ளூர் வழிகாட்டி, சுற்றுலாப் பயணிகளைக் காப்பாற்ற முயன்று உயிரிழந்தார். TRF இந்தத் தாக்குதலுக்கு பொறுப்பேற்றது. ஷேக் சஜ்ஜாத் குல்லின் கட்டளைப்படி தாக்குதல் நடந்தது. 2020 முதல் 2024 வரை காஷ்மீரின் மத்திய, தெற்குப் பகுதிகளில் பல தாக்குதல்கள் நடந்தன.
2023ல் நடந்த கையெறி குண்டுத் தாக்குதல்கள், பீஜ்பேஹரா, ககன்கீர், ஜெட்-மோர் சுரங்கப்பாதை அருகே போலீசார் மீதான தாக்குதல்களிலும் குல்லின் பங்கு இருப்பது கண்டறியப்பட்டது. குல்லின் தலைக்கு ரூ.10 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. TRF தலைவராக ஐ.எஸ்.ஐ. உதவியுடன் தாக்குதல்களைத் திட்டமிடுகிறார். அவரது உறவினர்களும் பயங்கரவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அவரது சகோதரர் முன்பு ஸ்ரீநகரில் மருத்துவராகப் பணியாற்றினார். தற்போது வளைகுடா நாடுகளில் தலைமறைவாக இருப்பவர்களுடன் சேர்ந்து பயங்கரவாதிகளுக்கு நிதி திரட்டுகிறார்.