
பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு தளவாட உதவிகளை வழங்கிய முகமது கட்டாரியா என்பவரை ஜம்மு காஷ்மீர் காவல்துறை கைது செய்துள்ளது.
கடந்த ஏப்ரல் 22 அன்று பஹல்காமுக்கு அருகிலுள்ள பைசரன் பள்ளத்தாக்கில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு தாக்குதலில் 26 அப்பாவி மக்களைப் படுகொலை செய்யப்பட்டனர். தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளைப் பிடிக்க ஜூலை மாதம் "ஆபரேஷன் மகாதேவ்" நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இந்த நடவடிக்கையின் போது மீட்கப்பட்ட ஆயுதங்கள் மற்றும் உபகரணங்கள் தடயவியல் பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்டதை வைத்து இவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், பஹல்காம் தாக்குதலில் துப்பாக்கிச் சூடு நடத்திய இரண்டு பயங்கரவாதிகளை பாதுகாப்புப் படையினர் இந்த நடவடிக்கையின் மூலம் கண்டுபிடித்து, கொன்றனர்.
முகமது கட்டாரியா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்படுவார் என்று வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த கைது, பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட அனைவரையும் கண்டறிய அரசாங்கம் தொடர்ந்து கவனம் செலுத்துகிறது என்பதைக் காட்டுகிறது. பாகிஸ்தானைத் தளமாகக் கொண்ட லஷ்கர்-இ-தொய்மா (Lashkar-e-Taiba) அமைப்பு இந்தத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்றது.
மே 22 அன்று, ஸ்ரீநகருக்கு அருகிலுள்ள டச்சிகாமில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்புப் படையினருக்குத் தகவல் கிடைத்தது. பல வாரங்கள் உளவு பார்த்த பிறகு, ஜூலை 28 அன்று தாக்குதல் தொடங்கியது. பயங்கரவாதிகள் பயன்படுத்திய T82 தொலைத்தொடர்பு சாதனம் இந்தியப் படைகளுக்கு அவர்களின் இருப்பிடத்தைக் கண்டறிய உதவியது.
அதன்பிறகு, ராஷ்டிரிய ரைபிள்ஸ் மற்றும் சிறப்புப் படைகள் கொண்ட ஒரு குழு, வெறும் 30 நிமிடங்களில், பயங்கரவாதிகளை அடையாளம் கண்டு அவர்களைச் சுட்டு வீழ்த்தினர். தாக்குதல் நடந்த சில மணி நேரங்களிலேயே, பஹல்காம் தாக்குதலின் மூளையாகச் செயல்பட்டதாகக் கூறப்படும் சுலைமான் ஷா உட்பட மூன்று பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
கொல்லப்பட்ட பயங்கரவாதி சுலைமான் ஷா, பாகிஸ்தான் இராணுவத்தின் சிறப்புப் படையின் முன்னாள் கமாண்டோ ஆவார். அதன் பிறகு, அவர் ஐ.நா.வால் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்ட ஹாஃபீஸ் சயீதின் லஷ்கர்-இ-தைபா அமைப்பில் சேர்ந்து பயங்கரவாத நடவடிக்கைகளை மேற்கொண்டார் என்று வட்டாரங்கள் தெரிவித்தன. அவர் 2023 செப்டம்பரில் இந்தியாவிற்குள் ஊடுருவினார். 2024 அக்டோபரில், ஏழு பொதுமக்களைக் கொன்ற தாக்குதலுக்கு அவர் தலைமை தாங்கினார். பாரமுல்லாவில் நான்கு பாதுகாப்புப் படையினரைக் கொன்ற தாக்குதலிலும் அவர் ஈடுபட்டிருந்தார்.
பயங்கரவாதிகள் மறைவிடத்திலிருந்து AK-47, M9 ரக துப்பாக்கிகள் உள்ளிட்ட பல ஆயுதங்கள் மற்றும் உபகரணங்கள் மீட்கப்பட்டன. இந்த ஆயுதங்கள் சண்டிகரில் உள்ள ஒரு ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டு, பஹல்காம் தாக்குதலில் அவை பயன்படுத்தப்பட்டன என்று உறுதி செய்யப்பட்டது.
"இந்த துப்பாக்கிகளைப் பயன்படுத்தி சுடப்பட்ட தோட்டா குண்டுகளும், பஹல்காமில் கண்டெடுக்கப்பட்டவையும் பொருந்தின. இந்த துப்பாக்கிகள் அப்பாவி பொதுமக்களைக் கொல்ல பயன்படுத்தப்பட்டன என்பது உறுதியானது," என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நாடாளுமன்றத்தில் கூறினார்.
மீட்கப்பட்ட ஆயுதங்களைக் கொண்டுதான் இப்போது ஜம்மு காஷ்மீர் காவல்துறை முகமது கட்டாரியாவை கைது செய்தது.