
இந்திய பொருளாதாரம் வலுவாக இருக்கிறது என்று மத்திய அரசு கூறிவரும் நிலையில், வங்கிகளுக்கு மூலதனத் தொகையாக ரூ.2.10 லட்சம் கோடி கொடுக்க வேண்டிய அவசியம் என்ன? என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் மத்திய அரசை கடுமையாகச் சாடியுள்ளார்.
காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நிதி அமைச்சருமான ப.சிதபரம் நேற்று டெல்லியில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது-
2014க்குபின் சரிந்தது
கடந்த 2004ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டுவரை இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சி 8.5 சதவீதமாக இருந்து வந்தது. இந்த வளர்ச்சிதான் நாட்டில் எப்போதும் இல்லாத சிறப்பான வளர்ச்சியாகும். ஆனால், கடந்த 2014ம் ஆண்டுக்கு பின் அது சரியத் தொடங்கியது.
நாட்டின் வேலையின்மை குறைந்து இருக்கிறது அன்னியச் செலாவணி அதிகமாக கையிருப்பு இருக்கிறது, விலைவாசி குறைந்து பணவீக்கம் கட்டுக்கு இருக்கிறது, தனிநபர் வருமானம் உயர்ந்து, பொருளாதாரம் வலுவாக இருக்கிறது நம்முடைய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.
ஏன் முதலீடு தொகை
அப்படி என்றால், ‘பாரத் மாலா’ திட்டத்துக்காக மத்திய அரசு ரூ.6 லட்சம் கோடியை ஏன் அறிவிக்க வேண்டும்?, வங்கிகளுக்கு முதலீட்டு தொகையாக ரூ.2.10 லட்சம் கோடியை ஏன் அறிவிக்க வேண்டும்.
எதையும் அடையவில்லை
பிரதமர் மோடி கொண்டு வந்த ரூபாய் நோட்டு தடையால்தான், நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறைந்தது. ரூபாய் நோட்டு தடையால் எந்தவிதமான குறிக்கோளையும் மத்திய அரசு அடையவில்லை. எந்தவிதமான கருப்புப ணத்தையும் மத்திய அரசால் பிடிக்க பிடிக்க முடியவில்லை.
அழித்துவிட்டது
ரூபாய் நோட்டு தடை சிறு, குறுந் தொழில்களை அழித்துவிட்டது. எந்த புதிய வேலைவாய்ப்புகளையும் உருவாக்கவில்லை. ஏற்கனவே இருக்கும் பெரிய தொழில் நிறுவனங்களும், தொழில்களும் புதிதாக வேலைவாய்ப்புகளை உருவாக்கவில்லை. சிறு, குறு நிறுவனங்கள்தான் உருவாக்கிக் கொண்டு இருந்தது.
ஜி.எஸ்.டி.யே அல்ல
ரூபாய் நோட்டு தடை எனும் நடவடிக்கையில் இருந்து நாடு மீள்வதற்குள் மத்திய அரசு ‘மிகப்பெரிய ஜி.எஸ்.டி.’ வரியை அறிமுகம் செய்தது. மத்திய அரசு அறிமுகம் செய்த ஜி.எஸ்.டி. வரியில் ஏராளமான வரி நிலைகள் இருக்கின்றன. இதற்கு பெயர் ஜி.எஸ்.டி. வரி கிடையாது. இதை தயவுசெய்து ஜி.எஸ்.டி. என்று அழைக்காமல் வேறு பெயரில் அழையுங்கள்.
மக்கள் கையில் இருக்கு
பொருளாதரம் மாற்றம் அடையும் புள்ளியில் இருக்கிறது. நீங்கள் சரியான நடவடிக்கை எடுத்தால் பொருளாதாரம் வளர்ச்சிப்பாதை நோக்கி மேலாக செல்லும், ஆனால், தவறானநடவடிக்ைக எடுத்தால், பொருளாதாரம் சரிவை நோக்கிச் செல்லும். பொருளாதார வளர்ச்சி விகிதம் 5.7 சதவீதத்துக்கு கீழாக கண்டிப்பாகச் செல்லக்கூடாது.
இந்த விகிதத்துக்கு குறைவாக இந்தியப் பொருளாதாரம் தாழ்ந்து செல்லாது. இந்த நாட்டின் மக்கள் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது. அவர்கள் சரியான முடிவை தேர்தலில் எடுத்தால் அடுத்த தேர்தலில் வெற்றி பெறும் அரசு இந்தநிலையை மாற்றும்.
கொசுக்காக வீட்டை கொளுத்த முடியாது
மற்ற நாடுகளில் இருப்பதைப்போல், இந்தியாவிலும் நிழல் பொருளாதாரம் இருக்கத்தான் செய்கிறது. இந்தியாவில் அது 12 சதவீதம் வரை இருக்கும். நிழல்பொருளாதாரத்துக்கு தீர்வு என்பது, சிறப்பான வரி முறையை அறிமுகம் செய்வதால் மட்டுமே தவிர, ரூபாய் நோட்டு தடை கிடையாது. வீட்டில் கொசு இருப்பதற்காக வீட்டை கொளுத்த முடியாது.
நிர்பந்திக்காதீர்கள்
அதிகபட்சமான பணப்பரிமாற்றங்களை ‘டிஜிட்டல் பரிமாற்றமாக’ செய்ய வேண்டும் என்பதை வரவேற்கிறேன். ஆனால், சிறிய மளிகை கடையில் கூட மக்களைக் டிஜிட்டல்முறையில் பரிமாற்றம் செய்ய வேண்டும் என நிர்பந்திக்க கூடாது. கடந்த 2016ம் ஆண்டு நவம்பரில் டிஜிட்டல் பரிமாற்றம் 96 லட்சம் கோடி, 2017 ஜூன் மாதத்திலும் அதே நிலைதான் மாற்றம் ஏதும் இல்லை.
வாட் வரி
காங்கிரஸ் தலைமையிலான அ ரசு 2005-06ம் ஆண்டு ‘வாட்’ வரியை அறிமுகம் செய்தபோது, நாட்டில் எந்தவிதமான புரட்சியும், எதிர்ப்பும் இல்லை. ஏனென்றால், மிகவும் கடினமாக உழைத்து, சிந்தித்து அதை தயார் செய்தோம்.
கபார் சிங் வரி
ஆனால், இப்போது இருக்கும் ஜி.எஸ்.டி. வரி என்பது மக்களின் சம்பாத்தியத்தை கொள்ளையடிக்கும் ‘கபார் சிங் வரி’ ஆகும். 18 சதவீதத்துக்கு அதிகமாக ஜி.எஸ்.டி. வரி செல்லக்கூடாது. இப்போது மக்கள் ஜி.எஸ்.டி. என்றாலே மோசமான வரி என்று கூறுகிறார்கள். ஜி.எஸ்.டி. தவறானது அல்ல, அதற்கான சட்டம் தான் தவறானது.
புல்லட் ரெயில் தேவையா?
புல்லட்ரெயில் இப்போதுள்ள நிலையில், புல்லட் ரெயிலுக்கு முன்னுரிமை தேவையா? தவறாக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இந்த திட்டத்துக்கு ரூ. ஒரு லட்சம் கோடி செலவு செய்வதைக் காட்டிலும, ஒவ்வொரு பள்ளிக்கூடத்துக்கும் ரூ. ஒரு கோடி மத்திய அரசு கொடுத்து இருக்கலாம். நமது முன்னுரிமை கல்விக்கும், சுகாதாரத்துக்கும், வேலைவாய்ப்பு உருவாக்கத்துக்கும் இருக்க வேண்டும்.
எத்தனை பேர் புல்லட் ரெயிலில் பயணிக்க போகிறார்கள்?. ஒவ்வொருவரையும் சமமாக நடத்த வேண்டும். ஒரு சமூகத்தினரைப் பற்றி மட்டும் குரத்த குரலில் பேசிவிட்டு, மற்ற சமூகத்தினரைப் பற்றி கீச்சு குரலில் பேசக்கூடாது
இவ்வாறு அவர் தெரிவித்தார்.