கருத்துக்கணிப்புகளை நிராகரித்த எதிர்க்கட்சிகள்... கணிப்புகள் பொய்த்துபோகும் என காட்டம்!

By Asianet TamilFirst Published May 20, 2019, 8:41 AM IST
Highlights

கருத்துக்கணிப்பு முடிவுகள் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சியினருக்கு மகிழ்ச்சியைக் கொடுத்திருக்கும் நிலையில், எதிர்க்கட்சிகள் கருத்துக்கணிப்புகளை முற்றிலும் நிராகரித்துள்ளன. 

நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணி மீண்டும் ஆட்சியைத் தக்கவைக்கும் என்று வெளியாகியுள்ள கருத்துக்கணிப்புகளை எதிர்க்கட்சிகள் முற்றிலுமாக நிராகத்துள்ளன. 
நாடாளுமன்றத்துக்கு 7 கட்டங்களாகத் தேர்தல் நடைபெற்றன. இறுதிகட்ட தேர்தல் நேற்று முடிந்த நிலையில், மாலையில் ‘எக்ஸிட் போல்’ எனப்படும் வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியான. எல்லா கருத்துக்கணிப்புகளுமே மத்தியில் பாஜக ஆட்சி மீண்டும் பிடிக்கும் எனத் தெரிவித்துள்ளன. காங்கிரஸ் கூட்டணி மட்டுமல்லாமல், மாநில கட்சிகளும் தேர்தலில் தோல்வியைத் தழுவும் என்று கருத்துக்கணிப்புகள் குறிப்பிடுகின்றன.
கருத்துக்கணிப்பு முடிவுகள் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சியினருக்கு மகிழ்ச்சியைக் கொடுத்திருக்கும் நிலையில், எதிர்க்கட்சிகள் கருத்துக்கணிப்புகளை முற்றிலும் நிராகரித்துள்ளன. மேற்கு வங்க முதல்வரும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி தலைவருமான மம்தா பானர்ஜி தனது ட்விட்டர் பக்கத்தில், “கருத்துக்கணிப்பு என்ற வதந்தியை நம்பமாட்டேன். மக்கள் இதனை நம்ப வேண்டாம். இந்தக் கருத்துக்கணிப்புகள் மூலம் வாக்குப்பதிவு இயந்திரங்களில் மோசடி செய்யவும், இயந்திரங்களை மாற்றவும் சூழ்ச்சி நடக்கிறது. எதிர்க்கட்சிகள் ஒற்றுமையாகவும், உறுதியாகவும் இருக்க வேண்டும். நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து போராடுவோம்.” என்று தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தெலுங்கு தேசக் கட்சித் தலைவரும் ஆந்திர முதல்வருமான சந்திரபாபு வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “மீண்டும்  மக்களின் நாடித் துடிப்பை வெளிப்படுத்துவதில் எக்ஸிட் போல்கள் தோல்வியடைந்துள்ளன. பலமுறை எக்ஸிட் போல்கள் பொய்த்துள்ளன. ஆந்திராவில் தெலுங்குதேசம் மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும். மத்தியில் பாஜக அல்லாத அரசு நிச்சயம் அமையும் என்ற நம்பிக்கை உள்ளது”என்று தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் மூத்தத் தலைவர் பி.சி.சாக்கோ கூறும்போது, “எக்ஸிட் போல் முடிவுகள் மாறி மே 23 அன்று தெளிவான முடிவு கிடைக்கும்” என்று தெரிவித்துள்ளார். தேசிய மாநாட்டு கட்சி தலைவர் ஒமர் அப்துல்லா ட்விட்டர் பதிவில், “ஒவ்வொரு எக்ஸிட் போல் முடிவுகளுமே தவறாகவே முடிந்துள்ளன. 23-ம் தேதி வரை எல்லோரும் காத்திருப்போம்” என்று தெரிவித்துள்ளார்.


பிஜூ ஜனதா தளம் கட்சி எம்.பி. சஞ்சய் சிங் கூறும்போது, “ஐந்தாவது முறையாக ஒடிஷாவில் ஆட்சியைக் கைப்பற்றுவோம். நாடாளுமன்றத் தேர்தலிலும் அதுபோலவே வெற்றிபெறுவோம். எக்ஸிட் போல் ஊகங்கள் எல்லாமே ஊகங்களாகவே இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.  ஆம் ஆத்மி கட்சி மூத்த தலைவர் சஞ்சய் சிங் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “தொலைக்காட்சி விஞ்ஞானிகளே உங்களுக்கு ஏதேனும் அவமானமாக இல்லையா? 2004, 2013, 2015 டெல்லி எக்ஸிட் போல் முடிவுகள் உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

click me!