மோடி, அமித் ஷாவுக்கு ஆதரவா..? தேர்தல் ஆணையர்களுக்குள் லடாய்!

By Asianet TamilFirst Published May 18, 2019, 9:42 PM IST
Highlights

மற்ற இரு ஆணையர்கள் மோடி, அமித்ஷா இருவர் மீதான புகார்களுக்கு எதிராகக் கருத்தைப் பதிவு செய்து புகார்களை தள்ளுபடி செய்தனர். அதாவது இந்த விவாகரத்தில் முடிவுகள் 2-1 என்ற ஆதரவில் முடிவு எடுக்கப்பட்டு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. 
 

முன் எப்போதும் இல்லாத அளவுக்கு  தலைமை தேர்தல் ஆணையம் மீது எதிர்க்கட்சிகள் கடும் குற்றச்சாட்டுகளை வைத்துவரும் நிலையில், மோடி, அமித் ஷா தேர்தல் விதியை மீறிய விவகாரத்தில் முடிவு எடுப்பதில் தேர்தல் ஆணையர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.


இந்திய தேர்தல் ஆணையத்தின்  தலைமை ஆணையராக சுனில் அரோரா உள்ளார். சுஷில் சர்மா, அசோக் லவாசா ஆகியோர் தேர்தல் ஆணையர்களாக உள்ளனர். முக்கிய முடிவுகள் அனைத்தையும் மூன்று ஆணையர்களுமே சேர்ந்து எடுக்க வேண்டும். ஒருமித்த கருத்து ஏற்படாவிட்டால், பெரும்பான்மை அடிப்படையில் முடிவு எடுக்கப்படும். தற்போது தேர்தல் முடிவடைந்து வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில், தேர்தல் ஆணையர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.


தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி, பாஜக  தேசிய தலைவர் அமித் ஷா மீது எதிர்க்கட்சிகள் 6 புகார்களை முன்வைத்தனர். பிரதமர் மோடி மீதான புகார் குறித்து தேர்தல் ஆணையர்கள் விவாதித்தனர். இதில் 6 விவகாரத்தில் 4-ல் தேர்தல் ஆணையர் அசோக் லவாசா மோடிக்கு எதிராகக் கருத்தைப் பதிவு செய்துள்ளார். 
அமித்ஷா மீதான எல்லா புகார்கள் மீதும் எதிராக லவாசா கருத்தைப் பதிவு செய்தார். ஆனாலும், மற்ற இரு ஆணையர்கள் மோடி, அமித்ஷா இருவர் மீதான புகார்களுக்கு எதிராகக் கருத்தைப் பதிவு செய்து புகார்களை தள்ளுபடி செய்தனர். அதாவது இந்த விவாகரத்தில் முடிவுகள் 2-1 என்ற ஆதரவில் முடிவு எடுக்கப்பட்டு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. 
இதனால், அதிருப்தி அடைந்த வலாசா, இனி தேர்தல் ஆணைய கூட்டங்களில் கலந்துகொள்ளப் போவதில்லை என்று தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோராவுக்கு கடிதம் எழுதியுள்ளார். தன்னுடைய கருத்து ஏற்கப்படாதபட்சத்தில், தேர்தல் ஆணைய கூட்டத்தில் இனி பங்கேற்பதில் எந்த அர்த்தமும் இல்லை என்று அந்தக் கடிதத்தில் லவாசா குறிப்பிட்டிருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது. 
மோடி, அமித் ஷாவுக்கு எதிரான புகாரில் தேர்தல் ஆணையர்களிடம் எழுந்துள்ள இந்த லடாய் அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. 

click me!