“ரூபாய் விவகாரம் குறித்து பிரதமர் விளக்கம் அளிக்க வேண்டும்” – எதிர்கட்சியினர் அமளி

First Published Nov 17, 2016, 11:06 PM IST
Highlights


ரூ. 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்திருப்பதால் நாடு முழுவதும் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

இந்தநிலையில், இன்று 2வது நாளாக தொடங்கிய நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் பழைய நோட்டுகள் விவகாரத்தில் மத்திய அரசின் நடவடிக்கையை கண்டித்து அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.

இதனைத்தொடர்ந்து எதிர்கட்சிகள் அமளியால் மாநிலங்களவை பகல் 12.30 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. சபை மீண்டும் கூடியதும் எதிர்கட்சி உறுப்பினர்கள் மீண்டும் இதே பிரச்சினையை கிளப்பினார்கள். ரூபாய் நோட்டு செல்லாது என்று அறிவித்தது தொடர்பாக விவாதம் நடத்த வேண்டும் என்று அவர்கள் தொடர்ந்து கோ‌ஷமிட்டனர். இந்த அமளி காரணமாக சபை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

இதனிடையே, மக்களவையில் கேள்வி நேரத்தை ஒத்தி வைத்து விட்டு, ரூபாய் நோட்டு விவகாரம் குறித்து விவாதம் நடத்த வேண்டும் என்று எதிர்கட்சியினர் கோஷம் எழுப்பினர்.

ஆனால், சபாநாயகர் கேள்வி நேரத்தை ஒத்தி வைக்கவில்லை. இதனால் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சி உறுப்பினர்கள் சபையின் மையப்பகுதிக்கு வந்து அமளியில் ஈடுபட்டனர்.

மத்திய அரசு அறிவித்த திட்டத்தால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு பிரதமர் விளக்கம் அளிக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

இதனையடுத்து எதிர்கட்சி உறுப்பினர்கள் அமளியால் மக்களவை நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது.

click me!