
அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோயில் மட்டுமே கட்டுவோம், வேறு எதுவும் கட்ட அனுமதிக்கமாட்டோம் என்று ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் மோகன் பகவத் திட்டவட்டமாகத்தெரிவித்தார்.
உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தி நகரில் சர்ச்சைக்குரிய இடத்தை பிரிப்பதில் இந்து அமைப்புகள், முஸ்லிம் அமைப்புகள், தனிநபர் ஆகிய 3 தரப்புக்கும் இடையே பிரச்சினை இன்னும் முடியவில்லை. உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கிறது. அப்படி இருக்கும்போது, ஆர்.எஸ்.எஸ். தலைவர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் உடுப்பி நகரில் 2 ஆயிரம் சாதுக்கள் கலந்து கொண்டுள்ள “தர்ம சனாசத்” கூட்டம் நடந்து வருகிறது. இதில் இந்து அமைப்புகளின் தலைவர்கள், சாதுக்கள், வி.எச்.பி. தலைவர்கள் பலர் பங்கேற்றுள்ளனர். இதில் கலந்துகொண்ட ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் மோகன் பகவத் இன்று பேசியதாவது-
அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோயில் மட்டுமே கட்டுவோம். அதன் அருகே எந்தவிதமான மற்றொரு கட்டிடமும் எழுப்பப்படுவதை அனுமதிக்கமாட்டோம். அந்த இடத்தில் ராமர் கோயிலைத் தவிர்த்து வேறு எந்த கட்டிடமும் வந்துவிடும் என யாரும் சிந்திக்க வேண்டாம்.
அயோத்தியில் உள்ள அந்த இடத்தில் ராமர் கோயில் கட்டியே தீருவோம். இது பெருமைக்கான அறிவிப்பு அல்லை, இது நமது நம்பிக்கை சம்பந்தப்பட்டது. இதை ஒருபோதும் நாங்கள் மாற்றிக்கொள்ளமாட்டோம். . நீதிமன்றத்தில் வழக்கும் நிலுவையில் இருந்தாலும், பலஆண்டுகள் முயற்சி, தியாகங்களால் ராமர் கோயில் விரைவில் அயோத்தியில் நனவாகப்போகிறது.
கரசேவர்கள் ஏற்கனவே திரட்டிக்கொடுத்த கற்களால் ராமர் கோயில் கட்டப்படும். 25 ஆண்டுகளுக்கு முன் ராமஜென்மபூமி இயக்கத்தில் சேர்க்கப்பட்ட கற்கள் கோயில்க கட்ட பயன்படுத்தப்படும். இந்த கோயில் கட்டப்படும் முன், மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம். நாம் நமது இலக்கை அடையும் தருவாய்க்கு வந்துவிட்டோம். ஆதலால், அடுத்துவரும் நடவடிக்களின் போது மிகுந்தஎச்சரிக்கையாக இருக்க வேண்டும்” எனப் பேசினார்.
இந்த 3 நாள் மாநாட்டில் பசு பாதுகாப்பு, ராமர் கோயில் கட்டுவது, மதமாற்றத்தை தடுப்பது உள்ளிட்ட விஷயங்கள் முக்கியமாக விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது.