
கடந்த சில மாதங்களில் காணமல்போன 500-க்கும் மேற்பட்ட குழந்தைகள் ஆதார் கார்டு மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர் என ஆதார் வழங்கும் உதய் அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரி அஜய் பூஷன் பாண்டே தெரிவித்துள்ளார்.
டெல்லியில் இன்று நடந்த சைபர்ஸ்பேஸ் சர்வதேசமாநாட்டில் ஆதார் வழங்கும் உதய் அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரி அஜய் பூஷன் பாண்டே கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசுகையில், “ கடந்த சில மாதங்களில் காணாமல் போன 500-க்கும் மேற்பட்ட குழந்தைகள் அவர்களின் ஆதார் எண் மூலம் தேடப்பட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். குழந்தைகளின் ஆதார் எண், அவர்களின் அடையாளங்கள், ஆகியவற்றை வைத்து எளிதாக கண்டுபிடிக்க முடிந்தது.
ஆதார் எண்ணை பல்வேறு அரசு நலத்திட்டங்களில் இணைத்ததன் மூலம் தவறான வழியில் மானியத்தை பெறுபவர்கள் தடுக்கப்பட்டுள்ளது, இதனஅம ூலம் அரசுக்கு ரூ.67,000 கோடி சேமிக்கப்பட்டுள்ளது. அதிகமான அரசுத் திட்டங்களில் ஆதார் எண்ணை இணைப்பதன் மூலம் வரும்காலத்தில் ஆண்டுக்கு 67 ஆயிரம் கோடி ரூபாய் சேமிக்க முடியும். தற்போது நாட்டில் 99 சதவீத இளைஞர்களிடம் ஆதார் எண் உள்ளது” எனத் தெரிவித்தார்.
உலகளவில் அதிகமான குழந்தைகளைக் கொண்டுள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்று. 2011ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, 102 கோடிமக்களில் 40 சதவீதம் 18 வயதுக்குட்பட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் உரிமைக்காக போராடிவரும் சி.ஆர்.ஓய் எனும் அமைப்பு, கடந்த 2013 முதல் 2015ம் ஆண்டுவரை நாட்டில் காணாமல் போகும் குழந்தைகளின் எண்ணிக்கை 84சதவீதம் அதிகரித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. சராசரியாகநாள்தோறும், 180 குழந்தைகள் காணமல் போகின்றன.