டிஜிட்டல் பரிமாற்றத்துக்கு இலவச உதவி எண் ‘14444’ - மத்திய அரசு விரைவில் அறிமுகம்

First Published Dec 11, 2016, 5:35 PM IST
Highlights


நாட்டுமக்களை பணம் இல்லா ‘டிஜிட்டல் பரிமாற்றத்துக்கு’ அழைத்துச் செல்லும் வகையில், அவர்களுக்கு உதவ, ‘14444’ எனும் இலவச கட்டணம் இல்லா தொலைபேசி எண்ணை மத்தியஅரசு விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறது.

இந்த சேவை இந்த வாரத்தில் அறிமுகம் செய்யப்படலாம் எனத் தெரிகிறது.

இது குறித்து ‘நாஸ்காம்’ எனச் சொல்லப்படும் தேசிய மென்பொருள் மற்றும் சேவைக் கூட்டமைப்பின் தலைவர் ஆர் சந்திரசேகர் கூறுகையில், “ டிஜிட்டல் பரிமாற்றத்தில் நாட்டு மக்களுக்கு ஏற்படும் சந்தேகங்கள், கேள்விகளுக்கு உதவும் வகையில், மத்தியஅரசு ‘நாஸ்காம்’ உதவியை நாடி உள்ளது. நாடுமுழுவதும் மக்களுக்கு உதவும் வகையில் இலவச உதவி தொலைபேசி எண் ‘14444’ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த எண்ணில் மக்கள் தங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.

மக்கள் தாங்கள் மேற்கொள்ளும் பரிவர்த்தனைகள் குறித்து தெரிந்து கொள்ள இது விழிப்புணர்வாகும். ஒரு சாமானிய மனிதருக்கு டிஜிட்டல் பரிமாற்றம் எந்த வகையில் செய்தால் எளிதாக இருக்கும், சாதாரண செல்போனிலா அல்லது ஸ்மார்போனிலா, ஆதார் எண் மூலமா அல்லது வங்கிக்கணக்கு மூலமாக உள்ளிட்ட சந்தேகங்களுக்கு  இந்த இலவச எண் தீர்வு சொல்லும். இந்த இலவச தொலைபேசி எண் அடுத்த வாரம் அறிமுகம் ஆகும்.'' என்றார்.

மக்களுக்கு டிஜிட்டல் பரிமாற்றத்தை ஊக்குவிக்க, மத்திய மின்னணு மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சகம், ‘டிஜிஷாலா’ எனும் தொலைக்காட்சி சேனலை நேற்றுமுன்தினம் தொடங்கியது. ‘கேஷ்லெஸ் இந்தியா’(cashlessindia) எனும் இணையதளத்தையும் தொடங்கியுள்ளது.

 

click me!