
திமாபூர், நவ. 23-
செல்லாத ரூ.500, ரூ.1000 நோட்டுகளுடன் ரூ.5.5 கோடியுடன் தனியாக ஜெட் விமானத்தில் பறந்த நபரை ராணுவத்தினரும், மத்திய தொழில் பாதுகாப்பு படையினரும் கைது செய்தனர்.
இவர் தனியாக ஜெட் விமானத்தில், ஹரியானாவில் இருந்து நாகாலாந்து நோக்கிச் சென்ற போது, திமாபூரில் ஜெட் விமானத்தை தரையிறங்க வைத்து கைது செய்தனர்.
நாட்டில் கருப்பு பணத்தையும், கள்ள நோட்டையும் ஒழிக்கும் நோக்கில் கடந்த 8-ந்தேதி பிரதமர் மோடி ரூ.500, ரூ1000 நோட்டுகளை தடை செய்து அறிவித்தார்.
அதன்பின், பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றுவதில் பெரும் பணக்காரர்களும், கருப்பு பணம் பதுக்குவோர்களும் குறுக்கு வழிகள் பலவற்றைப் பின்பற்றி பணத்தை மாற்றி வருகின்றனர்.
ஆனால், மக்கள் படும் துயரம்தான் சொல்லிமாளாது. தங்கள் சேமிப்பைக் கூட வங்கியில் இருந்து எடுக்க, நீண்ட வரிசையில் வங்கிகள், தபால் நிலையங்கள் முன் காத்திருந்து பணத்தை எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், பீகார் மாநிலம், முங்கர் மாவட்டதைத் சேர்ந்த ஒரு தொழிலதிபர் , ஹரியானா மாநிலம், சிர்சா நகரில் இருந்து தனியாக ஒரு ஜெட் விமானத்தல் அங்கிருந்து இன்று காலை புறப்பட்டார்.
நாகாலாந்து மாநிலம், திமாபூர் நகர மலைப்பகுதியில் ஜெட் விமானம் வந்த போது, எல்லைப் பாதுகாப்பு படையின் ராடாரில் சிக்கியது. அவர்கள் அந்த விமானத்தின் அலைவரிசையை இடைமறித்துக் கேட்டனர். அவர் தான் ஹரியானா மாநிலத்தில் இருந்து வருவதாகவும், திமாபூரில் தரையிறங்க அனுமதிக்க வேண்டும் என கோரியுள்ளார்.
அதற்கு உடனடியாக அனுமதித்த எல்லைபாதுகாப்பு படையினர், அவர் வந்த விமானத்தை சோதனையிட ராணுவத்தினரையும், மத்திய தொழில் பாதுகாப்பு படையினரையும் அனுப்பினர்.
திமாபூர் விமானநிலையத்தில் தரையிறங்கிய அந்தஜெட் விமானத்தில் ஓட்டிவந்தவரை மத்திய தொழில்பாதுகாப்பு படையினர் பிடித்து விசாரணை செய்ததில் பீகார் மாநிலம், முங்கர் மாவட்டதைச் சேர்ந்த ஏ.கே. சிங் என்று தெரிவித்தார்.
இதையடுத்து, ஏ.கே.சிங்கை விசாரணைக்காக மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் அழைத்துச் சென்றனர். அந்த விமானத்தை சோதனையிட்டதில், அதில் கத்தை கத்தையாக ரூ.500, ரூ1000 நோட்டுகள் இருந்தன.
இது குறித்து, மத்திய தொழில்பாதுகாப்பு படையினர் கூறுகையில், “ ஏ.கே. சிங் ஓட்டி வந்த விமானத்தை சோதனையிட்டோம் அதில் மத்தியஅரசு தடை செய்த ரூ.500, ரூ1000 நோட்டுகள் ஏராளமாக இருந்த து. இதன் மதிப்பு ஏறக்குறைய ரூ.5.5 கோடி இருக்கும் “ எனத் தெரிவித்தனர்.