ராம நவமி ஊர்வலத்தில் ஒருவர் கொலை..! தலைமறைவாக இருந்த 5 பேர் கைது

By Ajmal KhanFirst Published Apr 22, 2022, 8:43 AM IST
Highlights

மத்தியப் பிரதேச மாநிலம் கார்கோனில் ராம நவமி ஊர்வலத்தில் ஏற்பட்ட வன்முறையின் போது கொலை செய்யப்பட்ட இப்ரிஷ் கான் மரணம் தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.தலைமறைவாக உள்ள 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
 

ராம நவமி ஊர்வலத்தில் வன்முறை

மத்தியப் பிரதேசம், கார்கோன் பகுதியில், ராம நவமியையொட்டி  ஊர்வலம் நடந்தது. அப்போது இஸ்லாமியர்கள் அதிகமாக இருக்கும் பகுதியின் வழியாக ஊர்வலம் சென்றுள்ளது. அங்குள்ளவர்கள் ஊர்வலத்துக்கு எதிர்ப்பு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. சிலர் ஊர்வலத்தின்மீது கற்களை வீசியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதையொட்டி, அந்த பகுதியில் கலவரம் வெடித்ததாகவும் கூறப்படுகிறது. இந்தநிலையில் இந்த வன்முறை சம்பவத்தின்  போது சதாம் (இப்ரிஷ் கான் என்றும் அழைக்கப்படுபவர்) என்பவர் உயிரிழந்ததாக தகவல் வெளியானது. இதனையடுத்து,  ராம நவமி அன்று கர்கோன் நகரில் வெடித்த வன்முறையின் போது ஏற்பட்ட மரணம் தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் மூன்று குற்றவாளிகள் தலைமறைவாகினர்.அவர்களை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

உடல் கண்டெடுப்பு

இந்த வன்முறை சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவித்த மத்தியப் பிரதேச உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா, வன்முறை ஏற்பட்ட தினமான "ஏப்ரல் 10-ம் தேதி ஒரு உடலை மீட்ட போலீஸார், பிரேதப் பரிசோதனைக்காக இந்தூருக்கு அனுப்பி வைத்தனர். ஏப்ரல் 11-ம் தேதி பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் 302-வது பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.  "அதுவரை அந்த  உடல் யாருடையது என அடையாளம் காணப்படவில்லை. ஆனால், ஏப்ரல் 14 அன்று, சதாம் [இப்ரிஷ் கான் என்றும் அழைக்கப்படுபவர்] காணாமல் போனதாக உறவினர்கள் புகார் அளித்தனர். இதனையடுத்து ​​இந்தூரில் உள்ள அவரது குடும்பத்தினரால் உடல் அடையாளம் காணப்பட்டது," என நரோத்தம் மிஸ்ரா கூறினார்.

5பேர் கைது 3 பேர் தலைமறைவு

பின்னர் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது, அதன் பிறகு இறுதிச் சடங்கு செய்யப்பட்டது. இந்த விவகாரத்தில் விசாரணை நடந்து வருகிறது என கூறினார். இந்த சம்பவம் தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் நரோத்தம் மிஸ்ரா கூறினார். மத்திய பிரதேச மாநிலம் கர்கோனில் நடந்த மோதலில் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். வன்முறை தொடர்பாக இதுவரை 44 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், 148 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறை  தகவல் தெரிவித்துள்ளது.
 

click me!