
இந்தியாவுக்கான கனடா தூதராக ஜெய்ப்பூரைச் சேர்ந்த கல்லூரி மாணவி நேற்று பணியாற்றி பல்வேறு விவாதங்களில் கலந்து கொண்டார்.
கனடா தூதரகம் சார்பில் ‘வாழ்க்கையில் ஒருமுறை கிடைக்கும் வாய்ப்பு’ என்ற போட்டி நடத்தப்பட்டது. ‘பெண் குழந்தைகள் உரிமை ஏன் முக்கியம்? பாலின சமத்துவத்தின் மூலம் எதை சாதிக்க முடியும என்பது குறித்த தலைப்பில் போட்டி நடந்தது.
இதில் ஜெய்ப்பூரைச் சேர்ந்த கல்லூரி மாணவி மேத்தா மிஸ்ரா வெற்றி பெற்றார். இதையடுத்து, இந்தியாவுக்கான கனடா தூதராக நேற்று ஒருநாள் பணியாற்றும் வாய்ப்பை ேமத்தா மிஸ்ரா பெற்றார்.
அதுமட்டுமல்லாமல், டெல்லியில் நேற்று நடந்த சிறுமிகளின் உரிமைக்கான குழுவின் தலைவராக பொறுப்பேற்றார். மேலும், வரும் 11-ந்தேதி நடக்கும் பெண் குழந்தைகள் உரிமை நாளின் ஒருபகுதியாக பாலின சமத்துவம் குறித்து ஓட்டத்தையும் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
நாள்தோறும் கல்லூரியில் பாடப்புத்தகங்களை படித்தும், கணிதத்தை செய்து பார்த்துக்கொண்டு பொழுதை போக்கிக்கொண்டு இருந்த மேத்தாவுக்கு தூதர் பணி எந்த அளவு கடினமானது என்பதை புரிந்துகொண்டார்.
தனது ஒருநாள் தூதர் பணி குறித்து மேத்தா மிஸ்ரா கூறுகையில், “ தூதர் பணி என்பது கடினமானது, அதேசமயம், நேர்மையாக பணியாற்றக்கூடியது. எனக்கு கிடைத்த இந்த ஒருநாள் வாய்ப்பை, தென்ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா, மெக்சிக்கோ ஆகிய நாடுகளின் தூதர்களுடன் ஆலோசிக்கும் வாய்ப்பைப் பெற்றேன். எனக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது மிகவும் மகிழ்ச்சியாகும்.
மேலும், பெண் குழந்தைகள் உரிமை தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த, நேற்று நடத்தப்பட்ட பல பொதுநிகழ்ச்சிகளில் மேத்தா மிஸ்ரா கலந்துகொண்டார். மேலும், பல்வேறு வெளிநாட்டு தூதரங்களின் அதிகாரிகள், ஊழியர்கள் பங்கேற்ற ஓட்டத்திலும் மேத்தா கலந்துகொண்டார்.