
கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் விருந்துக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் ரூ. 10 லட்சம் செலவில் வெள்ளித் தட்டுகள் வாங்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பா.ஜனதா கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
மாவட்ட நிர்வாக விருந்து
கர்நாடக மாநிலத்தில் உள்ள கலாபுர்கி மாவட்டத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாவட்ட நிர்வாகம் சார்பில் ‘சதானே சம்பிரம்மா’ நிகழ்ச்சி நடந்தது.
இதில் முதல்வர் சித்தராமையா, அமைச்சர்கள் எம்.பி. பாட்டீல், சரண்பிரகாஷ் பாட்டீல், பிரியங்க் கார்கே, முன்னாள் அமைச்சர்கள் சரணாபசப்பா தர்சனாபூர், ஆலாந்து எம்.எல்.ஏ., முக்கிய வி.ஐ.பி.க்கள் பலர் கலந்து கொண்டார்.
ரூ.10 லட்சம்
இந்த நிகழ்ச்சியின் முடிவில் அனைவருக்கும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் விருந்து அளிக்கப்பட்டது. இந்த விருந்தாக்காக ஒவ்வொருவரும் சாப்பிடுவதற்காக ஒரு வெள்ளித் தட்டு, டம்ளர், கிண்ணம் வாங்கப்பட்டது, ஒட்டுமொத்தமாக இதற்காக ரூ.10 லட்சம் செலவு செய்யப்பட்டது.
மக்களின் பணத்தை இப்படி மாவட்ட நிர்வாகம் செலவு செய்ததை எதிர்க்கட்சியான, பா.ஜனதா கட்சி கடுமையாக விமர்சனம் செய்துள்ளது.
வீண் செலவு
இது குறித்து, மாவட்ட பா.ஜனதா தலைவர் தெல்கூர் கூறுகையில், “ மாவட்ட நிர்வாகம் செலவில் முதல்வருக்கு விருந்து அளித்ததில் தவறில்லை. ஆனால், கேள்வி என்பது, ஒருவேளை விருந்துக்காக, ரூ.10 லட்சம் செலவில் வெள்ளித்தட்டுகள், டம்ளர் வாங்க வேண்டுமா?, மக்களின் பணத்தை இப்படி செலவு செய்வதா என்பதுதான்?. சித்தராமையா மிகவும் எளிமையானவர், நேர்மையானவர் என்று காங்கிரஸார் கூறுகிறார்கள். ஆனால், அவரின் ஒருவேளை சாப்பாட்டுக்காக மக்கள் பணம் இப்படி வீணாக செய்யப்பட்டுள்ளது?’’ என விமர்சித்துள்ளார்.