Omicron India நாடு முழுவதும் 1000-ஐ நெருங்கிய ஒமைக்ரான் பாதிப்பு.. தொற்று எண்ணிக்கை இரட்டிப்பாவதால் அதிர்ச்சி!

By manimegalai aFirst Published Dec 30, 2021, 10:15 AM IST
Highlights

நாட்டிலேயே அதிகபட்சமாக டெல்லியில் 263 பேருக்கும், மகாராஷ்டிராவில் 252 பேருக்கும் ஒமைக்ரான் வகை கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

நாட்டிலேயே அதிகபட்சமாக டெல்லியில் 263 பேருக்கும், மகாராஷ்டிராவில் 252 பேருக்கும் ஒமைக்ரான் வகை கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

உலகின் பல்வேறு நாடுகளை அச்சுறுத்தி வரும் ஒமைக்ரான் வகை கொரோனா தொற்று, இந்தியாவையும் மிரட்டி வருகிறது. இந்தியாவில் முதல் ஒமைக்ரான் வகை கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நாள் முதல் சர்வேதச நாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்கு விமான நிலையங்களில் தீவிர பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது. மேலும் வெளிநாட்டு பயணிகள் உடன் தொடர்பில் இருந்தவர்களையும் மத்திய, மாநில அரசுகள் கண்காணித்து அவர்களது சளி மாதிரிகளை பரிசோதனைக்கு அனுப்பி ஒமைக்ரான் தொற்று கண்டுபிடிக்கப்படுகிறது.

இந்தியாவில் இதுவரை 23 மாநிலங்களில் ஒமைக்ரான் வகை கொரோனா பரவியிருக்கிறது. தலைநகர் டெல்லி, வர்த்தக தலைநகரமான மகாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் ஒமைக்ரான் வகை பரவல் அதிக எண்ணிக்கையில் கண்டறியப்பட்டுள்ளது. டெல்லி, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் ஒவ்வொரு நாளு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே செல்கிறது. நாட்டிலேயே அதிகமாக டெல்லியில் கொரோனா தொற்று அதிகரிப்பதால், அங்கு கூடுதல் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு உள்ளன. அதன் காரணமாக பள்ளி, கல்லூரிகள், திரையரங்குகள், உடற்பயிற்சி கூடங்கள் மூடப்பட்டுள்ளன. பேருந்து, ரயில், மெட்ரோ ரயில்களில் 50 சதவீத பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். இதனால் ரயில் மற்றும் பேருந்து நிலையங்களில் மக்கள் நீண்ட வரிசையில் காத்து கிடக்கின்றனர்.

புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஒமைக்ரான் தொற்று சமூகப் பரவலாக மாறக்கூடும் என்ற அச்சத்தால் தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடைவிதித்துள்ளது. டெல்லி, மகாராஷ்டிரா, உத்தராகண்ட், கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்த இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாளும் மாநில அரசுகள் கட்டுப்பாடுகளை அதிகரித்தாலும், ஒமைக்ரான் பரவலின் வேகம் மட்டும் குறையவில்லை.

இந்தநிலையில் நாடு முழுவதும் நேற்று ஒரே நாளில் 180 பேருக்கு ஒமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டு உள்ளதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்தூள்ளது. இதன் மூலம் ஒட்டுமொத்த ஒமைக்ரான் பாதிப்பு 961 ஆக உயர்ந்துள்ளது. நாட்டிலேயே அதிகபட்சமாக தலைநகர் டெல்லில் 263 பேருக்கு இதுவரை ஒமைக்ரான் தொறு உறுதியாகி இருக்கிறது. மகாராஷ்டிராவில் 252, குஜராத் 97, ராஜஸ்தான் 69, கேரளா 65, தெலங்கானா 62, தமிழ்நாடு 45, கர்நாடகா 34, ஆந்திரா 16, ஹரியானா 12, மேற்கு வங்கம் 11, மத்தியப் பிரதேசம் மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்களில் தலா ஒன்பது பேரும் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேபோல் உத்தரகண்ட் 4, சண்டிகர் மற்றும் ஜம்மு-காஷ்மீர் தலா 3, உத்தரபிரதேசம் 2, கோவா, ஹிமாச்சல், லடாக் மற்றும் மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் தலா ஒருவருக்கும் ஒமைக்ரான் பாதிப்பு உறுதியாகி இருக்கிறது. புதிதாக பஞ்சாப்பிலும் ஒருவருக்கு ஒமைக்ரான் உறுதியானதால் ஒமைக்ரான் தொற்று பரவிய மாநிலங்களின் எண்ணிக்கை 22 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை தொற்று பாதித்த 961 பேரில், 320 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் நேற்றைய பாதிப்பு 781 ஆக இருந்த நிலையில் இன்று ஆயிரத்தை நெருங்கி இருப்பது மக்களிடையே பீதியை ஏற்படுத்தி இருக்கிறது. இதேபோல், கடந்த 24 மணிநேரத்தில் 13,154 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது என மத்திய சுகாதார துறை தெரிவித்துள்ளது. கொரோனாவுக்கு 268 பேர் உயிரிழந்து உள்ளனர்.  இதனால் மொத்த உயிரிழப்பு 4,80,860 ஆக உயர்ந்து உள்ளது. கடந்த சில நாட்களாக தினசரி கொரோனா பாதிப்பு குறைந்திருந்த நிலையில் மீண்டும் பத்தாயிரத்தை தாண்டியிருப்பது மருத்துவ பணியாளர்களை அச்சத்தில் ஆழ்த்தி இருக்கிறது.

click me!