Dam Safety Act பறிம்போகும் மாநில உரிமைகள்! மத்திய அரசின் அணை பாதுகாப்புச் சட்டம் நாளை முதல் அமலுக்கு வருகிறது!

By manimegalai aFirst Published Dec 29, 2021, 9:07 PM IST
Highlights

அணை பாதுகாப்புச் சட்டத்தால் மாநிலங்களுக்கு இடையே நிலவும் நதிநீர் பங்கீட்டு பிரச்சினைகள் தீர்க்கப்படும் என்று மத்திய அரசு கூறியுள்ளது.

அணை பாதுகாப்புச் சட்டத்தால் மாநிலங்களுக்கு இடையே நிலவும் நதிநீர் பங்கீட்டு பிரச்சினைகள் தீர்க்கப்படும் என்று மத்திய அரசு கூறியுள்ளது.

உலகிலேயே சீனா, அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இந்தியாவில் தான் அதிக எண்ணிக்கையிலான அணைகள் கட்டப்பட்டுள்ளன. இந்தியாவில் ஐந்தாயிரத்திற்கும் அதிகமான பெரிய அணைகளும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறிய அணைகளும் உள்ளன. இவற்றில் பெரும்பாலான அணைகள் மாநில அரசுகளால் கட்டப்பட்டவையாகும். நாடு முழுவதும் உள்ள பெரும்பாலான அணைகளின் கட்டுப்பாடு மாநில அரசுகளிடமே இருந்து வருகிறது. அதனை பறிக்கும் விதமாக நாடளுமன்றத்தில் மத்திய அரசால் நிறைவேற்றப்பட்ட அணை பாதுகாப்பு மசோதா, குடியரசு தலைவரின் ஒப்புதல் பெற்று சட்டமாகியுள்ளது. இந்தச் சட்டம் நாளை முதல் அமலுக்கு வருவதாகவும் அரசிதழில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Amid tensions between several states over dams and interstate rivers, Centre notifies Dam Safety Act to come into force from December 30, 2021. pic.twitter.com/lY3REr69VW

— Arvind Gunasekar (@arvindgunasekar)

அணை பாதுகாப்பு மசோதா கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்னர் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் கொண்டுவரப்பட்டது. ஆனால் எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்ததால் இது கிடப்பில் போடப்பட்டது. மோடி அரசு அமைந்த பின்னர், கடந்த 2019, ஜூலை 29-ம் தேதி, மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், அணைப் பாதுகாப்பு மசோதாவை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தினார். அப்போதே, தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட மாநிலங்களின் எம்.பி-க்கள் அதை கடுமையாக எதிர்த்தனர். இருப்பினும், பா.ஜ.க-வின் அறுதிப் பெரும்பான்மையால், 2019, ஆகஸ்ட் 2-ம் தேதி அணைப் பாதுகாப்பு மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. அதன் பிறகு, இரண்டாண்டுகள் கழித்து, தற்போது 2021, டிசம்பர் 2-ம் தேதி மாநிலங்களவையிலும் பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் நிறைவேற்றப்பட்டு, குடியரசு தலைவரின் ஒப்புதலோடு சட்டமாகி இருக்கிறது.

நாடு முழுவதும் உள்ள அணைகளை பாதுகாக்க இந்த சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளதாக மத்திய அரசு கூறினாலும், இது கூட்டாச்சி தத்துவத்திற்கு எதிரானது, மாநில அரசுகளின் உரிமைகளை பறிக்கும் செயல் என்பது எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டாகும். அணைப் பாதுகாப்பில் ஏற்பட்ட குறைபாடுகள் காரணமாக, இந்தியாவில் 1979-ம் ஆண்டு முதல் தற்போதுவரை சிறியதும் பெரியதுமாக 42 அணை உடைப்புச் சம்பவங்கள் நிகழ்ந்திருக்கின்றன. 92 சதவீத அணைகள், இரு மாநிலங்களுக்கிடையில் ஓடும் ஆறுகளின்மீது கட்டப்பட்டிருப்பதால், மாநிலங்களுக்கிடையே நதிநீர்ப் பங்கீட்டு பிரச்னைகளும் ஏற்படுகின்றன. எனவே, இவற்றைத் தவிர்ப்பதற்காக இந்தியாவில் உள்ள ஒட்டுமொத்த அணைகளையும் ஒரே குடையின்கீழ் பாதுகாப்பதற்காக, அணைப் பாதுகாப்புச் சட்டத்தைக் கொண்டுவருகிறோம். இதனால் பழைமையான அணைகள் பாதுகாக்கப்படுவதோடு, மாநிலங்களுக்கிடையேயான பிரச்னைகளும் தீர்த்துவைக்கப்படும் என்று மத்திய அரசு கூறியுள்ளது.

ஆனால், புதிய சட்டத்தால், கேரளாவில் உள்ள முல்லைப்பெரியாறு, பரம்பிக்குளம், துணக்கடவு, பெருவாரிப்பள்ளம் ஆகிய தமிழ்நாட்டுக்குச் சொந்தமான நான்கு அணைகள் மீதான தமிழ்நாடு அரசின் உரிமைகள் பறிபோகும் என்று திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் குற்றஞ்சாட்டி உள்ளன. இந்திய அரசியலமைப்புச் சட்டம் அட்டவணை 7, பிரிவு 17-ல் குறிப்பிட்டுள்ளபடி, நீர், நீர்ப்பாசனம், கால்வாய், வடிகால், அணைகள், நீர் சேமிப்பு மற்றும் நீர் மின்சாரம் போன்ற நீர் சார்ந்த உரிமைகள் அனைத்தும் மாநிலப் பட்டியல் அதிகாரத்தின்கீழ் வருகின்றன. ஆனால், தற்போது அமல்படுத்தப்படும் புதிய சட்டத்தால் இவை அனைத்தும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செல்லும் நிலை உருவாகியுள்ளது. தண்ணீர் மாநில பட்டியலில் வரும்போது அணைகளின் உரிமைகளை மட்டும் மத்திய அரசு எடுத்துக்கொள்வது எந்தவகை நியாயம் என்பதே எதிர்க்கட்சிகளின் கேள்வியாக உள்ளது.

click me!