Omicron : சமூக பரவலாக மாறியதா ஒமைக்ரான்? புதுச்சேரியில் உச்சகட்ட பரபரப்பு!!

By Narendran SFirst Published Dec 29, 2021, 8:31 PM IST
Highlights

புதுச்சேரியில் வெளிநாடு செல்லாத 2 பேருக்கு ஒமைக்ரான் தொற்று ஏற்பட்டதை அடுத்து மேலும் பலருக்கு ஒமைக்ரான் தொற்று இருப்பதற்கான வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதற்காக புதுவையில் ஒமைக்ரான் வார்டு அமைக்கப்பட்டு 180 படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

புதுச்சேரியில் வெளிநாடு செல்லாத 2 பேருக்கு ஒமைக்ரான் தொற்று ஏற்பட்டதை அடுத்து மேலும் பலருக்கு ஒமைக்ரான் தொற்று இருப்பதற்கான வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதற்காக புதுவையில் ஒமைக்ரான் வார்டு அமைக்கப்பட்டு 180 படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் கொரோனா 2 ஆம் அலையில் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டன. இதனால் பல மாதங்களாக ஊரடங்கு அமலில் இருந்த நிலையில் தற்போது இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. இதனிடையே புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கான அனுமதியை அம்மாநில அரசு வழங்கியதை அடுத்து ஓட்டல்கள், விடுதிகளில் அறைகள் முன்பதிவு முடிவடைந்தன. துறைமுகம், கடற்கரை பகுதிகளில் சிறப்பு கலைநிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இதனிடையே புதுச்சேரியில் கல்லூரி மாணவி உள்பட 2 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டது. டிசம்பர் முதல் வாரத்தில் அனுப்பிய மாதிரிகளின் முடிவு நேற்று கிடைத்த நிலையில் ஒமைக்ரான் கண்டறியப்பட்டது.

இதை உறுதிபடுத்திய மாநில சுகாதாரத்துறை இயக்குனர் ஸ்ரீராமுலு, புதுச்சேரியில் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்ற 90 பேரின் மாதிரிகள் ஒமைக்ரான் பரிசோதனைக்காக இம்மாதம் முதல் வாரத்தில் இருந்து பெங்களூரு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதன் முடிவுகள் தற்போது கிடைத்ததில் 2 பேருக்கு ஒமைக்ரான் உறுதியாகி உள்ளதாக தெரிவித்தார். மேலும் வெளிநாடு செல்லாத இவர்கள் 2 பேருக்கும் ஒமைக்ரான் தொற்று எப்படி ஏற்பட்டது என்பது குறித்து அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களிடம் சுகாதாரத்துறை விசாரித்து வருகிறது. இன்னும் பலரின் முடிவுகள் வர வேண்டி உள்ளது. புதுச்சேரியில் முதன்முதலாக 2 பேருக்கு ஒமைக்ரான் உறுதியாகியுள்ள நிலையில் மேலும் பலருக்கு இந்த பாதிப்பு இருப்பதற்கான வாய்ப்புள்ளதாக தெரிவித்தார். இதற்கிடையே ஒமைக்ரான் வைரஸ் தொற்று பாதிப்பு அறிகுறி உள்ளவர்களுக்கு உடல்வலி, உடல் சோர்வு, பலவீனம் போன்ற பிரச்னைகள் இருப்பதாகவும், இதுபோன்ற அறிகுறிகள் இருந்தால் உடனே பரிசோதனை செய்ய வேண்டுமெனவும் பொதுமக்களை மாநில சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது. இதற்காக புதுவையில் ஒமைக்ரான் வார்டு அமைக்கப்பட்டு 180 படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் 600 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. மருந்து, மாத்திரைகள், ஆக்சிஜன் தேவையான அளவுக்கு இருப்பு உள்ளது.

இருப்பினும் பொதுமக்கள் தேவையின்றி வெளியே செல்வதை தவிர்க்க வேண்டுமெனவும், கொரோனா தடுப்பு வழிகாட்டி நெறிமுறைகளை தவறாமல் பின்பற்ற வேண்டுமெனவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் வலியுறுத்தி வருகின்றனர். இதுமட்டுமின்றி புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு புதுச்சேரி தயாராகி வரும் நிலையில் இதற்கு தடைவிதிக்க பரிந்துரை செய்வது குறித்து மருத்துவத் துறை வல்லுனர்களுடன் மாநில சுகாதாரத்துறை உயர்அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர். விரைவில் இதுதொடர்பாக முதல்வர் ரங்கசாமியிடம் கோரிக்கை வைக்க உள்ளனர். முன்னதாக புதுச்சேரியில் ஒமைக்ரான் வைரஸ் தொற்று நுழைந்தது தொடர்பாக முதல்வர் ரங்கசாமியை துறை இயக்குனரான ஸ்ரீராமுலு சந்தித்து விளக்கமளித்தார். அப்போது ஒமைக்ரான் சிக்சைக்கு தேவையான ஏற்பாடுகள் குறித்து இயக்குனருக்கு, முதல்வர் ரங்கசாமி ஆலோசனை வழங்கினார். அதன்பேரில் அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை மாநில சுகாதாரத்துறை எடுத்து வருகிறது. இதனிடையே புதுச்சேரியில் மேலும் பலருக்கு ஒமைக்ரான் தொற்று பரவியிருக்கலாம் என்பதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். 

click me!