
பழைய 500 ரூபாயை பயன்படுத்தும் காலக்கெடுவை மத்திய அரசு குறைத்து மத்தியஅரசு நேற்று அதிரடியாக அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பின்படி, அரசு எரிபொருள் நிலையங்களில் பெட்ரோல், டீசல் வாங்குவது, கியாஸ் நிரப்புவது, விமான நிலையங்களில் டிக்கெட் பெறுவது, தேசிய நெடுஞ் சாலைகளில் டோல்கேட் கட்டணம் ஆகியவற்றில் இன்று நள்ளிரவுக்கு பின், பழைய 500 நோட்டுகளை பயன்படுத்த முடியாது என அரசு தெரிவித்துள்ளது.
மோடி அறிவிப்பு
500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு கடந்த 8-ந் தேதி அறிவித்தது. திடீரென வெளியிட்ட மத்திய அரசின் இந்த அறிவிப்பால், தேசிய நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. ‘டோல்கேட்’களில் ரூ. 500 மற்றும் ரூ. 1000 நோட்டுகளை வாங்க மறுத்தனர். இதனால், நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்துக் கிடந்தன.
ரத்து
இதனால் மக்களின் நலனைக் கருத்தில் கொண்டும், நாட்டில் போக்குவரத்து எந்த இடையூறும் இல்லாமல் நடப்பதற்காக டோல்கேட் கட்டணத்தை மத்திய அரசு ரத்து செய்தது.முதல் நவம்பர் 11ம் தேதி வரையும், பின்னர் நவம்பர் 14ம் தேதி வரையும் ரத்து நீடிக்கப்பட்டது. பணப்புழக்கம் சுமூகமாகாத காரணத்தால் இந்த கட்டண ரத்து 18, 24ம் தேதி வரையிலும் கடைசியாக டிசம்பர் 2-ந்தேதி வரையிலும் நீட்டித்தது.
புதிய அறிவிப்பு
அதன்பின் டிசம்பர் 3-ந் தேதியில் இருந்து, 15வரை பழைய 500 ரூபாய் நோட்டுகள் அனைத்து ‘டோல்கேட்’களிலும் செல்லும் என்றும் மத்திய அரசு தெரிவித்திருந்தது. இந்நிலையில், டோல்கேட்களிலும்பயன்படுத்த முடியாது என்று அறிவித்துள்ளது. மேலும், டிசம்பர் 3-ந்தேதியில் இருந்து, தேசிய நெடுஞ்சாலைகளில் டோல்கேட் கட்டணத்துக்கு ரூ.100, புதிய ரூ.500, ரூ.2 ஆயிரம் நோட்டுகள் மட்டுமே கட்டணம் செலுத்த பயன்படுத்தலாம் என அரசு தெரிவித்துள்ளது.
அதேசமயம், மக்கள் பயன்படுத்தும் சேவைகளான மருத்துவமனைகள், மத்திய,மாநில அரசு போக்குவரத்துகள், ரெயில்வே துறை, உள்ளிட்டவற்றில் டிசம்பர் 15-ந்தேதி வரை பழைய 500 ரூபாயை பயன்படுத்திக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெட்ரோல் பங்குகள், தேசிய நெடுஞ்சாலைகளில் பழைய ரூபாய் நோட்டுகளை பயன்படுத்த அனுமதித்தால் அது கருப்புபணத்தை மாற்ற துணைபோகும் என்பதால், அந்த வசதி நீக்கப்பட்டதாக மத்தியஅரசுவட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மக்களை குழப்பும் அறிவிப்பு...
தேசிய நெடுஞ்சாலைகளில் டோல்கேட் கட்டணம் செலுத்த டிசம்பர் 2-ந்தேதி நள்ளிரவு முதல் 15-ந்தேதி நள்ளிரவு வரை ரூ.200-க்கு மேல் கட்டண் இருந்தால், பழைய 500 ரூபாயை பயன்படுத்தலாம் என மத்திய அரசு சார்பில் நேற்று முன் தினம் அனைத்து நாளேடுகளிலும் ஒருபக்கம் அறிவிப்பு விளம்பரம் தரப்பட்டு இருந்தது. ஆனால், திடீரென தனது அறிவிப்பில் இருந்து பின்வாங்கிய மத்திய அரசு, இன்று நள்ளிரவோடு டோல்கேட்களில் பழைய ரூ.500 நோட்டுகளை பயன்படுத்த முடியாது என இரு வேறு அறிவிப்புகளை வெளியிட்டு மக்களை குழப்பியுள்ளது. இதனால், தெளிவான அறிவிப்பு கிடைக்காமல் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர்.