
இந்தியா - ஜப்பான் இடையே அணுசக்தி தொடர்பான முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
அரசு முறை பயணமாக ஜப்பான் சென்றுள்ள பிரதமர் திரு. நரேந்திர மோடி, அந்நாட்டு அதிபர் ஷின்ஷே அபேவை, தலைநகர் டோக்கியோவில் சந்தித்து பேசினார்.
அப்போது இரு தலைவர்களின் முன்னிலையில், இரு நாடுகளின் வளர்ச்சி தொடர்பான 8 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. பின்னர், பிரதமரும், ஷின்ஷே அபேவும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய பிரதமர் திரு. நரேந்திர மோடி, இந்தியா - ஜப்பான் இடையே ஏற்பட்டுள்ள அணுசக்தி ஒப்பந்தம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது என தெரிவித்தார்.
இந்தியா - ஜப்பான் இடையேயான ஒப்பந்தங்கள் இருநாட்டு வளர்ச்சிக்கு மேலும் உதவும் என்றும் பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்தார். இதுதொடர்பாக வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், இனி வரும் காலங்களில் இந்தியா - ஜப்பான் இடையே, அணுசக்தி, வேளாண்மை, கலாச்சாரம், அடிப்படை கட்டமைப்பு, எரிசக்தி மேம்பாடு உள்ளிட்டவை முக்கிய இடம் பெறும் எனவும் தெரிவித்துள்ளது.