
மனிதர்களுக்கு ஆதார் இருப்பதைப் போன்று, பசு மாடுகளுக்கும், சிறப்பு அடையாள எண் உருவாக்க திட்டமிட்டுள்ளதாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
இந்தியா-வங்காளதேச எல்லையில் பசுக் கடத்தலைத் தடுத்தல் மற்றும் பசு பாதுகாப்பு ஆகியவை குறித்து தாக்கல் செய்த அறிக்கையில் இந்த தகவலை அரசு தெரிவித்துள்ளது.
பசு அரசியல்
பசுக்களை வைத்து பல ஆண்டுகளாக அரசியல் நடந்து வருகிறது. அதிலும் பா.ஜனதா பல்வேறு மாநிலங்களில் ஆட்சிக்கு வந்தபின், பசு கொலை, கடத்தலும் தடை செய்யப்பட்டு தண்டனைக்குரிய குற்றமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர், உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் சமீப காலங்களாக பசுக்களை கொண்டு சென்றவர்கள் மீது பசுப் பாதுகாவலர்கள் தாக்குதல் நடத்தி உள்ளனர்.
அறிக்கை
இந்நிலையில், இந்தியா-வங்காளதேச எல்லையில் பசுக் கடத்தலைத் தடுத்தல் மற்றும் பசு பாதுகாப்பு ஆகியவை குறித்து உச்ச நீதிமன்றத்தில் மத்தியஅரசு சார்பில் நேற்று அறிக்கை ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது-
சிறப்பு குழு
நாட்டில் பசுக்களைப் பாதுகாக்கவும், கடத்தலில் இருந்து காக்கவும் மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் இணைச் செயலாலர் அந்தஸ்தில் ஒரு குழு அமைத்து ஆய்வு செய்யப்பட்டது. அந்த குழு பல்வேறு பரிந்துரைகளை அளித்துள்ளது.
அடையாள எண்
அதில் மனிதர்களுக்கு ஆதார் இருப்பதைப் போன்று பசுக்களுக்கும் பிரத்யேக அடையாள எண் வழங்க திட்டமிட்டுள்ளோம். ஒவ்வொரு பசுக்களின் இனம், அதனின் வாரிசு, ஆகியவை நாடுமுழுவதும் எடுக்கப்பட்டு அதற்கு பிரத்யேக எண் வழங்கப்படும்.
பாதுகாப்பு மையம்
ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தபட்சம் 500 பசு மாடுகளை பாதுகாக்கும் வகையில் சிறப்பு பராமரிப்பு மையம் அமைக்கப்படும்.
பால் தரும் காலம் முடிந்தபின், இருக்கும் பசுமாடுகளை பராமரிக்க முடியாமல் இருக்கும் விவசாயிகளிடம் இருந்து மாடுகள் வாங்கப்பட்டு, இங்கு பராமரிக்கப்படும். இந்த வயதான மாடுகளை பராமரிக்கும் பொறுப்பு மாநில அரசுகளைச் சாரும்.
12 இலக்க எண்
ஒவ்வொரு பசு மாட்டுக்கும் 12 இலக்க எண் கொண்ட சிறப்பு எண் வழங்கப்படும். ஒரு சிறிய பிளாஸ்டிக் பொத்தானில் இந்த எண் அச்சடிக்கப்பட்டு அது பசுமாட்டின் காதின் உள்புறத்தில் பொறுத்தப்படும். 50 ஆயிரம் பொத்தான்களை உருவாக்குவதற்காக ஏறக்குறைய ஒரு லட்சம் தொழில்நுட்ப வல்லுநர்கள் பணி அமர்த்த உள்ளனர்.
கண்காணிப்பு
பசு மாடுகளுக்கு வழங்கப்படும் இந்த பிரத்யேக எண் மூலம் அந்த மாட்டுக்கு சுகாதார கார்டு வழங்கப்படும். மேலும், அந்த எண்ணில் மாட்டின் முதலாளி பெயர், முகவரி, மாட்டுக்கு கொடுக்கப்பட்ட மருத்துவ முறைகள், தடுப்பூசிகள், சினைப்பருவம் உள்ளிட்ட விசயங்களை பதிவு செய்ய முடியும்.
வருவாய் உயரும்
இந்த திட்டம் மூலம் பசுக்களுக்கு குறிப்பிட்ட நேரத்தில் தடுப்பூசி போட முடியும், சிறந்த கன்றுகளை ஈனச்செய்து, பால் உற்பத்தியை பெருக்க முடியும். இதன் மூலம் 2022ம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருவாய் இரு மடங்காக உயரும்.
இந்த திட்டத்தில் பசுக்களுக்கு கழுத்துப்பட்டை, சுகாதார அட்டை, காதில் பொருத்தும் பொத்தான்கள் உள்ளிட்டவற்றை வாங்க ரூ.148 கோடிஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.